“என்னக்கா, நேத்து தம்பிக்கு உடம்பு சரியில்லேனு சொல்லி, ஊருக்கு கிளம்பிப்போனீயே, என்னாச்சாம்?” தேவகியிடம் கேட்டார் பக்கத்து வீட்டு விமலா.
“அதை ஏன் கேக்கிறே? சின்ன வயசிலேர்ந்தே எந்தம்பிக்கு கால் தரையிலே படாது. நடக்கவே மாட்டான். பக்கத்து வீட்டுக்குப் போகவும் வண்டி கேப்பான். ஆபிஸ்லேயும் எந்நேரமும் கம்ப்யூட்டர் முன்னாடியே உக்காந்திருக்கிற வேலை. இப்ப ரொம்பவே வெயிட் போட்டுட்டான். இதிலே நேத்து பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டான்னு சொன்னாங்க. அதான் பார்த்துட்டு வரலாமுனு போனேன்..!” என்று தேவகி சொல்வதைக் கேட்ட விமலா,
“ஆமாங்க்கா. இப்ப உடம்பு வெயிட் போடுற பிரச்சினை பல பேருக்கு இருக்கு..!” என்றார்.
“அதுக்கு காரணம் நாம தான். எல்லாத்துக்குமே பஸ், கார், டூவீலர்லன்னு இல்லாம, பக்கத்தில இருக்கிற வேலைக்காஞ்சும் கொஞ்ச தூரம் நடக்கணும். இல்லேன்னாலும் தெனமும் காலையிலே கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி போகணும். இல்லேன்னா உடம்பு வெயிட் போடத்தான் செய்யும்.”
“சரியாச் சொன்னேக்கா. எங்க வீட்டுக்காரர் காலையில் எழுந்திரிச்சு, ஒரு நடை நடந்துபோயிட்டு வர்றதை வழக்கமா வச்சிருக்காரு. நானும் அவர்கூட நாளையிலேர்ந்து சேர்ந்து நடக்கப் போறேன்” என்று தீர்மானமாகச் சொன்னார் விமலா.
இன்றைய சூழலில் யாரேனும் தெருவில் நடந்துபோனாலே, “என்ன நடந்துபோறீங்க..?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறோம். முன்பெல்லாம் மக்கள், ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கால்நடையாக நடந்துபோனார்கள். காற்றோட்டமான பொதுவெளியில் கைவீசி நடக்கும்போது, உடலும் மனமும் புத்துணர்வு பெற்றன. நடப்பது என்பதும் ஒரு வகை உடற்பயிற்சி என்பதை அறியாமலேயே மக்கள் நடந்தனர். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர்.
ஆனால், வாகன வசதி வாய்ப்புகள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நடப்பது என்பதே குறைந்துபோய் விட்டது. இன்றைய நவீன வாழ்க்கை முறைகளினால் நமக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றி அறிந்துகொள்வது அவசியமல்லவா..!
இதோ… நமக்காக டாக்டர் சொல்கிறார். என்னவென்று படிப்போமா..!
டாக்டர் கே.பரணீதரன், மூத்த நீரிழிவு நோய் ஆலோசகர்,
காவேரி மருத்துவமனை,
டாக்டர். பரணீஸ் சுக்ரா டயாபட்டீஸ் கேர் & ரிசர்ச் சென்டர்.
நடைப்பயிற்சி தரும் பலன்கள்:
இப்போது தங்கள் வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்ளாவிட்டால், நோய்கள் மற்றும் மருந்துகளுடன் வாழ்நாள் முழுவதும் கழிக்கக் கூடிய எண்ணற்ற இளைஞர்களை இந்தியா கொண்டிருக்கிறது.
வயிறு தொப்பை இந்தியாவில் அதிகம் அலட்சியப்படுத்தப்படும் பிரச்சினையாக இருக்கிறது. 30 வயதுக்கு மேல் ஆகும்போது அல்லது குழந்தை பிறப்பிற்குப் பிறகு, தொப்பை ஏற்படுவது இயல்பானது எனும் தப்பான எண்ணம் பொதுவாக உலகளவில் இருக்கிறது.
ஒரு சிலர் தொப்பைக்கு காரணம், அறுவை சிகிச்சை அல்லது பொதுவான ஆரோக்கியம் அல்லது மத்திய வயதின் தன்மை என கருதுகின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், இவை ஏற்கத்தக்க பதில்கள் அல்ல.
வயிறு அருகே கொழுப்பு சேர்வது ஆபத்தான மற்றும் ஏற்க முடியாத ஆரோக்கிய இடர் ஆகும்.
தொப்பைக்குள் இருக்கும் கொழுப்பு ரசாயன நோக்கில் நச்சானது. உங்கள் இரத்த ஒட்டத்தில் கலக்கும் நச்சான கழிவை உருவாக்கும் ரசாயன ஆலையாக இதைக் கருதலாம். இந்த ரசாயனங்கள், ஒருவரது இன்சூலின் முறையாக செயல்படாமல் தடுக்கிறது. இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
நடைப்பயிற்சிக்கான ஆறு காரணங்கள்:
நடைப்பயிற்சி என்பது எல்லோருக்குமான ஆரோக்கிய வாழ்வியலின் ஒரு பகுதியாகும். அதிலும் குறிப்பாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய இடர்கள் கொண்டவர்களுக்கு இது மிகவும் முக்கியம். ஏனெனில், இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் நேரடியாக தாக்கம் செலுத்துவதோடு, உடல் மற்றும் மன நலன் மேம்படவும் உதவுகிறது.
1. இரத்த சர்க்கரை அளவு மேம்பாடு
நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலை இன்சூலின் ஏற்பிற்கு மேலும் ஏற்றதாக்கி, தசைகளின் சர்க்கரை பயன்பாட்டை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தி, இது நீரிழிவு நிர்வாகத்தில் உதவுகிறது.
2. எடை குறைப்பு மற்றும் நிர்வாகத்தில் உதவி
நடைப்பயிற்சி மேற்கொள்வது அதிக பருமன் கொண்டவர்களின் எடையைக் குறைக்க உதவுகிறது.
3. இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் குறைப்பதில் உதவி
நடைப்பயிற்சி, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை (HDL) மேம்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைக்க நேரடியாக உதவுகிறது.
4. மன அழுத்தம் மற்றும் கவலையைக் குறைத்து, மன நலனை மேம்படுத்துகிறது.
மன அழுத்தம் மற்றும் கவலை, இரத்த சர்க்கரை அளவைப் பாதித்து, நீரிழிவு நிர்வாகத்தைச் சிக்கலாக்குகிறது. நடைப்பயிற்சி, மன அழுத்தத்தைக் குறைத்து, நீரிழிவு நோயாளிகளின் திடீரென இரத்த சர்க்கரை அளவு உயர்வதைத் தவிர்க்கிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதில் உடல் பயிற்சியின் பலனை அனுபவித்து உணர வேண்டும். சொந்த மேம்பாடு என்பது, நீரிழிவு நிர்வாகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றால் நடைப்பயிற்சி அதில் முக்கிய பங்கு வகிக்கும்.
5. ஆற்றலை மேம்படுத்தி, பலவீனத்தைக் குறைக்கிறது
ஆற்றலை மேம்படுத்தி, பலவீனத்தை குறைப்பதில் நடைப்பயிற்சி முக்கிய வழியாகிறது. நடக்கும்போது, தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மேலும் ஆற்றல் பெருக வழி வகுக்கிறது.
6. எலும்புகள், தசைகளை வலுவாக்கிறது
நடைப்பயிற்சி தசைகள் வலுவாக ஊக்கம் அளிக்கிறது. எலும்பு நிறை பராமரிப்பில் உதவி, வயது காரணமாக ஏற்படும் எலும்பு இழப்பை ஈடு செய்கிறது. வயதாகும்போது ஒருவரின் இயக்கத்தைத் தக்க வைக்க இது உதவுகிறது.
நோய்களில் இருந்து விலகி நிற்க நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். வாரத்தில் 5 நாட்களுக்கு தினமும் 30 நிமிடங்கள் நடப்பது, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய் இடர்களைக் குறைக்கும். எனவே வளமான எதிர்காலத்தை நோக்கி நடங்கள்.
என்ன டாக்டர் சொல்றதைப் படிச்சீங்களா..?
எதையும் வருமுன் காப்பதே புத்திசாலித்தனமானது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இன்றைய குழந்தைகள் வெளியே சென்று விளையாடாமல், வீட்டிற்குள்ளேயே கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸ் ஆடிக்கொண்டும், செல்போனைப் பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். இதனால் சிறிய வயதிலேயே குழந்தைகளின் உடலில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் சேர்கிறது. இதைத் தவிர்த்திடவும், குழந்தைகள் மனதில் நடப்பதினால் விளையும் பயனை அறிவுறுத்தும் வகையிலும் வாக்கரூ மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து ‘நடந்தால் நன்மையே நடக்கும்’ எனும் பள்ளிக் குழந்தைகளுக்கான நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் போட்டிகளை நடத்துகின்றன.
இப்போட்டிகளில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்கலாம்.
3, 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான வண்ணம் தீட்டுதல் போட்டி:
மாணவர்களுக்கு தரும் ஓவியத்திற்கு, மாணவர்கள் அவர்களது கற்பனைக்கேற்ப வண்ணங்களைத் தீட்ட வேண்டும்.
6, 7, 8-ம் வகுப்புகளுக்கான ஜூனியர் கட்டுரைப் போட்டி:
‘நடைப்பயிற்சியின் நன்மைகள்’ எனும் தலைப்பில் 300 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரையை எழுத வேண்டும்.
9 முதல் 12- வகுப்புகளுக்கான சீனியர் கட்டுரைப் போட்டி:
‘நம் வாழ்க்கை முறைகளில் நடையின் பங்கும் பயனும்’ எனும் தலைப்பில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரையை எழுத வேண்டும்.
இப்போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும்
இ-சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளி அளவில் மூன்று பிரிவுகளிலும் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் 9 மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்கப்படும்.
பள்ளி அளவில் தேர்வான படைப்புகளிலிருந்து மூன்று பிரிவுகளிலும் மாவட்ட அளவில் தலா மூன்று மாணவர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு (9X38) வெற்றிச் சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
வாருங்கள்… அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களே!
நடையின் பயனை உணர்வோம்; நடப்பதினால் நன்மைகளை அடைவோம்.
அன்றாட வாழ்க்கை முறையில் இனி நடப்பதையும் நம் அன்றாட செயல்களில் ஒன்றாக்கிக் கொள்வோம்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
29 days ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago