டொம்மிங்குப்பத்தில் உள்ள 216 குடும்பங்களுக்குப் புதிய குடியிருப்புகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒதுக்கீட்டு ஆணை வழங்கினார்

டொம்மிங்குப்பத்தில் வசித்த 216 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளில் குடியேறுவதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பட்டினப்பாக்கத்தில் 400 சதுர அடியில் தரைத்தளத்துடன் 4 அடுக்குமாடிக் குடியிருப்புகள், 11 தொகுப்புகளாக மொத்தம் 1,188 குடியிருப்புகள் ரூ.152 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. டொம்மிங்குப்பம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1983-ல் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் பழுதடைந்துள்ளதால், அதில் வசித்த 216 குடும்பங்களுக்குப் பட்டினப்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.27.62 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாற்றுக் குடியிருப்புகளில் குடியேறுவதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் இன்று அமைச்சர் தா.மோ.அன்பரசனால் வழங்கப்பட்டன.

இக்குடியிருப்புகளில் அடிப்படைத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி மற்றும் மழை நீர் சேகரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் மின்தூக்கி (LIFT) மற்றும் மின்னாக்கி (GENERATOR) வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த் ராவ், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மேற்பார்வைப் பொறியாளர் செல்வமணி, செயற்பொறியாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்."

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE