மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம்; டெல்லி பயணம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ள நிலையில், தனது டெல்லி பயணம் குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் மறுசீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை இன்று (ஜூலை 08) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்துவைத்து, மருத்துவ மாணவர்களுக்கான ஓட்டப் பந்தயத்தைத் தொடங்கி வைத்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராகவிருந்த ஹர்ஷவர்தனிடம் ஏற்கெனவே வாங்கிய அனுமதியின்படி 9-7-2021 மாலை 3 மணிக்கு சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் அமைச்சரவையில் மாற்றத்திற்குப் பிறகு புதியதாகப் பொறுப்பேற்றவர்களுடன் இன்று மாலைக்குள் பேசி ஏற்கெனவே அளித்த உத்தரவுப்படி சந்திக்கலாம் என்றால், எய்ம்ஸ், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றி பல்வேறு விவரங்களை எடுத்துரைப்போம்.

இல்லையென்றால் திட்டமிட்டபடி துறையின் செயலாளர் இன்று மாலை டெல்லி சென்று மத்திய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர், இணைச் செயலாளர் போன்ற அலுவலர்களைச் சந்தித்து விவாதிக்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்து எடுத்துரைப்பார்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று (ஜூலை 07) மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டதில், ஹர்ஷ்வர்தன் வகித்துவந்த சுகாதாரத்துறையின் அமைச்சராக மன்சுக் மாண்டவியா பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE