புதுச்சேரியில் 298 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 3 பேர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 24) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 8,891 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-222, காரைக்கால்-42, ஏனாம்-9, மாஹே-25 என மொத்தம் 298 (3.35 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் ஒருவர், காரைக்காலில் ஒருவர், மாஹேவில் ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,734 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.50 சதவீதமாகவே உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 925 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 498 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,579 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 3,077 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக 276 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 114 (95.85 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 12 லட்சத்து 58 ஆயிரத்து 995 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் 10 லட்சத்து 81 ஆயிரத்து 549 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 295 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE