நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கு: ஜனவரி 5-ம் தேதிக்குத் தீர்ப்பு ஒத்திவைப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் ஜனவரி 5-ம் தேதிக்குத் தீர்ப்பை ஒத்திவைத்து முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் வீடு, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது. இவர் கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, இணை அமைச்சராகப் பதவி வகித்தார். அதே ஆண்டு ஜனவரி 29-ம் தேதி அவரது வீட்டில், காருக்கு அடியில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பு, தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த திருச்செல்வம், தங்கராசு, தமிழரசன், காளிலிங்கம், ஜான் மார்ட்டின், கார்த்திக் உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து விசாரித்தது.

இவ்வழக்கு விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் 85க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, இருதரப்பு வாதமும் முடிவடைந்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பேரும் இன்று நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE