காலத்தின் வாசனை | கொசுவலை கோலாகலம்!

By தஞ்சாவூர் கவிராயர்

கொசுவலைகளின் உபயோகம் குறைந்துகொண்டே வருகிறது. அதற்குப் பதிலாக கொசுக் கொல்லிகள் வந்துவிட்டன. இப்போது எல்லா வீடுகளிலும் பேட்டரியில் சார்ஜ் செய்யப்படும் கொசு மட்டைகள் வந்துவிட்டன. இவற்றால் கொசுக்களைப் பொரித்துக் கொட்டவே நேரம் சரியாக இருக்கிறது. எப்போது தூங்குவது?

அந்தக் காலத்தில் கொசுவலை கட்டித்தான் தூங்கச் செல்வோம். கொசுவலை ஒரு அஹிம்சை சாதனம் என்பார் அப்பா. அப்படியும் கொசுவலைக்குள் நுழைந்துவிடும் ஒன்றிரண்டு கொசுக்களை அடிப்பதில் போட்டி போடுவோம். அப்பா எங்களைத் தடுப்பார்.

"அப்பா நம்மைக் கடிக்கிற கொசுக்களைக் கொல்வதில் என்ன தப்பு?"

"கடிச்சா கொல்லணுமா? நம்மைக் காப்பாத்த கொசுவலை இருக்கே! நம்மைத் தற்காத்துக்கொள்ளணும் குழந்தைகளா. கொசுவை மட்டுமல்ல; கொடிய பிராணி களையும் கொல்லக் கூடாது!

அப்பா ஒரு பள்ளி ஆசிரியர். இப்படியாக அப்பாவின் அடுத்த நாள் வகுப்பறை, முதல் நாள் எங்கள் வீட்டுக் கொசுவலைக்குள்ளிருந்தே ஆரம்பமாகும்.

கொசுவலைக்குள் தூங்குவது தனி சுகம். கொசுவலைக்குள் படுத்துக்கொண்டு வெளியே பார்த்திருக்கிறீர்களா? மங்கலான உருவங்கள் மஸ்லின் போர்த்தியபடி ஒரு அலாதியான அழகுடன் நடமாடும்.

கொசுவலைக்குள் ஒரு மனோகரமான வாசனை தவழும். கொசுவலை தேவைப்படாத நாட்களில் அதனைச் சுருட்டி, அதற்குள் நாப்தலின் உருண்டைகள் ஒன்றிரண்டைப் போட்டு வைப்பதால் வருகிற வாசனை அது!

படுக்கப் போகும்முன் கொசுவலை கட்டுகிற வேலை ஒவ்வொரு இரவும் கோலாகலமாகவே நடக்கும். அப்பா ஒண்டி ஆளாகச் செய்துவிடுகிற வேலையை நாங்கள் குழந்தைகள் மூன்று பேர் சேர்ந்து, கோணல்மாணலாகச் செய்வோம்.

நாலு பக்கமும் நாடாவை இழுத்து ஒழுங்காகக் கட்டினால்தான் கொசுவலை என்னும் சிறிய நூலறையைச் சிருஷ்டிக்க முடியும். எங்கள் வீட்டில் சிறியதும் பெரியதுமாக இரண்டு கொசுவலைகள் இருந்தன.

அப்பாவுக்குக் காய்ச்சல் வந்துவிட்டால் (அடிக்கடி அவருக்கு ஃபைலேரியல் காய்ச்சல் வரும்) சிறிய கொசுவலையில், சின்ன திண்ணையில் படுத்துக்கொள்வார். நாங்கள் பெரிய கொசுவலையில் தூங்குவோம்.

சிலசமயம், அப்பா - அம்மா குடும்பச் சண்டை கொசுவலைக்குள்ளும் தொடரும். குடும்பச் சச்சரவுகள் கொசுக்களைவிட மோசம். அவையும் உள்ளே நுழைய முடியாதபடி ஒரு கொசுவலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டால், கொசுவலையை விட்டு வெளியேறுவார். இதுதான் அவர் கோபத்தின் உச்சம். 'உள்ளே வாங்க… உள்ளே வாங்க' என்று அம்மா கத்துவார். அப்பா கொசுவலையைத் திரும்பிப் பார்க்காமல் தெருவில் இறங்கி நடப்பார்.

அப்புறம்?

யாருக்குத் தெரியும்? தூங்கிவிடுவோம்.

காலையில் பார்த்தால், அப்பா கொசுவலைக்குள் தூங்கிக்கொண்டு இருப்பார்.

'அவரவர் வீட்டில் என்ன உசத்தியான பொருள் இருக்கிறது?'- கேட்பவன் வாயை அடைக்கும் போட்டியில் வகுப்பில் கடைசியாக நான்தான் ஜெயிப்பேன்.

"எங்க வீட்டுல கொசுவலை இருக்கே!"

அது ஒரு குக்கிராமம். பள்ளியில் என்னோடு படித்தவர்களில் சிலர் ஏழைக் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் கொசுவலையைப் பார்த்ததுகூடக் கிடையாது.

அப்படியே வாயடைத்துப் போவார்கள்.

"எவ்ளோ பெரிசுடா?"

"அப்படியே வானம் வரைக்கும் பெரிசா இருக்கும்டா" என்று அளப்பேன்.

"அப்ப நட்சத்திரமெல்லாம் கொசுவலைக் குள் மாட்டிக்குமா?"

"ச்சீ… எங்க அப்பா ரொம்ப நல்லவருடா… நட்சத்திரங்களை ஒண்ணும் பண்ணமாட்டார்!"

"டேய்! ஒருநாள் ஒங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயி, கொசுவலையைக் காமிடா!"

கொசுவலையைக் காண்பிக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தீப்பெட்டி லேபிள்கள்தான் கட்டணம்.

வீட்டுக்கு வந்த நண்பர்களுக்கு அம்மா வெல்லமும் முறுக்கும் கொடுத்தார். ஒவ்வொருத்தர் பெயராகக் கேட்டார். பசங்க மெல்ல என் காதைக் கடித்தார்கள்.

"டேய்! கொசுவலையைக் காட்டுடா!"

"என்ன தம்பி..! என்ன வேணும் உங்களுக்கு?"

"ஒண்ணுமில்லே…" என்று நாணிக் கோணினார்கள்.

"அம்மா அவனுங்களுக்கு நம்ம கொசு வலையைப் பார்க்கணுமாம்!"

மடித்து வைத்த கொசுவலையைக் கொண்டுவந்து காண்பித்தார் அம்மா. அதைப் பார்த்து எல்லோரும் சிரிப்பை அடக்குவது மாதிரி வாயைப் பொத்திக்கொண்டார்கள். பிறகு, வெளியே வந்து என்னிடம் கேட்டார்கள்.

"இதுதான் கொசுவலையா? நல்லாவே இல்லை!"

"நாங்க என்னமோன்னுல்ல நெனச்சோம்!"

"இதுக்குள்ள கொசு வராதாக்கும்… போடா போ!"

நம்பாமல் வீடு நோக்கி நடந்தார்கள்.

அன்றிரவு கொசுவலைக்குள் எனக்குத் தூக்கமே வரவில்லை.

நட்சத்திரங்களும் மாட்டிக்கொள்ளும் பிரம்மாண்டமான கொசுவலையை நான் பெரியவன் ஆனதும் செய்வேன் என்று நினைத்துக்கொண்டேன்.

அதை ஆமோதிப்பதுபோல் என் காதருகே ஒரு கொசு 'ஙொய்…'என்று ரீங்கரித்தது.

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்