மதுரை கோச்சடையில் ஃபர்னிச்சர் நிறுவனத்தில் தீ விபத்து: 5 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்

By என்.சன்னாசி

மதுரை, கோச்சடை பகுதியில் உள்ள மரப் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் தீப்பிடித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.

மதுரை, கோச்சடை சோதனைச் சாவடி அருகே மரக்கதவுகள், நாற்காலி, மேசைகள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. நேற்று மாலை திடீரென அந்த நிறுவனத்தில் தீப்பிடித்தது. மரச் சமான்களைத் தயாரிக்க, காய்ந்த மரப் பொருட்களை அதிகமாக இருப்பு வைத்து இருந்ததால் மளமளவென எல்லா இடத்திற்கும் தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்த திடீர் நகர், தல்லாகுளம் பகுதியில் இருந்து தலா 2 தீயணைப்பு வண்டிகளுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். சுமார் 5 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. மாவட்டத் தீயணைப்பு அலுவலர் வினோத், துணை அலுவலர் பாண்டி, சுப்ரமணியன், காவல்துறை அதிகாரிகளும் அங்கு சென்றனர்.

இந்த விபத்தில் சில லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து எஸ்எஸ்.காலனி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE