“பச்சக்கிளியை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும், ஏனென்றால் அவன் என் கண்ணுக்குள்ளேயே திரியுறான்” பச்சக்கிளியாக வடிவேலு பேசிய வசனம் தற்போதைய நிலையில் அவருக்கு முற்றிலுமாக பொருந்தும். இப்போதிருக்கும் பேஸ்புக்கும் யூடியூப்பும் ட்விட்டரும் இவர் இல்லை என்றால் எப்போதோ காலாவதியாகி இருக்கும் இல்லையெனில் இம்மண்ணுக்கு ஏற்றபடி மாறாமல் அந்நியப்பட்டே நின்று போயிருக்கும். அரசியல், சினிமா, சமூக விழிப்புணர்வு என எல்லாவற்றிற்கும் வடிவேலுவின் கதாபாத்திரங்களும் அதன் வசனங்களும் பயன்படுவது என்பது எந்த கலைஞனுக்கும் கிடைத்திராத அரிய வரம் என்றே சொல்லலாம். ஒரு கலைஞன் பல வருடங்களுக்கு முன்பு பேசிய வசனங்களும் அவரது செய்கைகளும் இன்றளவும் வெகுஜனமக்களால் ரசிக்கப்படுகின்றன. தொடர்ந்து ஆறு வருடங்களுக்கும் மேலாக அவரது நேரடி திரைப்படங்கள் வரவே இல்லை. ஆனாலும் அவருக்கான காத்திருப்பும் அவருடைய தாக்கமும் எல்லோருடைய அன்றாட வாழ்க்கையிலும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. வைகைக்கரையில் இருந்து வந்த வைகைப்புயலுக்கு இன்றுதான் பிறந்தநாள்.
1991ல் என் ராசாவின் மனசிலே படத்தில் அறிமுகமான வடிவேலு இப்போதுவரை தமிழ்திரையுலகின் ஈடு இணையில்லா நகைச்சுவை கலைஞன். அலெர்ட் ஆறுமுகம், கீரிப்புள்ள, என்கவுண்டர் ஏகாம்பரம், தீப்பொறி திருமுகம், ஸ்னேக் பாபு, கிரிகாலன் இந்த பெயர்களை கேட்டவுடனே முட்டிக்கொண்டு சிரிப்பு வந்தால் வியப்பு ஏதுமில்லை. அனைத்துமே வடிவேலுவின் திரை அவதாரங்கள். ஆனால் இந்த கதாபாத்திரங்கள் இடம்பெறும் திரைப்படங்களின் பெயர்களை சொன்னால்தான் வியப்பு. ”லேடன்ட்ட பேசுறீயா, பின்லேடன்”, ”நாதாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும்”, ”நீ லவ் பண்ணா ஒரு மாசம் நான் லவ் பண்ணா ஒரு வருசம்”, ”சோத்துல விசம் வச்சுடுவாங்களே” ”அண்ணன் அண்ணானா இருக்கமாட்டண்டா” இப்படி ஒவ்வொரு வசனங்களுமே அந்த நகைச்சுவை காட்சிகளை நம்முள் ஓட்டிவிடும் பலம் வடிவேலுவின் வசனங்களுக்கு மட்டுமே உண்டு. அவரது நகைச்சுவை காட்சிகள் இல்லையென்றால் பாதி தொலைக்காட்சிகள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்திருப்பார்கள்.
ப்ரெண்ட்ஸில் நேசமணியாக ‘அப்ரசண்டி’களிடம் வேலை வாங்குவதும், காதலனில் கல்லூரிமாணவன் வசந்தாக பேராசிரியரிடம் கோரிக்கை வைப்பதும், சூனா பானா என வெத்து சீன் போடுவதும் வக்கீல் வண்டு முருகனாக வாதாடுவதும் அரசியலில் குதித்து பெருத்தகாயம் வாங்குவதும் பேக்கரி ஓனராக வீரபாகு, ஒரே வகுப்பில் ஒன்பது வருசமாக அரியர் போட்டு உட்காந்திருக்கும் அய்யாச்சாமியாக காதலிப்பதும் என எல்லாமுமே நம் வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவைக் கோர்வைகள். எல்லாவற்றிற்கு பின்னும் ஒரு அங்கதம் இருந்துகொண்டே இருக்கும். வடிவேலு டாப் ரேஞ்ச் கேரக்டர் கைப்புள்ளயின் உடல்மொழி என்பது கிராமங்களில் மைனராக திரியும் அத்தனை இளைஞர்களின் பகடி என்றே சொல்லலாம். கட்டபொம்மன் என்று பெயர் வைத்துகொண்டு பென்சிலில் மீசை வரைந்துகொண்டு திரிவதும், புல்லட் பாண்டியாக ஊரில் சண்டித்தனம் பண்ணித்திரியும் அத்தனை பேர்களின் அங்கதம்தான் இந்த கதாபாத்திரங்கள் எல்லாம். கதாபாத்திரத்திற்கும் அதன் பெயருக்கும் இடையே இருக்கும் முரணில்தான் வடிவேலுவின் பகடி உருவாகிறது. இப்படி சமூகத்தின் கற்பிதங்களை கேள்விக்குள்ளாக்குவதும் அதன் மீதான பகடிகளை எடுத்து வைப்பதும்தான் வடிவேலுவின் கதாபாத்திரங்கள் .
ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களை ஈர்ப்பதற்காக அவர்களது ட்ரேட்மார்க் வசனங்களை தங்களது படத்தில் வைப்பதெல்லாம் மாறி இப்போது வடிவேலுவின் கதாபாத்திரங்களும் அதன் வசனங்களும் மானாவரியாக படத்தின் தலைப்புகளாகவோ அல்லது பாடலாகவோ அல்லது படத்தின் வசனக்களாகவோ பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஏறக்குறைய எல்லோருடைய அன்றாட வாழ்க்கையிலும் வடிவேலுவின் இரு வசனங்களாவது இயல்பாக வந்து செல்லும். ஒருவேளை தமிழ்சமூகத்தின் பிரதிபலிப்பாகத்தான் வடிவேலு இருந்திருக்கிறாரோ? என்ற கேள்வி எழாமல் இல்லை.
நகைச்சுவை நடிகன் என்பதைத் தாண்டி ஒரு நடிகனாக வடிவேலுவின் உழைப்பு அபரிதமானது. காதலனில் கல்லூரி மாணவன் வசந்த்தாக, அரசியல்வாதி ஸ்னேக் பாபுவாக மேஜிசியன் கிரிகாலனாக, திருடன் கீரிப்புள்ளயாக என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வடிவேலுவின் உடல்மொழியெ நம்மிடையே சிரிப்பைக் கொண்டு வந்துவிடும். நகைச்சுவை கலைஞர்களுக்கு உடல்மொழி எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உலகிற்கு உணர்த்த்தியவர் சார்லி சாப்ளின். அதேபோன்று தமிழ் திரையுலகில் உடல்மொழியால் நகைச்சுவையை நிகழ்த்தியவர்களில் வடிவேலுவுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. இப்போதிருக்கும் நிலையில் வெறுமனே டைமிங் வசனங்கள் மட்டும் அடித்தாலே போதும் என்ற நிலைக்கு தமிழ் திரையுலகின் நகைச்சுவை தள்ளப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். ஏறக்குறைய நகைச்சுவை வறட்சியை நோக்கி செல்கிறோம்.
இப்போதிருக்கும் அரசியல் சூழலில் ஒருவரை கலாய்ப்பதற்கும் வடிவேலுவின் கதாபாத்திரங்களும் வசனங்களே அதிகம் பயன்படுகின்றன. நம்மூர் அரசியல்வாதிகளில் இருந்து சினிமாக்களில் இருந்து உலக அரசியல்வாதிகள் உலக அளவிலான சினிமாக்கள் வரை கலாய்க்க வடிவேலு பயன்படுத்தப்படுவது அந்த கலைஞனின் இறவாத்தன்மைக்கு இட்டுச்செல்லக்கூடியது. டன்கிர்க்கிலும் ட்ரம்புடனும் வடிவேலு இருப்பதெல்லாம் பகடியின் உச்சம்.
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எந்தவொரு வடிவத்திலும் ஒரு கலைஞனின் கதாபாத்திரங்களும் வசனங்களும் பொருந்திப்போவது உலக சினிமாவையெல்லாம் மிஞ்சக்கூடியது. சமூக அமைப்பின் மீதான விமர்சனத்தையும் அரசு அமைப்பின் மீதான விமர்சனத்தையும் நேரடியாக சொல்வது என்பது எப்போதும் ஆபத்தானது. அதே நேரத்தில் அவற்றை பகடி பண்ணுவதும் கேலி செய்வதுமே ஒரு நகைச்சுவை கலைஞனின் வேலையாக இருக்கிறது. அதனாலேயே சார்லி சாப்ளின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார். அதே போன்ற அரசியல் புரிதலோடு வடிவேலு செயல்படாவிட்டாலும் அவருக்கு தெரிந்தோ தெரியாமலேயோ நமது தமிழ்சமூகத்தின் அபத்தங்களையெல்லாம் பகடி செய்கிறார். அதனாலேயே எளிதாய் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் நிரம்பிக்கிடக்கிறார் வைகைப்புயல். மீண்டும் புயல் மையம் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் பிறந்தநாள் வாழ்த்துகள்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago