நினைவலைகள் | பன்முக பரிமாணம் கொண்ட கலை ஆளுமை கே.ஏ.குணசேகரன்

By செய்திப்பிரிவு

சமூகத்தின் எதார்த்த உண்மைகளை, புதிய சிந்தனை ஆக்க மரபோடு உருவாக்கிய முன்னோடி படைப்பாளிகளில் ஒருவர் கே.ஏ.குணசேகரன். Block Theater பார்வையை நாடகத் துறைக்கு அறிமுகம் செய்தவர். தலித் நாடகம் என்ற புதிய கலைவடிவத்தை தமிழ்நாட்டிற்கு தந்தவர் என்பதை அறிந்து, அவரைப் பாராட்டும் வகையில் மத்திய பிரதேச மாநிலம் நாக்பூர் சட்டக் கல்லூரியில் அவரது வரைபடம் திறக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

தனித்த அடையாளத்தோடு தலித் அழகியல் நாடகத்தை ஆக்கம் செய்த அவர் 'தலித் நாடகத் தந்தை' என்று போற்றப்படுகிறார். இன்று அவரது 8-வது நினைவு நாள்.

“தன் இசை மூலம் சாதாரண மக்களிடம் சகலத்தையும் கொண்டு செல்ல வேண்டும். ஆதிகுடியின் எழுதப்படாத நாட்டுப்புற இசையை மதிப்புறு கலையாக்கிட வேண்டும். அதே வேளையில் விடுதலை பெறும் விழிப்புணர்வை அவர்களிடம் வளர்க்க வேண்டும்” என்ற கொள்கையோடு 1980களில் இருந்து முனைந்து கலைப் பயணம் செய்தவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் கலை பணி செய்தவர்.

சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஆர்கெஸ்ட்ரா பாடகராக இருந்த கே.ஏ.குணசேகரன் வானொலிப் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து கிராமியப் பாடகர் ஆனார். அவரது கிராமியக் குரலை கேட்டு மக்களால் கவரப்பட்டார். கிராமிய பாடல்கள் மீதான ஆர்வம் அவருக்குள் விளையத் தொடங்கியது. கிராமிய மேடை அமைத்து இசைப் பாடல்களை தேடும் பணியை தொடர்ந்தார்.

கிராமத்து சடங்கு திருவிழாக்களுக்கான நையாண்டி மேளம், கரகாட்டம், கூத்து, வள்ளி திருமண நாடகம், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், ராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம் போன்ற நிகழ்த்து கலைகளின் மீது நாட்டம் கொண்டார்.

இடதுசாரி சிந்தனையாளரான அவர் கிராமங்களில் சாமானிய மக்களின் வாழ்வியல் அனுபவங்களை பாடல்களாக பாடி, சமூகத்தின் அவசியம் கருதி சமூக சமத்துவம் வேண்டும் என்ற தேவையை உணர்ந்து விழிப்புணர்வு பாடகரானார்.

இயக்கம் சார்ந்த பாடல்களை எழுதியும், கிராமிய மெட்டுகளில் பாடத் தொடங்கினார். தோழமை சார்ந்தும், இயக்கம் சார்ந்தும் பிற கவிஞர்களின் கவிதைகளை தன்னானே இசைப்பாட்டாக இணைத்துக் கொண்டார். தெம்மாங்கு, ஒப்பாரி, நையாண்டிப் பாட்டு என தொழிலாளர், விவசாயிகளின் வலி சுமந்த வாழ்க்கையை தன்னானே மேடைகளில் ஒலித்து வந்தார்.

கிராமத்தில் இசையோடு பாடும் குரல்களை கண்டெடுத்து அவர்கள் பாடும் கிராமிய பாடல்களை மேடைகளில் நிறுத்த முனைந்தார். பாட்டுக்குரல் சொந்தங்களின் மேடை பயத்தைப் போக்கி, படிப்படியாக அவர்களை மேடையேற்றிப் பாட அறிமுகமும் செய்து வைத்தார்.

மாட்டு வண்டி நுழையாத கிராமங்களில் ஒலித்த வயலோர பாடல்களையும், நாட்டுப்புற ஆட்டக் கலை வடிவங்களையும் சமூகப் பொது வெளியில் உயர்கல்வி கலை அரங்கங்கள், பல்கலைக்கழகங்களில் மேடை ஏற்றிய தன்னானே இசை கலைஞர் அவர். அவரை இன்றைய கிராமியக் கலைஞர்கள் மதிப்புறு தந்தையாக மதிக்கின்றனர்.

சாவுப்பறை என சாதியால் மறுதலிக்கப்பட்டிருந்த ஆதிகுடியின் முதல் தோலிசைப் பறையை தன் தோளில் சுமந்து, மேடையில் இசைத்துப் பறைசாற்றி நின்ற மண்ணின் கலைஞர்.

“கலை மேடை தான் ஆயுதம்” என கொள்கை வழி பயணித்த அவர் தமிழகத்தில் நடந்த வன்கொடுமைகளை, வன்கொலை, பாதகங்களை, சமூகச் சீரழிவுப் பிரச்சனைகளை, காவேரிப் பிரச்சனையை, தஞ்சை வெண்மணியில் நடந்த தீவைப்பு சம்பத்தை 44 தலித் மக்களை குடிசையில் வைத்து எரித்த பாதகத்தை, எதார்த்த உண்மைகளை, விழிப்புணர்வு பாடல்களாக்கி, அதிர்விசையை முழக்கியவர். பல்வேறு ஆய்வு கட்டுரைகளையும் எழுதியவர்.

40 ஆண்டு காலம் மண்ணின் கலைகளை தேடியும், நிகழ்த்து கலைப்பணி, மேடைப் பணி, நிகழ்த்து கலைகளின் கள ஆய்வு, தலித் கலையரங்கம், தலித் நாடகம், என பன்முக பரிமாணம் கொண்ட கலை ஆளுமையாக ‘நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் தந்தையாக’ வாழ்ந்து மறைந்துள்ளார். அவரது 8வது ஆண்டு நினைவு தினம்.

அவர் பிறந்த சிவகங்கை மாவட்டத்தில் அவரது கனவான கிராமியக் கலை களம் உருவாக்கிடும் வகையில் தன்னானே இசைக் கலைகளை பயிற்சி அளிக்கும் மணிமண்டம் அமைத்திட வேண்டும் என்பது கிராமிய கலைஞர்கள் வைக்கும் கோரிக்கை.

அவரால் உருவாக்கப்பட்ட நாடக மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர். இன்று பல்வேறு ஆளுமைகளாக தமிழ்நாட்டில் திறம் கொண்டு நாடகக் கலைக்குப் பணி செய்து வருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் கே.ஏ. ஜோதிராணி,
இணைப்பேராசிரியர்,
முதுகலை தமிழ் மற்றும் உயர் ஆய்வு மையம்,
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி,
அண்ணாசாலை, சென்னை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE