ஐஸ்க்ரீம் குச்சிகளில் பாரதியார், திருவள்ளுவர் உருவப்படம்: சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் ‘கலாமஞ்சரி’!

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: தமிழிசையை வளர்க்கும் நோக்கில் ’கலாமஞ்சரி’ தமிழ் இசைப் பரப்பு மன்றம் 2018-ஆம் ஆண்டு சவுந்திர நாயகி வயிரவனால் சிங்கப்பூரில் தொடக்கப்பட்டது. ‘கலாமஞ்சரி’ இசை நிகழ்வு பாரதியார், பாரதிதாசன், அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோருக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், 21.01.2023 அன்று பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரை ‘எண்ணமும் வண்ணமும்’ என்ற நிகழ்ச்சியை ‘கலாமஞ்சரி’ சிங்கப்பூரில் ஏற்பாடு செய்தது. லிஷா அமைப்பின் ஆதரவில் ’லிஷா பொங்கல் திருவிழா 2023’-ன் ஓர் அங்கமாக ’தேங்காப் ப்ளேஸில்’ இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் லிஷா அமைப்பினர் லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை ஒட்டி பல நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பிப்பர். அந்த வகையில் இந்த நிகழ்வில் சிங்கப்பூர் ரங்கோலி வல்லுநரான சுதா ரவி மற்றும் அவரது மகள் ரஷிதா ரவி 6 மீட்டர் உயரம் கொண்ட உருவப் படங்களை ஐஸ்க்ரீம் குச்சிகளைக் கொண்டு உருவாக்கினர்.

பாரதியார், பாரதிதாசன், அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோரின் உருவப் படங்களை ஒரு மாத காலமாக முனைப்போடு ஐஸ்கிரீம் குச்சிகளைக் கொண்டு முதன்முதலாக உருவாக்கியது புது அனுபவமாக இருந்ததாக சுதா ரவி தெரிவித்தார்.

மேலும் ’கலாமஞ்சரி’ நிகழ்ச்சியில் திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் பாடப்பட்டன. மேலும், கலாமஞ்சரி நிகழ்வு சிங்கப்பூர் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிங்கப்பூர் இந்திய தூதரகத்தின் அதிகாரி பிரபா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE