1000 கிலோ காய்கறிகள், மீன்கள், இனிப்புகள்; வண்டி வண்டியாக சீர் வரிசைகளை ஆந்திரத்திலிருந்து மருமகனுக்கு அனுப்பிய மாமனார்

புதுச்சேரி ஏனாமில் ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள் என, சீர் கொடுத்து மருமகனை மாமனார் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

தமிழர்கள் ஆடி மாதத்தில் சீர் கொடுத்துக் கொண்டாடுவதைப் போல் தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான (ஜூன் / ஜூலை மாதங்களில்), 'பொனாலு' என்கிற ஆஷாதம் பாரம்பரிய நாட்டுப்புற விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திரம் அருகில் உள்ளது. அங்கு ஆஷாதம் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஏனாமைச் சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ஆந்திரம் ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பத்துலா பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர்களைக் கொடுத்து அசத்தியுள்ளார்.

தனது மகள் பிரத்யுஷாவைக் கடந்த மாதம் திருமணம் செய்த மருமகன் அன்புடன் கவனித்துக் கொள்வதால் மகிழ்ச்சி அடைந்து மரபுவழி சீர்வரிசையை மனதார அள்ளித் தந்துள்ளார்.

சீர்வரிசையாக அனுப்பப்பட்ட பண்டங்கள்.

ஆயிரம் கிலோ மீன்கள், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள், 250 கிலோ மளிகைப் பொருட்கள், 250 வகை ஊறுகாய் ஆகியவற்றை அனுப்பியுள்ளார்.

சீர்வரிசையாக அனுப்பப்பட்ட ஆடுகள்.

சீர்வரிசைப் பொருட்கள் அனைத்தையும் வண்டி வண்டியாக மருமகன் வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனை ஏனாம் உள்ளூர்வாசிகள் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE