சிறுவயதில் 'ம்..' சொல்லி கதைக் கேட்டது நினைவிருக்கிறாதா..? எத்தனை முறை ''அடுத்து என்னாச்சு?'' என்று தாத்தாவிடமோ, பாட்டியிடமோ ஆர்வமாகக் கதை கேட்டிருப்போம்.
அவர்களும் சலிப்புத் தட்டாமல் நமது ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அந்த வயதில் ஓராயிரம் உணர்ச்சிகளையும், கற்பனைகளையும் கட்டுப்பாடில்லாமல் கட்டவிழ்ந்து ஓட அவர்கள் கூறிய கதையும் ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கலாம். அவர்கள் கூறிய கதைகளை தற்போது கண்களை மூடி நினைத்துப் பாருங்கள். நமது தாத்தாக்களும், பாட்டிகளும் எவ்வளவு திறமையான கதைச் சொல்லிகளாக இருந்திருக்கிறார்கள்.
இவ்வாறு ஒரு சிறந்த கதை சொல்லியால்தான் ஒரு நல்ல எழுத்தாளராக வாசகர்கள் மத்தியில் சென்று அவர்களது உலகில் நாற்காலி போட்டு உரையாட முடியும். அதை கச்சிதமாகவும், ஆர்ப்பரிப்பு ஓசையில்லாமலும் செய்து கொண்டிருக்கிறார் இளம் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கார்த்திக் புகழேந்தி.
கார்த்திக் புகழேந்தியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நாம் வாழ்ந்து பயணித்த நாட்களை மீண்டும் அவரது எழுத்துகள் நினைவுப்படுத்துகின்றன. வாசிப்பின்ஊடே ஆங்காங்கே நம்மை அமைதியில் ஆழ்த்திவிடுகின்றன.
வாசகர்கள் மத்தியில் சிறந்த கதைசொல்லியாக உருவாகி வரும் கார்த்திக் புகழேந்தியுடனான நேர்காணல் இதோ:
''திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குக்கிராமத்தில்தான் பிறந்தது வளர்ந்தது எல்லாம். சிறு வயதில் ஆச்சியின் வளர்ப்பில் இருந்ததால் என்னவோ சேட்டைக்காரனாகவே வளர்ந்தேன். ஆச்சியின் இறப்புக்குப் பிறகு, குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதிலிருந்துதான் மனிதர்களுடனான எனது பயணம் தொடர்ந்தது. நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அப்போது நான் பத்தாம் வகுப்பு வரைதான் படித்திருத்தேன். ஆனால் அதனைப் பற்றி கவலைபடக் கூட காலம் என்னை ஓய்வில் வைக்கவில்லை. இப்படி எளிதாக எனது பள்ளிப் பருவத்தை எனக்கே தெரியாமல் கடந்து வந்து விட்டேன்.
இவ்வாறு பயணத்திலே வாழ்க்கை தொடர்ந்தபோது எனக்கு மார்க்கெட்டிங்கில் வேலை கிடைத்தது. இந்த வேலை மூலம் தூத்துக்குடி, நாகர்கோவில், திருநெல்வேலி மாவட்டங்கள் உட்பட பல ஊர்களுக்கு வேலை நிமித்தமாகப் பயணப்படுவேன்.
வேலை நிமித்தமாக செல்கையில் ஒருநாள் முழுக்க சில ஊர்களில் தங்கி வியாபாரம் பார்க்க வேண்டி இருக்கும், அங்குதான் வியாபாரிகள், ஊர் பெரியவர்கள் என பல கதைசொல்லிகள் எனக்கு அறிமுகமானார்கள். அவர்களுடன் பேசும்போது அந்த ஊர்களின் பழமையான பழக்கவழக்கங்கள் குறித்து பகிர்ந்து கொள்வார்கள். உதாரணத்துக்கு இன்று நாம் உச்சரிக்கும் பல ஊர்களின் பழைய பெயர்களையும், அதற்கான வரலாற்றையும் அவர்கள் கூறும்போது தெரிந்துகொள்ள சுவாரசியமாக இருந்தது.
அதுவரையில் நான் புத்தகங்களைப் படித்ததில்லை. எழுத்தாளர்கள் இல்லாத பாமர மக்களுடைய அனுபவத்தைத்தான் நான் முதலில் பெற்றேன்'' என்று திருநெல்வேலி மண் மணத்துடன் பேசி, என்னையும் பயணப்பட தூண்டிக் கொண்டிருந்த கார்த்திக் புகழேந்தியைக் கொஞ்சம் அணைக்கட்டி இந்தப் பயணங்கள் எப்படி புத்தகங்களானது கொஞ்சம் மெதுவாக கூற முடியுமா என வேண்டுகோளுடன் விடுத்தேன், ''சரிங்க ( நீண்ட சிரிப்பு)அதற்கு மதுரைதான் காரணம், யதேச்சையாக மதுரையில் வேலை காரணமாக ஒரு தெருவில் சென்று கொண்டிருக்கும்போது பழைய புத்தகக் கடைக்குச் சென்றேன் அங்கு நா.வானமாமலை, எஸ்.எஸ். போத்தையா ஆகியோர் தொகுத்த நாட்டுப்புற பாடல் புத்தகம் ஒன்றைக் கண்டேன்.
அதைப் படித்தவுடன் நாட்டார் பாடல்கள் மீது எனக்கு ஈடுபாடு வர ஆரம்பித்தது. அது தொடர்பாக என்ன செய்யலாம் என்று யோசிச்சபோது சமூக வலை தளங்களில் இயங்கிக் கொண்டிருந்ததால் முகநூல்களில் இதுதொடர்பான கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.
வழக்கம்போல் எல்லா எழுத்தாளர்களும் விதிக்கப்பட்ட பகுதி கவிதை தானே'' என்று சிரிப்புடன் பகிர்ந்துகொண்டு மீண்டும் தொடர்ந்தார்.
"பின் அந்தக் கவிதைகளை கதைகளாக்க என் நண்பர்கள் ஊக்கப்படுத்தினார்கள். தொடர்ந்து பல கதைகள் எழுதினேன். எனினும் அவற்றை ஒன்றையும் பத்திரிகைக்கு அனுப்பும் தைரியம் எனக்கு வரவில்லை. மேலும் எனது கதைகளை மற்றவர்கள் திருத்துவதில் எனக்கு விருப்பமும் இல்லை. என் கதைகளை நானே திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். பின் என் கதைகளை எல்லாம் தொகுத்து 'வற்றா நதி' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு 2014-ம் ஆண்டு வெளிவந்தது"
சிறிதளவும் இலக்கியப் பின்னணி இல்லாமல் வந்துள்ள கார்த்திக் புகழேந்தியின் முதல் படைப்பான 'வற்றா நதி' சிறுகதைத் தொகுப்பில் திருநெல்வேலி மக்களின் காதல், சண்டை, கோபம், குடும்பம், திருவிழாக்கள், நம்பிக்கைகள் இவைதான் முக்கியக் கதைக்களமே.
'வற்றா நதி'யில் வரும் 'அப்பாவும் தென்னை மரங்களும்' கதையில் கிராமத்துத் தகப்பனின் வாழ்க்கை, நமது மாடுகளை எப்படி டிராக்டர்கள் இடமாற்றம் செய்தன, இயற்கை விவசாயம் ஆகியவற்றை ஐந்துப் பக்கங்களில் உணச்சிகள் நிரம்ப சொல்லியிருப்பார்.
கிராமத்தில் அப்பாவை இழந்துவிட்டு நகரத்தின் அலுவலகத்தில் சக்கர நாற்காலியில் சுழன்று கொண்டிருக்கும் மகன்கள் இந்தக் கதையைப் படித்தால் நிச்சயம் கண்ணீர் தளும்பலாம்.
"'வற்றா நதி' யைப் படிக்காத வாசகர்களிடம் எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்?" என்று கேட்க, ''தாமிரபரணிக் கரையில் வாழ்ந்து, மாய்ந்து தங்களது எல்லா அடையாளங்களையும் தொலைத்த குடும்பங்களின் எளிய கதைகளைத்தான் வற்றா நதி கூறுகிறது'' என்றார்.
'வற்றா நதி'யைப்' பற்றி கார்த்திக் பேசும்போது அவரது பேச்சில் விண்மீன்கள் மிளிர்வதை உணர முடிந்தது. 'வற்றா நதி' கார்த்திக் புகழேந்திக்கு பெற்றுக் கொடுத்த அடையாளத்தைப் பற்றி கூறுகிறார், ''வற்றா நதி சிறுகதைத் தொகுப்புக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது முதல் புத்தகம் மூலம் எனக்கு கிடைத்த அடையாளம் என்பது மிக பெரியது அதுதான் எனக்கு பத்திரிகைத் துறையில் வேலை வாங்கித் தந்தது. அதன்பின்தான் சினிமாத் துறையும் எனக்கு அறிமுகமானது. ஒன்றுமே இல்லாமல் சென்னை வந்து ஏடிஎம் சென்டரில் வேலை பார்த்த எனக்கு புதிய அடையாளத்தையும், நம்பிக்கையையும் உருவாக்கியது 'வற்றா நதி'.
நான் பெரிதும் மதிக்கக் கூடிய, எனது விருப்பமான எழுத்தாளர்களான கி.ராஜநாரயணன், ஜோடி குருஸ் போன்றோரின் வார்த்தைகளும் எனது படைப்புக்குக் கிடைத்தன.
அதனைத் தொடர்ந்து எனது இரண்டவது புத்தகமான ஆரஞ்சு மிட்டாயும் 2016-ம் ஆண்டு வெளிவந்தது. 'ஆரஞ்சு மிட்டாய்' வளரிளம் பருவத்தினரின் கதைகளை இயல்பான மொழியில் கூறுகிறது. மேலும் அதில் வெட்டும்பெருமாள் என்ற குறுதெய்வத்தின் கதையும் கூறப்பட்டிருக்கிறது. ஒரு சாதாரண மனிதனை எப்படி ஊர்மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள் என்பதை இந்தக் கதையில் கூறியுள்ளேன்" என்று கூறும் கார்த்திக் புகழேந்தியின் இந்தக் கதை டெல்லியில் தமிழ்நாட்டின் சிறந்த 25 கதைகளில் ஒன்றாக வெளியிடப்பட்டது என்ற தகவலையும் இடையே நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
தன் கதைகளை யாரும் திருத்தம் செய்யக் கூடாது என்பதில் மிகுந்த பிடிவாதமாகவே இருக்கிறார் கார்த்திக் புகழேந்தி.
அதற்கான காரணத்தை அவர் கூறும்போது, ''ஒரு பத்திரிகையில் பொங்கலுக்காக என்னுடைய கதையைக் கேட்டிருந்தார்கள். நானும் அனுப்பி வைத்தேன். அவர்கள் அதில் நிறைய திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். எப்படி திருத்தம் செய்ய முடியும் நான் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தை என் கதைகளில் பதிவு செய்கிறேன். அந்தக் காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், சாதிய அமைப்புகள் எப்படி இருக்கும் போன்றவற்றை பதிவு செய்திருந்தேன். அவர்கள் சாதியம் போன்றவற்றை உபயோகிக்க மாட்டோம் என்று கூறினார்கள். அதை நான் அனுமதிக்கவில்லை. பின் எதையும் மாற்றம் செய்யாமல் எனது கதைகள் பதிவிடப்பட்டது'' என்று எழுத்தாளர்களுக்குரிய பிடிவாதத்துடன் தொடர்ந்தவரிடம், உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்று எதை கூறுவீர்கள் என கேட்க, "வாசகர்கள்தான் வேறென்ன இருக்க முடியும், பலர் என்னுடைய புத்தகத்தை படித்துவிட்டு தொலைபேசியில் பேசுவார்கள், என் தோழி ஒருவர் எனது கதையைப் படிக்கும்போது அவரது அப்பாவை நினைவுப்படுத்தியது'' என்று கூறினார்.
பல வெகுஜன ஊடகங்கள் எனது கதைகளைப் பாராட்டி எழுதியுள்ளன. கி, ராஜநாரயணன் போன்ற புகழ்மிக்க எழுத்தாளர்கள் எல்லாம் என் கதைகளைப் படித்துப் பாராட்டினார்கள். இவற்றை எல்லாவற்றையும் தாண்டி எனது நண்பர்கள் வாசகர்களுக்கான இடத்திலிருந்து கொண்டு எனது புத்தகங்களை படிப்பதுதான் எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.
எழுத்தாளர்களை பொறுத்தவரை பயணங்கள்தான் விசாலமான எழுத்துக்கு அடித்தளமிடும், பயணம் உங்களது எழுத்துக்கு எப்படி உதவியது?
"நிச்சயம் அது உண்மைதான், நான் வேலை நிமித்தமாகதான் முதலில் பயணப்பட்டேன். என்னுடைய ஆசிரியர் ஒன்று கூறுவார் சோற்றுக்கு ஒரு தொழில் வைத்துக் கொள், சுயத்துக்கு ஒரு வேலையைத் தேடிக் கொள் என்று. அதைதான் நான் பின்பற்றி வருகிறேன். இதனால் வருடத்துக்கு ஒரு மாதத்தையாவது பயணத்துக்கு என்று ஒதுக்கி விடுவேன். கடந்த வருடம் கூட கிழக்குக் கடற்கரைச் சாலை மார்க்கமாக இருச்சக்கர வாகனத்திலே தூத்துக்குடிக்கு பயணம் செய்தேன். இதன் மூலம்தான் கழு மரம் (அந்தக் காலத்தில் கொலைக் கருவியாக உபயோகப்பட்டது) பற்றி அறிய முடிந்தது. இதைப் பற்றி வரும் படைப்புகளில் பதிய இருக்கிறேன்.
இவ்வாறு பயணத்தின்போது மக்கள் மொழியில் எதை எல்லாம் நான் தெரிந்து கொள்கிறேனோ அதை எல்லாம் என்னுடைய கதைகளாகவும், கதாப்பாத்திரங்களாகவும் நான் உருவாக்கிக் கொள்வேன்"
இன்றைய காலத்தில் இளம் எழுத்தாளராக நீங்க உணரும் வேறுபாடு என்ன, புதிய எழுத்துக்களுக்கு நீங்கள் கூறும் அனுபவவுரை?
”எழுத்து உலகில் நிறைய மாற்றம் வந்துள்ளது. முன்பெல்லாம் நீங்க ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்றால் ஒரு மூத்த, புகழ்மிக்க எழுத்தாளர் வார்ப்பில் இருந்து கொண்டுதான் நீங்கள் புத்தகங்களை வெளியிட முடியும். அப்போதுதான் உங்களுக்கான அடையாளமும் கிடைக்கும். ஆனால் தற்போது அப்படி இல்லை.
உங்களுக்கு எழுத வரும் என்றால் போதும், உங்கள் படைப்புகளை தன்னிச்சையாக நீங்கள் பொது வெளியில் முன் வைக்க முடியும். உங்கள் படைப்புக்கும், பாராட்டு கிடைக்கலாம், திட்டும் கிடைக்கலாம், எதிர் விமர்சனங்கள் எழலாம் இவை எல்லாவற்றையும் நீங்கள் நீங்களாக இருந்து எதிர்கொள்ள வேண்டும். உங்களது படைப்புகளுக்கு மூத்த எழுத்தாளர்களிடம் இருந்து அன்பும், பாராட்டும் கிடைக்காமல் போகலாம். அதற்காக நீங்கள் தேங்கி விடக் கூடாது. இதனால் தரமான படைப்புகளை தர இயலாத சூழல் உருவாகும்.
இதற்கு தேவை எப்போது ஒரு தலைமுறைக்கு அதற்கு அடுத்த வரும் தலைமுறைக்கு இடையேயான இடைவெளி நிரப்பப்படவேண்டும் என்று நான் கருதுகிறேன். அதை தற்போதுள்ள இளம் எழுத்தாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். யார் வேண்டுமானலும் எழுத வரலாம், ஆனால் அதில் தொடர்ந்து நிலைத்திருப்பதில்தான் பிரச்சினை உள்ளது" என்று பக்குவமாக பேசும் கார்த்திக் புகழேந்தியின் அடுத்த படைப்புகளாக ’ஊருக்கு செல்லும் வழி’ என்ற கட்டுரைத் தொகுப்பும் ‘வலசை’ என்ற நாவலும் வாசகர்களை சென்றடைவதற்கான ஆயத்தப் பணியில் உள்ளன.
நேர்காணலின் இறுதியாக உங்கள் எழுத்துப் பயணம் எதனை நோக்கி இருக்கப்போகிறது என்று கேட்டதற்கு, தெரியலைங்க (சிரிப்புடன்), அப்படி இலக்கு வைத்து எல்லாம் நான் பயணிப்பது இல்லை (இலக்கு வைத்து பயணிப்பது உண்மையில் பயணம் இல்லையே என்ற வார்த்தைகளை மனதில் ஓடச் செய்து) என்று அசால்ட்டாக விடைபெற்றார்.
கார்த்திக் புகழேந்தியின் படைப்புகள்
வற்றா நதி - அக நாழிகை வெளியிடு | ஆரஞ்சுமிட்டாய் - ஜீவா பதிப்பகம்
வரவிருக்கும் படைப்புகள்
ஊருக்கு செல்லும் வழி - ஜீவா பதிப்பகம் | வலசை - புதினம் பதிப்பகம்
முந்தைய அத்தியாயம் > >புது எழுத்து: கரன் கார்க்கி - சென்னையின் இலக்கியக் குரல்!
தொடர்புக்கு > indumathy.g@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago