திருச்சியில் நாளை கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ வாசிப்புத் திருவிழா!

By செய்திப்பிரிவு

சென்னை: வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ வாசிப்புத் திருவிழா’ எனும் நிகழ்வு நடைபெறவுள்ளது.வாசகர்களின் பங்கேற்புடன் இணைந்து கொண்டாடப்படும் இந்நிகழ்வு நாளை (ஜூலை 25, வியாழக்கிழமை) திருச்சி காஜாநகர் ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள ஜமால் முகமது கல்லூரி அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும் சுயசிந்தனைக்கும் வாசிப்பு மிகவும் அவசியம். நம்முடைய வரலாற்றையும் பண்பாட்டையும் வாசிப்பே நமக்கு வெளிச்சமிட்டுத் துலங்கச் செய்கிறது. நவீன அறிவியல் தொழில்நுட்பம் இன்றைக்கு நம் உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்துசேர்த்திருக்கிறது. ஆனாலும் காட்சி ஊடகங்கள் நமக்கு ஒற்றைத்தன்மையான கருத்துகளையே அளிக்கின்றன.சமூக ஊடகங்களின் வழியே நொடிக்கொரு செய்தி நம் பார்வைக்கு வந்தாலும், செய்தியின் உண்மைத்தன்மையை அச்சு ஊடகங்களின் வழியாக மட்டுமே நம்மால் உறுதிசெய்ய முடிகிறது.

நாளிதழ் வாசிப்பு, புத்தக வாசிப்பு என வாசிப்பை சுவாசிக்கும் சமூகம்தான் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்க முடியும். புத்தக வாசிப்பு என்பது தனிப்பட்ட முறையிலும் சமூகத்துக்கும் நன்மை அளிக்கக்கூடிய செயல். வாசிப்பின் வழி அவரவர் கற்பனைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப பன்முகமான கருத்துகள் உருவாகும்.

வாசகர்களுடன் இணைந்து வாசிப்பின் சிறப்பினைக் கொண்டாடும் இவ்விழாவில் தமிழக அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும் எழுத்தாளருமான வெ.இறையன்பு, இஆப.,, கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று, வாசிப்பின் அவசியம் குறித்து உரையாற்ற இருக்கிறார்கள். தங்களது வாசிப்பு அனுபவத்தை வாசகர்களும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

வாசிப்புச் செயல்பாட்டை போற்றும் இவ்விழாவில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் https://www.htamil.org/VTVTRICHY என்கிற இணைப்பிலோ அல்லது இத்துடன் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்தோ, பதிவுசெய்துகொண்டு பங்கேற்கலாம். வாசிப்பு ருசி அறிந்த அனைவரும் வரலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE