பாமரருக்கும் பத்ம விருதுகள் - மகிழ்ச்சி தரும் மாற்றம்

By செய்திப்பிரிவு

- சுப லக்ஷ்மி பழனி

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இந்த ஆண்டு மொத்தம் 106 பத்ம விருதுகளை அறிவித்துள்ளார். அதில் 6 பத்ம விபூஷன், 9 பத்மபூஷன், 91 பத்மஸ்ரீ. விருது பெற இருக்கும் 106 பேரில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 19 பேர் பெண்கள்.

1950-களில் நிறுவப்பட்ட பத்ம விருதுகள், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லி அரசியலோடு நெருங்கிய தொடர்புடையவர்களுக்கே உரியதாக இருந்தது. அரசியல்வாதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஆட்சியாளர்களுக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள், ஆட்சியாளர்களின் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர்தான் விருது பட்டியலில் அதிகளவில் இடம் பெற்றிருந்தனர். 2006 மற்றும் 2009-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 6 பத்திரிகையாளர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. அந்த 6ல் 3 2008ல் வழங்கப்பட்டவை. அதாவது 2009 பொதுத்தேர்தலுக்கு முன் வழங்கப்பட்டவை.

இவ்வாறு பத்ம விருது பெற்ற பத்திரிகையாளர்களில் ஒருவர் பர்கா தத். கார்கில் போர், மும்பை பயங்கரவாத தாக்குதல் ஆகிய நிகழ்வுகளை பர்கா தத் தொலைக்காட்சியில் வழங்கிய விதம், மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தும் தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு அவருக்கு பத்ம விருதை வழங்கியது. இதுபோல் சர்ச்சைக்குரிய வகையில் பத்ம விருதுகளை வாங்கியவர்கள் பலர். அரசின் அணுகுமுறை காரணமாக, பத்ம விருதுகளுக்குத் தகுதியான பலர் தவிர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் தாங்கள் ஒதுக்கப்படுவதாக உணர்ந்தனர். இதனால், பத்ம விருது குழுவின் செயல் சந்தேகத்திற்கு உரியதாக மாறியது.

நரேந்திர மோடி பிரதமரானதை அடுத்தே பத்ம விருதுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பத்ம விருதுகளை பெறுபவர்கள் குறித்துப் பார்க்கும்போது, இந்த மாற்றம் பளிச்சென்று தெரிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 98 வயதான யோகா ஆசிரியை வி.நானம்மாள், பத்ம விருது வாங்கியது இதற்கு மிகச் சிறந்த உதாரணம். பத்ம விருது விவகாரத்தில் இது மிகப் பெரிய நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கத் தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருப்பது "மக்கள் பங்கேற்பு". மத்திய அரசால் 2014, ஜூலையில் தொடங்கப்பட்ட “My Gov” தளம், முடிவுகளை எடுப்பதிலும், கொள்கைகளை உருவாக்குவதிலும் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவித்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து பங்களிக்கும் 2 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் இதில் உள்ளனர்.

இதேபோல், இந்தியாவின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளுக்கு உரியவர்களை தேர்வு செய்வதிலும் குடிமக்களின் பங்கு இருப்பதை www.padmaawards.gov.in என்ற இணையதளம் உறுதி செய்து வருகிறது. இதன்மூலம், பத்ம விருதுகள் உண்மையான "குடிமக்கள் விருதுகளாக" மாறியுள்ளன.

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அமைச்சர்கள் அளித்து வந்த நிலையில், அதற்கு கடந்த 2017ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. சாதாரண குடிமக்களும், இணையதளம் வாயிலாக பரிந்துரைக்கும் வழக்கத்தை அவர் உருவாக்கினார். இதன் காரணமாக, மக்களால் பரிந்துரைக்கப்பட்ட சாதனையாளர்களை பத்ம விருது குழு பட்டியலிட்டு, பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் முடிவுகளை அறிவிக்கிறது. இந்த புதிய செயல்முறை நல்ல முடிவுகளையும், மாற்றங்களையும் தந்துள்ளது.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், 2014க்கு முன்பு வரை, கலைத்துறையினர், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரே அதிக அளவில் பத்ம விருதுகளை பெற்று வந்தனர். ஆனால், 2014க்குப் பிறகு நிலைமை மாறி இருக்கிறது. சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பலருக்கும் பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன. பத்ம விருது பெறும் சமூக சேவகர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கான சதவீதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சமூகத்திற்கு அதிகம் தெரிந்திருக்க வேண்டிய; ஆனால் அந்த அளவுக்கு தெரிந்திராத பலர், "பத்ம விருதுகள்" மூலம் வெளிச்சம் பெற்றுள்ளனர். அப்படி 2014க்குப் பிறகு பத்ம விருதுகள் மூலம் குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட்ட தமிழக ஆளுமைகள் சிலர் குறித்து தற்போது பார்ப்போம்.

ஆயக்குடி எஸ். ராமகிருஷ்ணன்:
எழுந்து நடக்க முடியாத அளவுக்கு உடல் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இவர், மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கி இருக்கும் மறுவாழ்வு மையம்தான் 'அமர் சேவா சங்கம்'. 1981ம் ஆண்டு இந்த சங்கத்தை தொடங்கிய இவர், ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்து வருவதோடு, கிராமங்களில் போலியோ தடுப்பு முகாம்களை நடத்துவது, மாற்றுத்திறனாளிகளை சமூக சேவையில் ஈடுபடுத்துவது என தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார். பலரது வாழ்க்கையை மாற்றிய, தன்னலமற்ற சேவையை வழங்கி வருகிற இவருக்கு, மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.

சின்னப் பிள்ளை:
எழுதப் படிக்கத் தெரியாதவரான இவர், கிராமப்புற மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தியவர். சமூக சேவையில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருதளித்தது. இவர் ஏற்கனவே வாஜ்பாய் அரசால் "ஸ்த்ரீ சக்தி புரஸ்கார்" விருதைப் பெற்றவர். விருது வழங்கும் விழாவில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்ன பிள்ளையின் காலை தொட்டு அவர் செய்த சமூக பங்களிப்பை போற்றி வணங்கினார். இந்த நிகழ்வின் மூலம் பொது கவனத்திற்கு வந்தார் சின்னப்பிள்ளை.

வில்லிசை கலைஞர் எஸ்.சுப்பு ஆறுமுகம்:
வில்லுப்பாட்டு என்றாலே எல்லோரின் மனதிலும் சட்டென்று தோன்றும் முகம் சுப்பு ஆறுமுகம். வில்லிசை வேந்தர் என அழைக்கப்படும் இவருக்கு 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை அவரது 92வது வயதில் வழங்கியது. சுதந்திரப் போராட்ட காலத்தில் வில்லுப்பாட்டின் மூலம் மக்களிடையே ஆன்மீகத்தையும், தேசபக்தியையும் வளர்த்தவர் இவர். முக்கியமாக மகாத்மா காந்தியின் சுயசரிதையை வில்லிசையாகப் பாடி பாமர மக்களிடமும் மகாத்மா காந்தி குறித்த விவரங்களை கொண்டு சேர்த்தவர்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்:
உலக அளவில் பெரும் மேடைகளை கண்ட கிருஷ்ணம்மாள், 13,500 ஏழைப் பெண்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளி விளக்கேற்றியவர். வினோபா பாவேயின் 'சர்வோதயா' அமைப்பில் இளம் வயதிலேயே இணைந்த இவர், பூமிதான இயக்கத்திலும் கலந்து கொண்டு பல்வேறு சமூக மாற்றங்களைக் கொண்டு வந்தவர். இவருக்கு மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு பத்மபூஷன் விருதினை வழங்கி கவுரவித்தது.

பாப்பம்மாள்:
சிறு சேமிப்பின் மூலம் நிலம் வாங்கி அதில் இயற்கை விவசாயம் செய்பவர் 106 வயது மூதாட்டி பாப்பம்மாள். வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு அவற்றில் வெற்றியும் பெற்று இயற்கை விவசாயம், சமூக நலன் ஆகியவற்றில் கவனம் ஈர்த்த இவருக்கு மத்திய அரசு கடந்த 2021ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது.

கல்வி கற்றவரோ, கற்காதவரோ, நகரத்தில் இருப்பவரோ, கிராமத்தில் இருப்பவரோ, எவர் ஒருவர் தன்னலம் கருதாமல் சமூக மாற்றத்திற்கு வித்திடுகிறாரோ அவர் தற்போது பத்ம விருதுகளால் கவுரவிக்கப்படுகிறார். விருது பெறுபவர்களுக்கு மட்டுமல்லாது விருதுக்கும் தற்போது உரிய அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்