வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்க நடவடிக்கை: தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

By ஸ்ரீ. பாக்யலஷ்மி ராம்குமார்

சென்னை: ‘தொழில் - வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழைப் பயன்படுத்துவதை சட்டமாக்க வேண்டும். அனைத்து பொது இடங்களிலும் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையம் வெளியிட்ட ஆணையில், ‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில் 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இது தொடர்பாக 1983, 1984 ஆகிய ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும். மற்ற மொழிகள் பெயர் பலகையில் உபயோகிக்கப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும். இந்த விதி பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் செயல்படுத்தவில்லை.

செம்மொழி மாநாடு நடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக இருந்த இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் லஸ் கார்னர் அருகே பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மாநில மொழியிலேயே பெயர் பலகை பெரிதாக வைத்துள்ளனர் தமிழகத்தில் மட்டும் தான் குறைவாக உள்ளது.

இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறியது: “தமிழை தூக்கிப் பிடிக்கும் திமுக ஆட்சியில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும். தமிழக அரசு 1977-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, ஒரு பெயர் பலகையில் 10 பகுதி இருக்குமென்றால் அதில் 5 பகுதி தமிழாக இருக்க வேண்டும். 3 பகுதி ஆங்கிலமாகவும் மற்ற 2 பகுதி வணிகர்கள் விரும்பும் மொழியிலேயே இருக்க வேண்டும். அதை தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தி மொழியில் எழுதியதை அப்படியே ஆங்கில மொழியாக்கத்தில் பெயர் பலகை உள்ளது. தமிழில் இல்லை என்று கண்டனம் தெரிவித்த தமிழர்கள் பலரும். ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழாக்கம் செய்து பெயர் பலகை வைத்துள்ள பான் இந்தியா நிறுவனங்கள் மீது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன்? வெளிமாநிலங்களில் பெயர் பலகையில் 80 சதவீதம் தங்களின் தாய்மொழியை பயன்படுத்துகின்றனர். தமிழகத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் மதுபானக் கடைகளில் கூட பெரும்பாலும் ஒயின் ஷாப், டாஸ்மாக் என்று ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதி பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள நிறுவனத்தில் கூட ஆங்கிலத்திலும், சீனத்திலும் மட்டுமே நிறுவனத்தின் பெயரை பயன்படுத்துகின்றனர்.

தமிழ் ஆர்வலர்கள் பலரும் ஒன்றிணைந்து இதை செயல்படுத்த வேண்டும். தமிழுக்காக ஒரு மாதத்திற்குள் கடைகளில் பெயர்ப் பலகை தமிழில் வைக்கவேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம் என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் கடந்த ஆண்டு வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆன்லைன் வர்த்தகம், சாலையோர கடைகள், உணவகங்கள், மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட பல இடங்களில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்துவது கிடையாது. பல கிளைகள் கொண்ட பான் இந்தியா கடைகள் (லென்ஸ்கார்ட், டோனி & கை, ரிலையன்ஸ் டிரண்ட்ஸ்) உள்ளிட்ட கடைகளிலும் தமிழை சிறிய அளவாகவும், தமிழாக்கம் செய்து மட்டுமே பயன்படுத்துகினறனர்.

இதை தடுக்க தமிழில் பெயர் பலகை வைத்தால் தான் நிறுவனம், கடைகள் நடத்தும் உரிமை வழங்கப்படும் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டால் தான் தமிழில் பெயர் பலகையை காண முடியும். தூயத் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என்பதை திராவிட மாடல் அரசு கட்டாய சட்டமாக்கி நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும்” என்று அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்