மிஸ்டர் உல்டா: தினகரனுடன் நடிகர் விஷால் சந்திப்பு

By ஜாசன்

(தலைப்பு மட்டும் நிஜம் உள்செய்தி எல்லாம் உல்டாவின் கற்பனை)

மிஸ்டர் உல்டா நடிகர் விஷாலை பார்க்கப்போனபோது மினியேச்சர் நடிகர் சங்க கட்டிட மாதிரியை பார்த்துக் கொண்டிருந்தார். ‘என்ன நடிகர் சங்க கட்டிட வேலையெல்லாம் நடக்குதா’ என்று உல்டா கேட்க “கோர்ட்ல கேஸ் நடந்தது இப்போ கட்டிட வேலை செய்ய யோசனை நடக்குது’ என்று விஷால் சுரத்தின்றி சொல்ல “அப்ப எப்போ உங்க கல்யாணம் போறப்போக்கை பார்த்தா டைரக்டா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம்தான் நடக்கும் போல இருக்கு’ என்று உல்டா சொல்ல உடனே விஷால் முறைக்க “எனக்கு எதற்கு பிரச்சனை தினகரனை எதற்கு சந்திச்சிங்க” என்று உல்டா கேட்க விஷால் “பேப்பர் எல்லாம் படிக்கிற வழக்கம் இல்லையா சகோதரி திருமண அழைப்பிதழ் தந்து அவசியம் கல்யாணத்துக்கு வரச்சொல்லி வற்புறுத்தினேன்னு செய்தி போட்டுருக்காங்களே பார்க்கலையா” என்று விஷால் சொல்ல உடனே உல்டா “அது ஏன் அவரை மட்டும் அவசியம் வரச்சொல்லி வற்புறுத்தினிங்க என்று” கேட்க உடனே விஷால் “அப்பத்தான் உல்டா அ.தி.மு.க. கட்சிக்காரங்க கூட்டம் குறையும் அவர் வர்றான்ன ஏதோ புள்ள பிடிக்கிறவர் வந்துட்டார் போல பயந்துகிட்டு வரமாட்டாங்க இல்ல அதுதான்’ என்று விஷால் கண் சிமிட்ட “சரி வேற என்ன பேசினீங்க அதைச் சொல்லுங்க” என்று உல்டா கேட்க “கூவத்துார், பாண்டிச்சேரி ரிசார்ட் வைச்சு ஒரு திரில்லர் அரசியல் படம் பண்ணலாம்னு ஒரு ஒன்லைன் சொன்னேன் கதையை ரொம்ப பிடிச்சிருச்சி நானே எடுக்கிறேன் ஹிரோ நான்தான் ஜோடியா கீர்த்தி சுரேஷ், ஒவியா, அஞ்சலி, லஷ்மிமேனன் இவங்களை போடுங்க நம்ப வெற்றிவேல் புகழேந்தி தங்கத்தமிழ்ச்செல்வன் இவங்களுக்கு வில்லன் வேஷம் கொடுத்திடலாம் காமெடிக்கு நாஞ்சில் சம்பத்.. அப்ப இந்த ரெண்டு ரிசார்ட்டையும் பேசிவிலைக்கு வாங்கிடாவா என்று கேட்டார்

வாங்கிடுங்க அருமையான லொக்கேஷன் என்று சொன்னேன் அப்போ ஹிரோ நீங்க டைரக்டர் யார்னு கேட்டேன் நீங்களே டைரக்ட் பண்ணுங்க நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இரண்டுக்கும் தலைவர் பதவிக்கு வர எவ்வளவு தில்லாலங்கடி வேலை செஞ்சிருப்பீங்க அதையெல்லாம் இந்த கதைல கொண்டு வந்திடுங்க அப்படினு சொல்லிட்டாரு” என்று குஷியாக விஷால் சொல்ல “சரி டைரக்டர் விஷால் சார் பட்ஜெட் எவ்வளவு’ என்று உல்டா கேட்க கம்மிதான் பத்தாயிரம் கோடி ரூபாய் நோட்டுல போட்டிருக்கிற எல்லாம் மொழியிலேயும் படம் ரிலீஸ்” என்று விஷால் உல்டா முகத்தை பார்த்தபடியே சொல்ல உடனே ‘உல்டா ரூபாய்னு சொன்னதும் நினைவுக்கு வருது டி.ஐ.ஜி. ரூபா மேடம் இதுல ஒரு வில்லி ரோல் பண்றாங்க அவங்க ’கால்ஷீட் நான் பத்து நாள்தான் தருவேன் பெங்களுரில் டிராஃபிக் தாஸ்தி நான் டியூட்டி பார்க்கணும் அப்படினு சொல்லிட்டாங்க ஒரு நாளைக்கு பத்து கோடினு அவங்களுக்கு நூறு கோடி’ என்று விஷால் சொல்ல இந்த கோடிக்கு எத்தனை சைபர் வரும் என்ற யோசனையுடன் உல்டா கிளம்பினார்.

சசிகலா ஒசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்குச் சென்றார்

இதைப்பற்றி பரப்பன அஹ்ரஹார சிறைத்துறை புது டி.ஐ.ஜியிடம் கேட்டபோது “பேசமா உல்டா இந்த ரூபா மேடம் சினிமா கதை எழுத போலாம் தினம் ஒரு கதை சொல்றாங்க அத மெயில் வேற எனக்கு பண்ணிடாறாங்க ஒரு நாள் ஜெயில் இருக்கிறது சசிகலா இல்ல அவங்க ஜாடையில் இருக்கிற ஒருத்தர்னு சொல்ல போறாங்க” என்ற ஆபிசர் கோபமாக சொல்ல “சரி ஒசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கு போனாங்களா இல்லையா அத சொல்லுங்க டி.ஐ.ஜி சார்’ என்று உல்டா கேட்க “ஓசூர் எம்.எல்.ஏ. வீடுன்னா ஏதோ ஒசூர் போனாங்கன்னு நினைக்காதே எம்.எல்.ஏ- வுக்கு பெங்களுரில் ஒரு வீடு இருக்கு அங்கே போனாங்க ஆனால் போலீஸ் பாதுகாப்போட போனாங்க கைதியை கோர்ட், விசாரணைன்னு அழைச்சிகிட்டு போறதில்லையா அப்படித்தான் இது இன்னும் சொல்லப் போனா கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் பிரதமர் கோரிக்கையத்தான் நிறைவேத்தறாங்க அதமொதல்ல தெரிஞ்சிக்கோ’ என்று ஆவேசமாக சொல்ல “என்ன சொல்றீங்க பிரதமர்தான் இவங்கள இப்படி காலற கூட்டிட்டு போய் ஷாப்பிங் பண்ணுங்கன்னு சொன்னாரா’ என்று உல்டா கேட்க “பிரதமர் ரேடியோவில் என்ன சொல்றார் கறுப்புப் பணத்தை ஒழிக்க ஒத்துழைப்பு தரச் சொல்றார் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவேன்னு சொல்றார் இந்தியாவில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தில் பாதி இவங்ககிட்டத்தான் இருக்கு எத்தனை கண்டெய்னர் தெரியுமா அந்த கறுப்புப் பணம் இப்ப எங்களாலே வெளியே வருது நாலு வருஷத்தில் ஒரு நாலு கண்டெய்னரையாவது வெளிக் கொண்டுவர நாங்க முயற்சி பண்றோம் இது ஒரு மாதிரியான பணவீக்கத்தை கட்டுப்படுத்துற நடவடிக்கை இதெல்லாம் பொருளாதார நிபுணர்களுக்குத் தெரியும் அரசியல்வாதிகளுக்கோ ஊடகங்களுக்கோ இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை இன்னொரு ரகசியம் சொல்றேன் நீ யார்கிட்டேயும் சொல்லக்கூடாது’ என்று ஆபிசர் சொல்ல ‘டி.ஐ.ஜி. சார் ரகசியம் எப்போதும் என்னுடைய தொண்டைக்குள்ளேயே இருக்கும் கோலார் சுரங்கத்தில் எவ்வளவு தோண்டினாலும் தங்கம் கிடைக்குதா இல்லையே அப்படித்தான் யார் என் வாயை கிளறினாலும் ரகசியம் வெளியே வராது தைரியமாக சொல்லுங்க” என்று உல்டா உசுப்ப “சின்னம்மா இங்க வருவதற்குமுன் கர்நாடக அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது இப்போ அப்படி இல்லை அவங்க அரசுக்கு நன்கொடையா ஒரு கண்டெய்னரை அன்பளிப்பா தந்திருக்காங்க அரசாங்கம் அதுக்கு ரசீது கூட தந்திருக்கு’ என்று ஆபிசர் சொல்ல “என்னது ரசீதா இதுக்கெல்லாம் கூட ரசீது தருவாங்களா’ என்று உல்டா கேட்க “ஆமாம் ரசீதில் சின்னம்மா பெயர் இருக்காது பெயர் வெளியிட விரும்பாத ஒரு அன்பர் அப்படினு இருக்கும் காவேரியில் தடுப்பணை கட்டுவோம் முதல்வர் ஏன் சொல்றார் எல்லாம் இந்த கண்டெய்னர் பணத்தை வைச்சுதான்’ என்று ஆபிசர் சீரியசாக சொல்ல “சரி ஆனா இந்த ரூபா மேடம் ஒவ்வொருநாளும் ஷாப்பிங் போனாங்க, சினிமா போனாங்கன்னு வீடியோ ரிலீஸ் செய்றாங்களே’ என்று உல்டா கேட்க “அது ஒரு மாதிரியான கணக்கு அத உங்கிட்ட சொல்லலாமா கூடாதா தெரியலையே” என்று ஆபிசர் யோசிக்க உடனே உல்டா “இப்படி ஸ்டாலின் மாதிரி நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்தா நான் கிளம்பறேன்’ என்று புறப்பட ஆபீசர் கையை பிடிச்சி “கோபப்படாதே உல்டா இந்த அரசாங்கம் மத்திய அரசிடம் எந்த நிதியுதவியும் வாங்காம அரசை நடத்துனும்னு ஒரு தன்னிறைவு திட்டம் தீட்டியிருக்காங்க இப்படி ரூபா வீடியோ ரிலீஸ் செய்ய செய்ய அங்கே கண்டெய்னர் ரிலீஸ் ஆகுது முதலமைச்சர் குஷியாகிறார் இன்னும் ரெண்டு வருஷத்தல கர்நாடகவுல ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு வர இருக்கு ஒரு கிலோ தக்காளிக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசம்னு அரசு அறிவிப்பு வரப்போகுது சின்னம்மாவின் சிறைக்காலம் கர்நாடாவின் பொற்காலம்’ என்று ஆபிசர் புளகாங்கிதப்பட உல்டா இப்படியெல்லம் நடக்குமா என்ற சந்தேகத்துடன் வெளியே வரும்போது ஒரு கண்டெய்னர் உள்ளே நுழைந்தது உல்டாவின் சந்தேகம் தீர்ந்தது.

தி.மு.க.வின் கடிதத்தை காப்பி அடித்த காங்கிரஸ்

“தி.மு.க. ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை அப்படியே நகல் எடுத்து பேர் மட்டும் போட்டுகிட்டிங்களாமே” என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியிடம் உல்டா கேட்க “இதில் என்ன தப்பு நாங்க ஒன்னு சொல்லி அவங்க ஒன்னு சொல்லி குழப்பம் வந்து தளபதியோட அபவாதத்துக்கு ஆளாகக் கூடாது இல்ல கூட்டணி தர்மம் இதுதானே எப்போ தேர்தல் வருமோ என்னமோ யார் கண்டா தளபதிய மனம் கோணாம பார்த்துகனும் இல்ல அதுதானே கூட்டணி தர்மம்’ என்று விஜயதாரிணி உல்டாவிடமே சந்தேகம் கேட்க “நீங்க பேசாம சத்தியமூர்த்தி பவனை வாடகைக்கு விட்டுவிட்டு அறிவாலயத்தில் ஒரு ஒரமா உட்கார்ந்து கட்சிய நடத்தலாமே” என்று உல்டா சொல்ல விஜயதாரிணி அப்பாவியாக “இது நல்ல விஷயம்தான் இதுவும் கூட்டணி தர்மம்தான் செயல் தலைவர் ரொம்ப சந்தோஷப்படுவார் எனக்கு ஆட்சேபனை இல்லை ஆனா ஈ.வி.கே.எஸ். திருநாவுக்கரசர் என்ன சொல்லுவார்னு தெரியலையே நீ வேனா கேட்டு சொல்றியா’ என்று வெள்ளாந்தியாக விஜயதாரிணி கேட்க உடனே உல்டா தி.மு.க.வுடன் கூட்டணி நிரந்தரம்தானா’ என்று கேட்க அ.தி.மு.க. பி.ஜே.பி.யோட கிளைக் கட்சினு ஆயிடிச்சி அப்போ நாங்க அறிவாலயத்தில்தானே இருக்கனும் அதுதானே முறை” என்று விஜயதாரிணி சொல்ல உடனே உல்டா “இது உங்க கருத்தா இல்ல ராகுல் கருத்தா” என்று கேட்க இது என் கருத்து, ராகுல் முடிவு சோனியா தீர்மானம் மொத்த காங்கிரசும் இப்படித்தான் பீகார்னா லல்லு, தமிழ்நாடுனா தளபதி இதுதான் எங்க கட்சி பார்முலா சரிதானே உல்டா’ என்று விஜயதாரிணி உல்டாவிடம் ஒப்புதல் கேட்க “சரி மேடம் தி.மு.க. ஆட்சிக்கு கட்டாயம் வருமா” என்று கேட்க “கட்டாயம் வரும் உல்டா திருமதி. தளபதி இதற்காக தமிழ்நாட்டில் உள்ள எல்லா நரசிம்மர் கோயிலிலும் பானகம் வினியோகம் செய்திருக்காங்க என்ன அவங்க ஜோசியர் கூட்டணி ஆட்சிதான்னு சொல்லிட்டாங்க கூட்டணி ஆட்சி என்றால் எனக்கு அமைச்சர் பதவி நிச்சயம் நான் இரண்டு நரசிம்மர் கோயிலில் அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை திருமதி. தளபதியிடம் தந்திருக்கிறேன்’ என்ற விஜயதாரிணியிடம் “உங்களுக்கு அமைச்சர் பதவி நிச்சயம் அப்படினு எப்படி அவ்வளவு நிச்சயமாக சொல்லுகிறீர்கள்’ என்று உல்டா கேட்க “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பளிச்சென்று இருக்கிற மூஞ்சி இதுதானே இதைவிட வேற என்ன தகுதி வேணும்” என்று விஜயதாரிணி கண்ணாடியில் முகத்தை பார்த்தபடியே கேட்க ‘நியாயம்தான்’ என்று சொல்லி புறப்பட்டார் உல்டா.

சபாநாயகர் தனபால் முதல்வர் ஆவார்: திவாகரன் தகவல்

மிஸ்டர் உல்டா திவாகரனை சந்திக்க போனபோது “டெய்லி என்னை டி.வி.யில் காட்டவே நீ ஓடிவந்துட்டே இல்ல” என்று திவாகரன் எகத்தாளாமாக பேச “அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எப்படி திடீர்னு களத்தில குதிச்சீங்க” என்று உல்டா கேட்க “எல்லோரும் தினகரனை அம்போன்னு விட்டுட்டு போயிட்டாங்க நான் இப்போ அவருக்கு பக்கத்துணையா இருக்காலாம்னுதான்’ என்று திவாகரன் சொல்ல “அதெல்லாம் சரி திடீரென்று சபாநாயகள் மீது என்ன பாசம் அவரை முதல்வர்னு சொல்றீங்க இது நிசமா இல்ல உள்குத்து ஏதாவது உண்டா” என்று உல்டா கேட்க திவாகள் “நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போது அவர்தான் எம்.எல்.ஏ. ஆதரவு கணக்கு பார்க்கனும் பரோட்டா கணக்கு மாதிரி நாலைந்து கோட்டை அழித்துவிட்டால் ஆட்சி போயிடும் செய்நன்றி கடனா அவரை முதல்வர் ஆக்கிடலாம் அப்படினு ஒரு கணக்கு கூட்டி கழித்து பார்த்தா சரியாத்தானே வரும்’ என்று திவாகள் உல்டாவிடம் கேட்க ‘அப்போ தினகரன் முதல்வர் கனவு என்னாச்சு” என்று உல்டா கேட்க திவாகள் “இல்லை உல்டா தினகரன் முதல்வர் கனவை நான் கட்சி பொதுச் செயலாளர் கனவா மாத்திட்டேன் கட்சிக்கு தினகரன் ஆட்சிக்கு திவாகரன் எப்படி கோஷம் நல்லா இருக்கு இல்லே’ என்று திவாகரன் கேட்க “என்னது ஆட்சிக்கு திவாகரனா’ என்று வாயை உல்டா வாயை பிளக்க “ஏன் உல்டா நான் ஆட்சிக்கு வரக் கூடாதா வந்தா என்ன தப்பு சின்னம்மாவுக்கு அந்த ராசி இல்லே தினகரனுக்கும் அந்த ராசி இல்ல எனக்கு அந்த ராசி இருக்குனு கோணி சாமியார் சொல்லியிருக்காரு” என்று திவாகரன் சொல்ல “அப்போ ஆர்.கே. நகள் வேட்பாளர் நீங்கதானா’ என்று உல்டா கேட்க “ஆர்.கே. நகள் ராசியில்லை வெற்றிவேல் முழு ஐந்து வருஷம் இல்லாம ராஜினாமா ஜெயலலிதாவும் இதே கதை தினகரனுக்கு தேர்தலே தள்ளிப் போயிடுச்சி அதனால கோணி சாமியார் என்னை செங்கல்பட்டுல நிக்க சொல்லியிருக்கிறாரு செங்கல்பட்டுல நின்னு சட்டமன்ற உறுப்பினர் ஆயிடுவேன்’ என்று திவாகரன் சொல்ல செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. காரர் அவர் எப்படி ராஜினாமா செய்வார் கோணி சாமியார் ஜோசியம் பொய்’ என்று உல்டா சொல்ல “கோணி சாமியார் ஜோசியம் நிஜம் அவர்தான் சூரியன் உச்சத்தில் இருக்கிறவர்கூட கூட்டணி வைச்சா முதல்வர் நிச்சயம்னு ஜோசியம் சொன்னார் ஸ்டாலினுக்கு சூரியன் உச்சத்தில் அவங்க கட்சி சின்னமும் சூரியன் கூட்டணி தர்மப்படி அந்தப் பெண் எம்.எல்.ஏ. ராஜினாமா பண்ணுவாங்க” என்று திவாகரன் சொல்ல “அதெல்லாம் சரி தளபதி பாவம் முதல்வர் கனவோட இருக்காரு நீங்கதான் முதல்வர்னு சொல்றீங்களே நிசமா’ என்று உல்டா கேட்க உடனே திவாகரன் “அவரும்முதல்வர் நானும் முதல்வர் உல்டா” என்று சொல்ல “என்னது ரெண்டு முதல்வரா அப்படி ஏதாவது அரசியல் சட்டத்தில் இருக்கா’ என்று உல்டா சந்தேகம் கேட்க “உனக்கு புரியலையா காலையில் நான் முதல்வர் தளபதி துணை முதல்வர் மதியம் அவர் முதல்வர் நான் துணை முதல்வர் ஞாயிற்றுக்கிழமை நானோ அவரோ எங்களில் இருவர் யாரோ ஒருவர் முழு நாளும் முதல்வர்” என்று திவாகரன் சொல்ல “இதற்கு கவர்னர் ஒப்புக்கொள்வாரா அவர் தினமும் பதவி பிராமணம் செய்ய வேண்டுமே” என்று சந்தேகம் கேட்க “தமிழ்நாட்டுக்கு நிரந்தர கவர்னர் வேணும்னு இப்படித்தான் செய்யனும் பி.ஜே.பி.யையும் அழ வைச்ச மாதிரி அமையும் எப்படி என் பிளான்” என்று கேட்க உல்டா வர இருக்கும் ஆளுநரை நினைத்து பார்த்தால் அழுகை வந்துவிட்டது.

ஜாசன், மூத்த பத்திரிகையாளர்

தொடர்புக்கு: jasonja993@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்