எனக்கு தேக திடகாத்திரம் காட்டுவதில் இஷ்டம் கிடையாது. ஓடுவது, பஸ்கி எடுப்பது, கனம் தூக்குவது, ஜிம்முக்குச் சென்று ஜம்மென்று ஆவதெல்லாம் சொகுசு சவுகரியங்களுக்கு ஹானியுண்டாக்கும். அவை எப்பவுமே நமக்கு ஆகாத காரியம். உட்கார்ந்த இடத்தில் உலகத்தை ஜெயிக்க என்னென்ன பிரயத்தனங்கள் உண்டோ, அதைச் செய்து பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை. எனது அதிகபட்ச ஆரோக்கியம் சார்ந்த எதிர்பார்ப்பு என்னவென்றால், குனிந்தால் நிமிர்ந்தால் மூச்சுப் பிடித்துக்கொள்ளாமல் இருந்தால் போதும் என்பதுதான்!
ஆ, மூச்சுப்பிடிப்பு! அது தர்ம பத்தினி இனக்குழுவைச் சேர்ந்ததொரு காத்திர இம்சை. வந்துவிட்டால் லேசில் போகாது. உருண்டு திரண்ட உடற்பந்தில் அந்து எந்தப் பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்கும் என்றும் சொல்ல முடியாது. நான் உரமிட்டு வளர்த்த சதைப்பற்று மிக்க உடலானது, விதியேபோல் அடிக்கடி அப்பிடிப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுவது வழக்கம். கடந்த சில வருஷங்களில் இந்த மூச்சுப் பிடிப்புச் சங்கடமானது ஒரு தீவிரவாத மனோபாவத்துடன் அடிக்கடி என்னை உபத்திரவப்படுத்திக்கொண்டிருந்தது. எதைக் குறைத்தால் இதைச் சரிக்கட்டலாம் என்று யோசித் துக்கொண்டிருந்தபோதுதான் எடை குறைத்தால் சரியாகும் என்று அசரீரி கேட்டது.
அங்கும் சிக்கல். நம்மால் ஓடியாட முடியாது. டயட் இருந்து குறைக்கலாம் என்றால் பசி தாங்கும் வல்லமை கிடையாது. நாவையும் நாபிக்கமலத்தையும் காயப்போட்டு வாழ்வதைக் காட்டிலும் ஜீவன்முக்தி அடைந்துவிடலாம். இது வெறும் பலவீனங்களாலான ஜீவாத்மா. பழிவாங்குதல் தகாது.
வேறென்ன செய்யலாம் என்ற தீவிர ஆராய்ச்சியில் இருந்தபோது சில உத்தமோத்தமர்கள் ஒரு சூட்சுமத்தைச் சொல்லிக்கொடுத்தார்கள். உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தி என்பதை இரு வழிகளில் உற்பத்தி செய்யலாம். முதலாவது மாவுச்சத்து மூலம். அது நாம் எப்போதும் சாப்பிடும் அரிசி பருப்பு வகையறா. இரண்டாவது கொழுப்பு மூலம். இது பலான பலான வகையறா. மாவு ஜாதி அரிசி பருப்புகளைக் குறைத்து, கொழுப்பு ஜாதி பால் பொருட்கள் மற்றும் கொட்டை வகையறாக்களை உண வாக்கிக் கொள்வதன்மூலம் எடை யைக் குறைத்துவிட முடியும்.
இத்தகவல் மிகுந்த கிளுகிளுப்பைக் கொடுத்தது. ஏனென்றால், பகவான் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்புறம் சீரார் தயிர் கடைந்து, மோரார் குடமுருட்டி, ஆராத வெண்ணெய் விழுங்குவதென்றால் நமக்கு அல்வா உண்பது போல. எனவே முயற்சி செய்து பார்த்துவிடலாமே?
உடலியக்கத்துக்கான மொத்த சக்தியில் எழுபது சதவீதத் தைக் கொழுப்பில் இருந்து பெறுவது. ஒரு இருபத்தி ஐந்து சதத்தைப் புரதத்தில் இருந்து கபளீகரம் செய்வது. (இது கொஞ்சம் பேஜார். தாவர ஜீவஜந்துக்களுக்கு எத்தனை பரதம் ஆடினாலும் புரதம் கிட்டுவது கடினம். நிறைய மெனக்கெட வேணும்.) ஒரு ஐந்து சதம் போனால் போகிறது, மாவுப் பொருள் வழிச் சக்தி.
இதுவே அசைவ உணவாளிகளென்றால் மேற்படி ஐந்து சத மாவுச் சத்து கூட இல்லாமல் மொத்தத்தையுமே கொழுப்பு மற்றும் புரதத்தில் இருந்து எடுத்துவிட முடியும். நமக்குப் பிராப்தம் அப்படி இல்லையே? விளைகிற எந்தக் காய்கறியைத் தொட்டாலும் அதில் கார்போஹைட்ரேட் உண்டு. காதற்ற ஊசிகூடக் கடைவழிக்கு வரும். ஆனால் 'கார்ப்'பற்ற காய் எதுவும் கடைத்தெருவுக்கு வராது என்பதுதான் யதார்த்த பதார்த்தம்.
விஷயத்துக்கு வருகிறேன். எடையைக் குறைத்தே தீருவது என்று முடிவு பண்ணியாகிவிட்டது. மேற்படி கொழுப்புப் புரட்சிக்கும் மனத்தளவில் தயாராகி ஒரு மருத்துவ சீலரை அணுகினேன். அவர் என் நண்பர். பெயர் புரூனோ. என்னைப் போலவே அகன்று பரந்த தேக சம்பத்து உள்ளவர். பிரமாதமாக ஜோதிடமெல்லாம் பார்ப்பார். காரசாரமாக எழுதுவார். வம்படியாக ஃபேஸ்புக் சண்டைகளில் பங்கு பெறுவார். மட்டுமன்றி, ஓய்ந்த பொழுது களில் மூளை, நரம்பு, மூட்டுப் பிராந்தியங்களில் உண்டாகும் வியாதிகளுக்கும் சொஸ்தமளிக்கும் வினோத ரசமஞ்சரி அவர். சொல்லும், வைத்தியரே! நான் என்ன செய்யலாம்?
ஒரு பேப்பரை எடுத்தார். மூன்று வரி எழுதினார். பசி கூடாது. சீனி கூடாது. தானியம் கூடாது. முடிந்தது கதை.
மேலோட்டமாகப் பார்த்தால் ரொம்ப சுலப சாத்தியமாகத் தெரியும். கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால் இது பகாசுர வம்சத்தையே கபளீகரம் செய்யக்கூடியது என்பது புரியும்.
பசி கூடாது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் சீனி கூடாது என்றால்? இனிப்பான எதுவும் கூடாது என்று அர்த்தம். சீனிதானே கூடாது? வெல்லம் கூடும், கருப்பட்டி கூடும், தேன் கூடும் என்றெல்லாம் சொல்லப்படாது. அதெல்லாம் அபிஷ்டுத்தனம்.
தானியமென்றால் அரிசி தொடங்கி கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், க.உ.து.ப. பருப்புகள் வரை எதுவும் கூடாது. இதில் சிறுதானியம் என்று சொல்லப்படுகிற குதிரைவாலி, தினை, சாமை ரகங்களும் விலக்கல்ல.
அட எம்பெருமானே, ஒரு சொகுசு ஜீவாத்மா வேறு எதைத்தான் தின்று உயிர் வாழும்?
டாக்டரான நல்லவர் ஒரு தீவிர அசைவி. நடப்பன, ஊர்வன, பறப்பனவற்றில் செரிப்பன என்னவாக இருந்தாலும் அவருக்குச் சம்மதமே. அவற்றில் தானியமில்லை. சீனி இல்லை. அவை குப்பையுணவும் இல்லை. தவிரவும் பெரும்பாலும் நற்கொழுப்பு. தரமான புரதம். இட்லி மாவு, அடை மாவு தொடங்கி எந்த மாவுச் சத்தும் கிடையாது.
‘என்னைப் பார், எப்படி இளைத்துவிட்டேன்!' என்று காட்டிக்காட்டி இரும்பூதெய்தினார். பேசியபடியே ஒரு சின்ன டப்பாவில் எடுத்து வந்திருந்த வறுத்த பாதாமை மொக்கிக்கொண்டிருந்தார்.
அவர் இளைத்திருந்தது உண்மையே. அதுவும் நம்ப முடியாத அளவில்.
ஆனால் பாவப்பட்ட பாராகவன் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிறவனல்லவா? அவன் எப்படி ஓடிய ஆட்டையும் பாடிய மாட்டையும் பசித்துத் தின்னுவான்? தவிரவும் எனக்குப் பசிகூடப் பெரிய விஷயமில்லை. உண்ணுவதில் ருசி பெரிய விஷயம்.
உங்களுக்கு ஒரு தயிர்சாதம் எப்படித் தயாரிப்பது என்று தெரியுமா? தயிர் சாதத்துக்குத் தேவை, தயிரல்ல. நன்கு சுண்டக் காய்ச்சிய முழுக் கொழுப்புப் பால் மட்டுமே. பால் சாதம் கலந்து அரை ஸ்பூன் புளிக்காத தயிரை மேலே தெளித்துவிட்டால் போதும். அதுவே சில மணி நேரங்களில் தயிர்சாதமாகிவிடும். புளிக்காத அதிருசித் தயிர் சாதம். மேலுக்கு நீங்கள் வெள்ளரி போடுகிறீர்களோ, கேரட் போடுகிறீர்களோ, மாதுளைத் தூவுகிறீர்களோ, முந்திரி வறுத்து சொருகுகிறீர்களோ, அது உங்களிஷ்டம். என்னைப் போன்ற ரசனையாளி என்றால் ஒரு கை வெண்ணெய் அள்ளிப் போட்டுக் கலக்கத் தோன்றும். தாளிக்கும் கடுகை நெய்யில் தாளித்து, கொஞ்சம் மூடி வைத்திருந்து பிறகு திறந்து உண்டு பாருங்கள். பகவான் கிருஷ்ணரும் பாராகவனும் அவ்வாறு உண்டு வளர்ந்தவர்களே.
எனவே, ருசிசார் சமரசங்களே இல்லாத ஒரு சவுக்கியமான மாற்று உணவைக் கண்டறிந்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன். அதற்கு முதலில் நீ சமைக்கக் கற்க வேண்டுமடா என்றான் என்னப்பன் இருடீகேசன்.
சமையல் என்ற ஒன்றில்லாமல் சாப்பாடு என்ற இன்னொன்று வராது என்ற அளவில் மட்டுமே அதுநாள் வரை நான் அறிந்திருந்தேன். இப்போது நானே சமைப்பதென்றால் நல்லது பொல்லாததற்கு யார் பொறுப்பு?
நானேதானாயிடுக என்றான் நம்பெருமான். விட்டு வைப்பானேன்? முதல் காரியமாக சரவணா ஸ்டோர்ஸுக்குப் போய் ஒரு ஏப்ரன் வாங்கி வந்தேன்.
- மேலும் ருசிப்போம்…எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago