டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் விழா @ கோவை

By செய்திப்பிரிவு

சென்னை: டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கும் விழா நாளை மறுநாள் (ஆக. 29 - வியாழக்கிழமை) மாலை கோவையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த மூன்றாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான இவ்விருதுகள் வழங்கும் விழா சென்னை, மதுரை ஆகிய மண்டலங்களில் கடந்த வாரத்தில் நடைபெற்றன. தற்போது கோவை மண்டலத்தில் நடைபெறவுள்ளது.

கோவையில் நாளை மறுநாள் (ஆக. 29, வியாழன்) மாலை 4 மணிக்கு கோவை சிரியன் சர்ச் சாலையிலுள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று விருதுகளை வழங்கவுள்ளார். இவ்விழாவில், தமிழ்நாடு ஐஎம்ஏ தலைவர் டாக்டர் கே.எம்.அபுல் ஹசன், ஐஎம்ஏ மதிப்புறு மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, மதிப்புறு நிதி செயலாளர் டாக்டர் எஸ்.கெளரி சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவ்விழாவில், கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி, கவுரவிக்கப்படவுள்ளார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE