திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று (ஜூலை 19) நடைபெற்று வருகிறது.

திருநள்ளாற்றில் புகழ்பெற்ற பிரணாம்பிகை அம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. நாள்தோறும் திரளான அளவில் இங்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலினுள் இருக்கும் உண்டியல்களைக் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை திறந்து காணிக்கைகளை எண்ணுவது வழக்கம். கரோனா பரவல் சூழல் காரணமாக தற்காலிகமாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறாமல் இருந்தது.

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் கோயில் திறக்கப்பட்டு பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக காணிக்கை எண்ணும் பணி இன்று கோயில் வளாகத்தினுள் நடைபெற்றது.

தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் இக்கோயிலைச் சார்ந்த நள நாராயணப் பெருமாள், நளன் கலி தீர்த்த விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள உண்டியல்களின் காணிக்கை எண்ணப்படுகிறது.

கோயிலின் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிர்வாக அதிகரி (பொ) காசிநாதன் ஆகியோர் முன்னிலையில், கோயில் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 80 பேர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மீண்டும் ஜூலை 22-ம் தேதி நடைபெறும் எனக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE