ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் மெக்லியோட் 10

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த உயிரிவேதியியலாளரும் விஞ்ஞானியும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் மெக்லியோட் (John James Rickard Macleod) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 6). அவரைப் பற்றிய அரியமுத்துக்கள் பத்து:

* மத்திய ஸ்காட்லாந்தின் க்ளுனி என்ற இடத்தில் பிறந்தார் (1876). இவரது தந்தை வட கிழக்கு ஸ்காட்லாந்தின் ஆபர்டீன் நகருக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டவே அங்குள்ள கிராமர் பள்ளியில் பயின்றார். பின்னர் ஆபர்டீன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். 1898-ல் மருத்துவத்தில் முனை வர் பட்டம் பெற்றார்.

* ஜெர்மனியில் உள்ள லீப்ஸிக் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியியல் பயின்றார். பிரிட்டன் திரும்பியவுடன் லண்டன் ஹாஸ்பிடல் மருத்துவக் கல்லூரியில் வேலை கிடைத்தது. 1902-ல் உயிரிவேதியியல் துறையின் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.

* 1903-ல் அமெரிக்கா சென்று, வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் உடலியல் துறை விரிவுரையாளராகப் பதவியேற்றார். முதல் உலகப்போரில், பல்வேறு போர்க்கால கடமைகளையும் ஆற்றினார். போருக்குப் பிறகு டொரென்டோ பல்கலைக்கழகத்தில் உடலியல் துறை ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகவும் மருத்துவ டீனின் உதவியாளராகவும் நியமிக்கப்பட்டார்.

* மைக்ரோ பாக்டீரியம் காசநோய், மின் அதிர்ச்சிகள், கிரியேட்டனின் வளர்சிதை மாற்றம் மற்றும் மூளையின் ரத்த ஓட்டம் ஆகியன குறித்து ஆராய்ந்தார். 1905-ல் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம், நீரிழிவு குறித்த ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.

* டொரென்டோ பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு மருத்துவப் படிப்பு உருவாக முக்கிய காரணமாக இருந்தார். 1920-ல் கனடாவைச் சேர்ந்த இளம் மருத்துவர் பாண்டிங் இவரிடம் நீரிழிவு நோயை கணையத்திலிருந்து பெறப்படும் பொருளின் மூலமாகக் குணப் படுத்த முடியும் என்று யோசனை தெரிவித்தார்.

* இந்த ஆராய்ச்சிக்காக ஆய்வுக்கூட இடம், சோதனைக்கான விலங்குகள், பகுப்பாய்வு நுட்பங்கள் மற்றும் அவருக்கு உதவ தன் மாணவர்களுக்குத் தந்து உதவினார். பிறகு, அவர்களோடு இணைந்து இன்சுலின் ஆராய்ச்சி மேற்கொண்டார். அடுத்தடுத்த வெற்றிகளுக்குப் பிறகு, அந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சிக் கூடத்தையுமே இன்சுலின் ஆராய்ச்சி நிலையமாக மாற்றிவிட்டார்.

* 1922-ல் இந்தக் குழு முதன்முதலாக மருத்துவ ரீதியாக மனிதரிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி கண்டது. 1923-ல் இன்சுலின் கண்டுபிடிப்புக்கும் பிரித்தலுக்குமான இவரது பங்களிப்புகளுக்காக ஃபிரெட்ரிக் பாண்டிங்குடன் இணைந்து உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றார்.

* 1928-ல் ஸ்காட்லாந்து அபெர்தீன் பல்கலைக்கழகத்தில் உடலியங்கலியல் துறை பேராசிரியராகவும் பின்னர் மருத்துவத் துறை டீனாகவும் பணியாற்றினார். ‘பிசியாலஜி அன்ட் பயோகெமிஸ்ட்ரி இன் மாடர்ன் மெடிசின்’, ‘பிராக்டிகல் ஃபிசியாலஜி’, ‘டயாபெடீஸ்: இட்ஸ் பாதாலஜிகல் ஃபிசியாலஜி’, ‘கார்போஹைட்ரேட் மெடபாலிசம் அன்ட் இன்சுலின்’ உள்ளிட்ட 11 நூல்களை எழுதினார்.

* தனியாகவும் பிறருடன் இணைந்தும் 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். கார்போஹைட்ரேட்டின் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றும் மத்திய நரம்பு மண்டல ஆராய்ச்சிகளுக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கினார்.

* ஆராய்ச்சிகளுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டவரும் உடலியல், மருத்துவத்துறைகளில் மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் மெக்லியோட் 1935-ம் ஆண்டு தமது 59-வது வயதில் மறைந்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE