திண்ணை: வைக்கம் போராட்டம் வெளியீடு

By செய்திப்பிரிவு

பழ.அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வைக்கத்தில் கேரள அரசு நடத்திய வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு (1924-2024) தொடக்க விழாவில் வெளியிடப்பட்டது. மலையாளப் பேராசிரியர் ஷுஜு மொழிபெயர்த்த இந்நூல் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், கேரளப் பண்பாட்டு துறை அமைச்சர் சாஜி செரியன், தமிழ்நாடு பாடநூல் நிறுவன இணை இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன், நூலாசிரியர் பழ. அதியமான், டி.சி. புக்ஸ் பதிப்பகத்தின் ரவி, ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. மலையாளத்தின் முன்னணிப் பதிப்பகமான டி.சி.புக்ஸ் இதை வெளியிடுகிறது. தமிழ்நாடு அரசின் ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் இலக்கிய விருது

கொடிசியா, பபாசி இணைந்து ஒருங்கிணைக்கும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா இந்தாண்டு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவை ஒட்டி இலக்கிய விருதுகள் அளிக்கப்படவுள்ளன. விருதுகளுக்கான பரிந்துரைகளை விழாக் குழு வரவேற்கிறது. கவிதைத் தொகுப்பு, புனைவு, புனைவு அல்லாதவை, மொழிபெயர்ப்பு ஆகிய நான்கு பிரிவுகளில் வெளிவந்த நூல்களைப் பரிந்துரைக்கு அனுப்பலாம். பரிந்துரைக்கும் படைப்பாளர் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பரிசுத் தொகை தலா ரூ.25 ஆயிரம். அனுப்ப வேண்டிய முகவரி: கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 23, கொடிசியா, ஜி.டி.நாயுடு டவர்ஸ், ஹூசூர் சாலை, கோவை 641018. மேலதிகத் தொடர்புக்கு: 7502722000

பிகே ரோஸி திரைப்படவிழா

சென்னை பிரசாத் ப்ரீவியூ திரையரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரை மூன்று நாள்கள் பிகே ரோஸி திரைப்படவிழா நடைபெற்றுவருகிறது. மராத்தி இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே, மலையாள இயக்குநர் ராஜீவ்ரவி, வங்க இயக்குநர் ஷ்யாம் பெனகல் உள்ளிட்ட பலரது படங்கள் இந்த விழாவில் இடம்பெற்றுள்ளன. இன்று 9 படங்கள் திரையிடப்படவுள்ளன. அனுமதி இலவசம்.

மா.அரங்கநாதன் இலக்கிய விருது

எழுத்தாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருது பேராசிரியர் க.பஞ்சாங்கத்துக்கும் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் ஏப்ரல் 16 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார் விருதுகளை வழங்கவுள்ளார். நீதிபதி அரங்க.மகாதேவன், எழுத்தாளர்கள் ரவிசுப்பிரமணியன், ஜி.ஆர்.தேவராஜன், அகரமுதல்வன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE