ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

By செய்திப்பிரிவு

ஏழை நாடுகள் கரோனா தடுப்பூசி பெற பிற நாடுகள் உதவ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தடுப்பூசிகள் குறித்த கூட்டம் ஒன்றில் பேசும்போது, “ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக 10% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடியும்” என்று வலியுறுத்தினார்.

பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன. இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சமநிலையின்மை நிலவுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE