13 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் அரங்கில் ஒலித்த இந்திய தேசிய கீதம்

By செய்திப்பிரிவு

13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் அரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலித்துள்ளது. அந்தப் பெருமையைத் தேடித் தந்துள்ளார் நீரஜ் சோப்ரா.

பொதுவாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் எந்த நாடு தங்கப் பதக்கம் வெல்கிறதோ, அந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். அப்போது தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற நாடுகளின் தேசியக் கொடி ஏற்றப்படும். அந்த வகையில், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் இன்று ஒலிம்பிக் அரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது.

கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை பெற்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றவர்களில் முதலாம் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அப்போது, ஒலிம்பிக் அரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதன் பின்னர் 13 ஆண்டுகள் கடந்து இன்று இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 4,744 நாட்களுக்குப் பிறகு ஒலிம்பிக் அரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலித்துள்ளது.

இந்தியாவுக்கான சிறந்த நாள்:

ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் இன்றைய நாள் இந்தியாவுக்கான சிறந்த நாள் என்றே சொல்ல வேண்டும். முதலில், ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடை பிரிவுப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

அவரைத் தொடர்ந்து ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.

இன்றையப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் முயற்சியில் 87.03 மீட்டர் தூரத்துக்கும், இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரமும், மூன்றாவது முயற்சியில் 76.79 மீட்டர் தூரமும் ஈட்டியை பாயவிட்டார். நான்காவது மற்றும் ஐந்தாவது முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் கூட அவர் இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE