கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு: நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முன் இந்து முன்னணி தர்ணா

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்து கோயில்களில் மட்டும், திட்டமிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாகக் கூறி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், ஆடி மாதத்தில் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் செய்வதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும் இந்து முன்னணியினர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் , பாபநாசம் மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்களில் ஆடி அமாவாசை மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் தர்பணம் கொடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் அதன் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் ஏராளணானோர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பியபடி திடீரென ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க 5 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வி.பி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் மற்ற மதத்தினர் வழக்கம்போல் திருவிழாக்களை நடத்துகின்றனர். ஆனால் இந்து கோயில்களில் மட்டும் பக்தர்கள் வழிபாடு நடத்த அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர்.

ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் ஆண்டுதோறும் ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள். அதை நடத்த மாவட்ட நிர்வாகம் தற்போது தடைவிதித்துள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் தர்ப்பணம் கொடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE