நீரஜ் சோப்ரா சாதனை ஈடு இணையற்றது: பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ள ஈட்டி எரியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள். ஒலிம்பிக் தடகள போட்டிகளில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த அவரது சாதனை ஈடு இணையற்றது!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை தங்கம் கிடைக்கவில்லை என்ற குறையை நீரஜ் சோப்ரா போக்கியுள்ளார். அவரது சாதனைப் பயணம் தொடரட்டும். ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்கவேட்டை நீடிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் 32வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் இன்றைய நாள் இந்தியாவுக்கான சிறந்த நாள் என்றே சொல்ல வேண்டும். முதலில், ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடை பிரிவுப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

தற்போது, ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. ஹரியாணா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா மீது ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தது

அந்த நம்பிக்கையை மெய்ப்பித்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில் முதல் முயற்சியில் 87.03 மீட்டர் தூரத்துக்கும், இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரமும், மூன்றாவது முயற்சியில் 76.79 மீட்டர் தூரமும் ஈட்டியை பாயவிட்டார். நான்காவது முயற்சி தோல்வியில் முடிந்தாலும் கூட அவர் இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE