தொழிற்சாலை இயந்திரங்களில் கவனச்சிதறல்கள் இன்றி பணியாற்ற வேண்டும்: தொழிலக பாதுகாப்பு இயக்குநர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தொழிற்சாலை இயந்திரங்களில் கவனச்சிதறல்கள் இன்றி தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வெ.செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள சியோன் இ-ஹவா ஆட்டோமோட்டிவ் இந்திய நிறுவன தொழிற்சாலையில், தொழிற்சாலைகளில் பெயின்ட் ஷாப் மற்றும் இன்ஜெக்சன் மோல்டிங் இயந்திரங்களில் பாதுகாப்பாக பணியாற்றுவது குறித்த பயிற்சிப் பட்டறையை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வெ.செந்தில்குமார் நேற்று தொடங்கி வைத்தார். அத்துடன், தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேட்டையும் வெளியிட்டார்.

அப்போது செந்தில்குமார் பேசியதாவது: தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கவனச் சிதறல் மற்றும் அதீத நம்பிக்கைகளால் பெரும்பாலான விபத்துகள் தற்போது நடைபெறுகின்றன. எனவே, கவனச்சிதறல்கள் இல்லாமல் பணியாற்ற வேண்டும். இயந்திரங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக அணிந்துகொண்டு பணிபுரிந்தால்தான், விபத்தில்லா பணிச்சூழல் ஏற்படும்.

மேலும், தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தால்தான் தொழிற்சாலையில் விபத்தில்லா பணிச்சூழலை ஏற்படுத்த முடியும்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் செ.இளங்கோவன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர்கள் எ.சசிகுமார், பா.பாலமுருகன், சியோன் இ-ஹவா ஆட்டோமேட்டிவ் தொழிற்சாலையின் மேலாண் இயக்குநர் ஜாங் குவாங், இயக்குநர் யோ சுங்குன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE