“நான் கண்ட சிறந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர்” - மணிமேகலைக்கு செஃப் வெங்கடேஷ் வாழ்த்து

By செய்திப்பிரிவு

“நான் கண்ட சிறந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர்” என ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து விலகிய மணிமேகலைக்கு நிகழ்ச்சியை வழிநடத்தும் செஃப் வெங்கடேஷ் உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபலமான சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீசனில் இருந்து கோமாளியாக வந்தவர் மணிமேகலை. பார்வையாளர்களை என்டர்டெயின் செய்த மணிமேகலை தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “குக் வித் கோமாளியின் கடைசி நாள் இது. ‘நானே வருவேன்’ கெட்டப்பில் ‘நான் வரமாட்டேன்’ என்பதை அறிவித்திருக்கிறேன். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதல் சீசனிலிருந்து எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

எனக்கு கொடுக்கப்படும் அனைத்து வாய்ப்புகளிலும், தருணங்களிலும் சிறப்பாக செயல்படுவதற்காக எப்போதும் கூடுதலாக மெனக்கெடுவேன். அப்படியாக குக் வித் கோமாளியிலும் உங்களை கொஞ்சமாக என்டர்டெயின்ட் செய்திருக்கிறேன் என நம்புகிறேன். உங்களிடமிருந்து கிடைத்த அன்பு நான் எதிர்பாராதது; இனியும் என்னுடைய செயல்பாடுகளில் அதே உங்களின் அன்பை எதிர்நோக்கியுள்ளேன். அன்புடன் மணி” என பதிவிட்டுள்ளார். எனினும், அவர் விலகுவதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.

இந்நிலையில், அவருக்கு செஃப் வெங்கடேஷ் பட் உருக்கமான தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், " லேடி கோமாளிகளிலேயே நீங்கள்தான் சிறந்தவர். நான் கண்ட சிறந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர். சிறந்த மனிதநேயம் கொண்டவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் என் வாழ்க்கையில் பல சிறந்த நல்ல தருணங்கள் உங்களுடன் எனக்கு கிடைத்தது. அதை என்றும் மறக்க மாட்டேன். ஆல் தி பெஸ்ட். நீங்கள் எந்தத் துறைக்குப் போனாலும், என்ன வேலை செய்தாலும் சிறப்பாக இருப்பீர்கள்" என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு மணிமேகலை, “செஃப் என்பதையும் தாண்டி எப்போதும் என் நலன் விரும்பி நீங்கள். உங்கள் வார்த்தைகளை அப்படியே பின்பற்றுவேன். நீங்கள் ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர். உங்கள் வாழ்த்துக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE