மராட்டிய நாடகத்துறை முன்னோடி
மராட்டிய இசை, நாடகத் துறை முன்னோடியும், இந்திய நாடகத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவருமான அண்ணா சாகேப் கிர்லோஸ்கர் (Anna Saheb Kirloskar) பிறந்த தினம் இன்று (மே 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மராட்டியப் பகுதியான பெல்காம் (தற்போது கர்நாடக மாநிலம்) அருகே குல்ஓசூர் என்ற கிராமத்தில் (1843) பிறந்தார். இயற்பெயர் பல்வந்த் பாண்டுரங்க கிர்லோஸ்கர். தந்தை பண்டிதர், சமஸ்கிருதக் கவிதைகள், நாடகங்களில் ஆர்வம் கொண்டவர். இதனால் மகனுக்கும் இந்த ஆர்வம் சிறு வயதிலேயே அரும்பியது.
* மராட்டி, சமஸ்கிருதம் பயின்றார். அவற்றில் புராணங்கள், இலக்கியம், வரலாறு, நாகரிகம் குறித்த ஏராளமான நூல்களைப் படித்தார். பள்ளிக்கல்விக்குப் பிறகு ஆங்கிலக் கல்வி பயிலவும், உயர்கல்விக்காகவும் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நாடகங்களால் ஈர்க்கப்பட்டார். நாடகக் கலைஞர்கள், படைப்பாளிகளோடு நெருங்கிப் பழகினார்.
* சில நாடகங்களில் நடித்தார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நாடகம் எழுத ஆரம்பித்தார். இது தந்தைக்குப் பிடிக்கவில்லை. அவரது வற்புறுத்தலால், மீண்டும் ஊர் திரும்பினார். பள்ளி ஆசிரியர், காவல் துறைப் பணி, வருவாய்த் துறை அலுவலகத்தில் குமாஸ்தா என பல ஆண்டுகள் பணியாற்றினார்.
* இதற்கிடையில், நாடகங்கள் எழுதியும், நடித்தும் வந்தார். இசையறிவு மிக்க இவர், இசை நாடகங்களையும் எழுதினார். ‘ஸ்ரீசங்கராச்சார்ய திக்விஜய்’ நாடகம்தான் இவரது முதல் இசை நாடகம். பின்னர் சில வரலாற்று நாடகங்கள், இசை நாடகங்கள் எழுதினார். சமஸ்கிருத காவியங்களை மராத்தியில் மொழிபெயர்த்து, நாடகங்களாக மாற்றினார்.
* ‘பாரத் சாஸ்த்ரோ தேஜக் மண்டலி’ என்ற நாடகக் குழுவை 1866-ல் தொடங்கி, தனது நாடகங்களை அரங்கேற்றினார். இது நல்ல வரவேற்பு பெற்றதால், ‘கிர்லோஸ்கர் சங்கீத நாடக் மண்டலி’ என்ற வர்த்தக ரீதியிலான நாடக கம்பெனி தொடங்கினார். இதில் முதல் நாடகமாக ‘சங்கீத் சாகுந்தலம்’ இசை நாடகத்தை அரங்கேற்றினார்.
* இந்த நாடகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வர்த்தக ரீதியாகவும் நல்ல வருமானம் ஈட்டித் தந்தது. இவரது நாடகங்களும், நாடகக் குழுவும் பெரிதும் பாராட்டுகளைப் பெற்றன. இதையடுத்து, வருவாய் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் நாடகத் துறைக்கே அர்ப்பணித்தார்.
* இவர் எழுதி, நடித்த ‘சவுபத்ரா’ இசை நாடகத்தில் 100-க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகள் இடம்பெற்றிருந்தன. ‘சாகுந்தலம்’ நாடகத்தில் 198 இசைத் தொகுப்புகளைச் சேர்த்திருந்தார். இவை இந்துஸ்தானி, கர்னாடக இசையின் கலவையாக இருந்தன. இவரது நாடகக் குழு நாடு முழுவதும் நாடகங்களை நடத்தியது.
* மராட்டிய நாடகத் துறை இவரது காலகட்டத்தில் அபார வளர்ச்சி பெற்றது. நாடகக் கலையின் அழகியல் அம்சத்தை வளப்படுத்தினார். அண்ணா சாகேப் கிர்லோஸ்கர் என நேசத்தோடு அழைக்கப்பட்டார். அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.
* இவர் எழுதி, இசையமைத்து, நடித்த அனைத்து நாடகங்களும் மகத்தான வெற்றி பெற்றன. இந்திய கலாச்சாரத்தை தன் நாடகங்கள் மூலம் சீரமைத்து மீட்டெடுத்தவர் என பாலகங்காதர திலகர் இவருக்குப் புகழாரம் சூட்டினார்.
* மராட்டிய இசை நாடகத் துறைக்கு நவீனத் தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்தார். மராட்டிய நவீன நாடகத் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய அண்ணா சாகேப் கிர்லோஸ்கர் 42-வது வயதில் (1885) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago