வாக்கரூ மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும்  ‘நடந்தால்  நன்மையே  நடக்கும்…’ -    அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரைப் போட்டி

By செய்திப்பிரிவு

“என்னக்கா, நேத்து தம்பிக்கு உடம்பு சரியில்லேனு சொல்லி, ஊருக்கு கிளம்பிப்போனீயே, என்னாச்சாம்?” தேவகியிடம் கேட்டார் பக்கத்து வீட்டு விமலா.

“அதை ஏன் கேக்கிறே? சின்ன வயசிலேர்ந்தே எந்தம்பிக்கு கால் தரையிலே படாது. நடக்கவே மாட்டான். பக்கத்து வீட்டுக்குப் போகவும் வண்டி கேப்பான். ஆபிஸ்லேயும் எந்நேரமும் கம்ப்யூட்டர் முன்னாடியே உக்காந்திருக்கிற வேலை. இப்ப ரொம்பவே வெயிட் போட்டுட்டான். இதிலே நேத்து பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டான்னு சொன்னாங்க. அதான் பார்த்துட்டு வரலாமுனு போனேன்..!” என்று தேவகி சொல்வதைக் கேட்ட விமலா,
“ஆமாங்க்கா. இப்ப உடம்பு வெயிட் போடுற பிரச்சினை பல பேருக்கு இருக்கு..!” என்றார்.

“அதுக்கு காரணம் நாம தான். எல்லாத்துக்குமே பஸ், கார், டூவீலர்லன்னு இல்லாம, பக்கத்தில இருக்கிற வேலைக்காஞ்சும் கொஞ்ச தூரம் நடக்கணும். இல்லேன்னாலும் தெனமும் காலையிலே கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி போகணும். இல்லேன்னா உடம்பு வெயிட் போடத்தான் செய்யும்.”

“சரியாச் சொன்னேக்கா. எங்க வீட்டுக்காரர் காலையில் எழுந்திரிச்சு, ஒரு நடை நடந்துபோயிட்டு வர்றதை வழக்கமா வச்சிருக்காரு. நானும் அவர்கூட நாளையிலேர்ந்து சேர்ந்து நடக்கப் போறேன்” என்று தீர்மானமாகச் சொன்னார் விமலா.

இன்றைக்கு யாராவது சிலர் தெருவில் நடந்துபோனாலே, “என்ன நடந்துபோறீங்க..?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறோம். முன்பெல்லாம் மக்கள், ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கால்நடையாக நடந்துபோனார்கள். காற்றோட்டமான பொதுவெளியில் கைவீசி நடக்கும்போது, உடலும் மனமும் புத்துணர்வு பெற்றன. நடப்பது என்பதும் ஒரு வகை உடற்பயிற்சி என்பதை அறியாமலேயே மக்கள் நடந்தனர். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர்.

ஆனால், வாகன வசதி வாய்ப்புகள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நடப்பது என்பதே குறைந்துபோய் விட்டது. இன்றைய நவீன வாழ்க்கை முறைகளினால் நமக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றி அறிந்துகொள்வது அவசியமல்லவா..!

இதோ… நமக்காக டாக்டர் சொல்கிறார். என்னவென்று படிப்போமா..!

டாக்டர் பிரதீபா தேவி நிவியன், கண் அறுவை சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர், எம்என் கண் மருத்துவமனை.

இன்றைய உலகில் தொழில்நுட்ப மேம்பாடுகள், வாழ்வியலில் மேற்கத்திய தாக்கம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை வாழ்க்கையை எளிதாக்கி இருக்கின்றன. எல்லா நாணயத்திற்கும் இரு பக்கம் இருப்பது போல, இந்த மேம்பாடுகளும் நல்ல விளைவுகள் மற்றும் தீய விளைவுகளைக் கொண்டுள்ளன.

மாதாந்திர பில்களை வீட்டில் இருந்தே செலுத்தும் வகையில், வீட்டில் இருந்தே பணி செய்யும் வகையில், வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேசும் வகையில், தேவையான பொருட்களை நம் இடத்திற்கே வர வைக்கும் வகையில் தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிள்ளைகள் வீட்டிலிருந்தே பள்ளிப் படிப்பை மேற்கொண்டனர்.

உடல்ரீதியாக அதிக செயலின்மை, காட்சி செயலின்மை, பழக்க வழக்க மாற்றங்கள், கேட்ஜெட் மோகம் ஆகிய தீய விளைவுகள் பிள்ளைகளைப் பாதித்துள்ளன. கோவிட் -19 பெருந்தொற்றின்போது தொடர் கேட்ஜெட் பயன்பாடு மயோபியா பரவலை உண்டாக்கியது. நீண்ட நேரம் கேட்ஜெட்களைப் பயன்படுத்துவது கண் எரிச்சல் மற்றும் மயோபியாவை உண்டாக்குகிறது. தலைவலி, கண் களைப்பு, தெளிவற்ற பார்வை ஆகியவை மயோபியாவின் அறிகுறிகளாகும். 2050 வாக்கில் மக்கள்தொகையில் பாதி பேர் மயோபியா பாதிப்பு கொண்டிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. மயோபியா அல்லது கிட்டப்பார்வை பாதிப்பை, ஓடுதல், சைக்கிளிங், வெளிப்புற விளையாட்டு போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம். சூரிய வெளிச்சம் படுவது, மயோபியா முன்னேற்றத்தை தடுக்கும். எனவே தீவிர பாதிப்புகளைத் தவிர்க்க சரியான சமன் தேவை.

ஆன்லைன் கேம் ஆடும் குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, அவர்கள் உடல் செயலியக்கத்தைக் குறைத்து பருமன் மற்றும் அதன் காரணமாக தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும், தொடர்ந்து செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மத்தியில் சமூக தொடர்புகள் இல்லாமல் இருப்பது பழக்க வழக்கம் சார்ந்த மாற்றங்களை உண்டாக்குகிறது. தீவிர செல்போன் பயன்பாடு, போலியான நலனை உணர வைப்பதால், அது மின்னணு கோகைன் என ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.

சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் சமச்சீரான உணவு நம்முடைய ஒட்டுமொத்த நலனை மேம்படுத்துகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பதப்படுத்தும் உணவுகள் கொண்ட ஆரோக்கியம் இல்லாத உணவு, போதுமான பார்வை ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துகளை வழங்க இயலாது. வைட்டமின்கள், ஆண்டி ஆக்சிடெண்ட்கள் கொண்ட சமச்சீரான உணவு நம்முடைய கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

கொட்டை வகைகள், மீன்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சில வாழ்வியல் மற்றும் பழக்க வழக்க மாற்றங்கள் உடல் மற்றும் மன நல மேம்பாட்டை அளிக்கும்.

தொழில்நுட்ப மேம்பாடு நம்முடைய உடல்ரீதியான செயல்பாடுகளைக் குறைத்துள்ளது. நாம் வாகனங்களில் அதிகம் பயணிக்கத் தொடங்கியிருப்பது உடல் பருமன் போன்ற ஆரோக்கிய சீர்கேட்டை உண்டாக்குவதோடு, மாசுபாடால் சுவாச பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது.

பல ஐரோப்பிய நாடுகளில் இப்போதும் கூட சிறிய தொலைவு எனில் நடந்து செல்வது அல்லது சைக்கிளில் செல்வதைப் பின்பற்றுகின்றனர் (அவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தாலும்). சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு நல்லது என்பதோடு, ஆரோக்கியமான சூரிய வெளிச்சத்தையும் பாய்ச்சுவதால் மிகவும் நல்ல பழக்கமாகும். சைக்கிளிங் மற்றும் நடைப்பயிற்சி, நம்முடைய எடையைச் சீராக வைத்திருந்து, மூட்டுகள் மற்றும் தசைநார்களைச் சீராக வைத்திருக்கிறது. ஆரோக்கியமான இதயத்திற்கு உதவும் எளிமையான உடல் பயிற்சியாகவும் இது விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த பல நோய்களைத் தடுக்க சூரிய வெளிச்சம் இயற்கையான மருந்தாகும். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வெளியே விளையாடுவதை அல்லது குறுகிய தொலைவு சைக்கிளில், நடந்து செல்வதை ஊக்குவிக்க வேண்டும்.

தொழில்நுட்ப மேம்பாடு மோசமானது அல்ல; ஆனால், அவற்றை நாம் எப்படி சரியாகப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.

என்ன டாக்டர் சொல்றதைப் படிச்சீங்களா..?

எதையும் வருமுன் காப்பதே புத்திசாலித்தனமானது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இன்றைய குழந்தைகள் வெளியே சென்று விளையாடாமல், வீட்டிற்குள்ளேயே கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸ் ஆடிக்கொண்டும், செல்போனைப் பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். இதனால் சிறிய வயதிலேயே குழந்தைகளின் உடலில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் சேர்கிறது. இதைத் தவிர்த்திடவும், குழந்தைகள் மனதில் நடப்பதினால் விளையும் பயனை அறிவுறுத்தும் வகையிலும் வாக்கரூ மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து ‘நடந்தால் நன்மையே நடக்கும்’ எனும் பள்ளிக் குழந்தைகளுக்கான நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் போட்டிகளை நடத்துகின்றன.

இப்போட்டிகளில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்கலாம்.

3, 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான வண்ணம் தீட்டுதல் போட்டி:

மாணவர்களுக்கு தரும் ஓவியத்திற்கு, மாணவர்கள் அவர்களது கற்பனைக்கேற்ப வண்ணங்களைத் தீட்ட வேண்டும்.

6, 7, 8-ம் வகுப்புகளுக்கான ஜூனியர் கட்டுரைப் போட்டி:

‘நடைப்பயிற்சியின் நன்மைகள்’ எனும் தலைப்பில் 300 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரையை எழுத வேண்டும்.

9 முதல் 12- வகுப்புகளுக்கான சீனியர் கட்டுரைப் போட்டி:

‘நம் வாழ்க்கை முறைகளில் நடையின் பங்கும் பயனும்’ எனும் தலைப்பில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரையை எழுத வேண்டும்.

இப்போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும்
இ-சான்றிதழ் வழங்கப்படும்.

பள்ளி அளவில் மூன்று பிரிவுகளிலும் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் 9 மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்கப்படும்.

பள்ளி அளவில் தேர்வான படைப்புகளிலிருந்து மூன்று பிரிவுகளிலும் மாவட்ட அளவில் தலா மூன்று மாணவர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு (9 X 38) வெற்றிச் சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

வாருங்கள்… அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களே!

நடையின் பயனை உணர்வோம்; நடப்பதினால் நன்மைகளை அடைவோம்.

அன்றாட வாழ்க்கை முறையில் இனி நடப்பதையும் நம் அன்றாட செயல்களில் ஒன்றாக்கிக் கொள்வோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE