18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: மதுரை மாநகராட்சி ஆணையர் 

மதுரை மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களின் கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரின் வசதிக்காக மாநகராட்சியின் சார்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அந்தந்தக் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இம்முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

அண்டை மாநிலங்களில் இருந்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட கல்லூரியில் மாநகராட்சியின் சார்பில் கரோனா பரிசோதனை முகாம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இது தவிர கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்த விரும்பினால் மாநகராட்சித் தகவல் மையத்தை 94437 52211 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்’’ என்று ஆணையர் கே.பி.கார்த்திகேயன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE