குழந்தைகளுக்கான பயணத்தில் 70 ஆண்டுகள் நிறைவு செய்த யுனிசெப்

By க.நாகப்பன்

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) குழந்தைகளுக்கான பயணத்தில் 70 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

இந்த சூழலில் யுனிசெப் பற்றி சில தகவல்களை அறிந்துகொள்வோம்.

யுனிசெப் உருவான விதம்

யுனிசெப் (ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்) 70 ஆண்டுகளுக்கு முன் 11 டிசம்பர் 1946 அன்று ஐக்கிய நாடுகள் சபை பொதுக் குழுவில் உருவாக்கப்பட்டது. ஐரோப்பியாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான பஞ்சம் மற்றும் பிணி நீக்கும் முயற்சியில் உணவு, உடை மற்றும் நலவாழ்வு சேவைகளை வழங்கி தனது பயணத்தைத் தொடங்கியது.

யுனிசெப் நோக்கம்

குழந்தைகளின் உரிமைகள் மேம்படவும் பாதுகாக்கப்படவும் உழைத்து வருகிறது யுனிசெப் அமைப்பு. குறிப்பாக வாய்ப்பு மறுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நலவாழ்வு சேவைகள், ஊட்ட உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், கல்வி, வன்முறை, இழிசெயல் மற்றும் சுரண்டல்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் அவர்களின் பங்கேற்பை வளப்படுத்தும் பணிகளில் முன்முனைப்போடு செயலாற்றி வருகிறது.

நோபல் பரிசு

குழந்தை உரிமை பிரகடனத்தை ஐ. நா. பொது சபை தீர்மானமாக ஏற்றுக்கொண்ட 1959 முதல் யுனிசெப்பின் செயல்களில் வேகம் பிடித்தது. மேலும் 1989ல் ஏற்று கொள்ளப்பட்ட ஐ நா குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையும் (UNCRC), 1990ல் நடைபெற்ற குழந்தைகளுக்கான சர்வதேச மாநாட்டின் மூலமும், 2002ல் நடைபெற்ற ஐ நா சபையின் குழந்தைகளுக்கான சிறப்பு பொதுக்குழு கூட்டமும் குழந்தை உரிமைகள் சர்வதேச அளவிலும் யுனிசெப்பிலும் மைய நிலையில் நிறுத்தியது.

யுனிசெப்பின் இந்த பணிகளை அங்கீகரிக்கும் வகையில் 1965ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவில் யுனிசெப் பங்கு

இந்தியாவில் யுனிசெப்பின் பங்கும் பயணமும் 1949ல் இந்திய அரசோடு இணைந்து பென்சிலின் தயாரிப்பு தொழிற்சாலை உருவாக்கியதில் இருந்து தொடங்கியது. இதற்கு யுனிசெப் தொழில்நுட்ப மற்றும் உபகரணங்களை வழங்கியது. இந்தியாவின் முதல் DDT தொழிற்சாலை (DDT plant) 1954ல் யுனிசெப் வழங்கிய இயந்திரத்தோடு மலேரியா ஒழிப்பு திட்டத்திற்காக அமைக்கப் பெற்றது

இந்தியாவில் வெண்மைப் புரட்சி ஏற்பட குஜராத் மாநிலத்தில் ஆனந்த் பால் பதனிடும் தொழிற்சாலையை உருவாக்குதலில் 1954ல் யுனிசெப் பங்கெடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்த பத்தாண்டுகளில் யுனிசெப் உதவியுடன் 13 பால் பதனிடும் தொழிற்சாலைகள் உருவாகின. இன்று பால் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது.

நரம்பு சிலந்தி நோய் (guinea worm) தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு 1983லும், நோய் தடுப்புக்கான தேசிய பிரசாரத்தில் 1985லும், போலியோ நோய் ஒழிப்பில் 1995 முதல் 2012 வரையிலும் யுனிசெப் ஆதரவளித்தது.

இன்று இந்தியாவில் இருந்து 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மார்க் I, II, மற்றும் III வகை கை பம்ப்புகளை முதலில் உருவாக்கியதில் யுனிசெப் பெரும் பங்கு வகித்தது. 1999ல் நிகழ்ந்த ஒடிசாவின் பெரும் சூறாவளி, குஜராத் நிலநடுக்கம் 2001, சுனாமி 2004 மற்றும் உத்தரகண்ட் வெள்ளம் 2014 போன்ற பேரிடர்களின் போது மனிதாபிமான உதவிகளை யுனிசெப் வழங்கியது

தமிழகத்தில் யுனிசெப் பங்கு

தமிழகத்தில் யுனிசெப் அமைப்பு அரசு துறைகள், நீதித்துறை, அரசு சாரா சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களோடு இணைந்து குழந்தைகளின் உரிமைகளை போற்றி பாதுகாக்கவும் ஒவ்வொரு குழந்தைக்கும் நியாயமான வாய்ப்புகள் கிடைத்திடவும் உழைத்து வருகிறது.

சுனாமி பேரிடரின் போது 2004 - 2007 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் யுனிசெப் மிக முக்கிய பங்காற்றியது. குழந்தை நேய மருத்தவமனை முயற்சியில் 1994 - 2004 வரை உதவியது. பிறந்த சிசுக்களின் போக்குவரத்துக்கான ஆம்புலன்ஸ் சேவைக்கு 2005லும் பள்ளிகளில் செயல் வழிக் கற்றலுக்கு 2003 - 2008லும், பருத்தி விதைதலில் குழந்தை தொழில் முறை அகற்ற 2009 - 2014 கால கட்டத்திலும் உதவியது.

தமிழக யுனிசெப் தலைவர்

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் யுனிசெப் தலைவராக ஜாப் ஜக்காரியா தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கருவுறுதலுக்குப் பிறகு குழந்தையின் முதல் 1000 நாட்கள் அந்தக் குழந்தையின் சுகாதாரத்தையும் ஊட்டச்சத்து நிலையையும் முடிவு செய்வது மட்டுமல்லமால், அக்குழந்தையின் புத்திக் கூர்மை, உயரம்,பள்ளியில் செயல்படும்விதம், மற்றும் அவரது வாழ்நாளில் ஒரு தனிநபரின் சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றைகூட முடிவு செய்கிறது என்று யுனிசெப் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதுகுறித்த குழந்தையின் 1000 நாட்களும் 21 தலையீடுகளும் என்ற யுனிசெப் ஆய்வறிக்கை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

யுனிசெப் ஆய்வுகள்

* ஏழைக்குழந்தைகளுக்கு உதவு வதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெப்) கோரியுள்ளது.

உலக குழந்தைகளின் நிலை குறித்த வருடாந்திர அறிக்கையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் விளைந்த பயன்களாக, 1990-ம் ஆண்டிலிருந்து சிசு மரணம் 53 சதவீதம் குறைந்துள்ளது, அதிகபட்ச வறுமையின் அளவு குறைந்திருப்பது ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதேசமயம், தடுக்க முடியக் கூடிய நோய்களுக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 5 வயதுக்கு உட்பட்ட 6.9 கோடி குழந்தைகள் பலியாகக் கூடும், 16.7 கோடி குழந்தைகள் ஏழ்மையால் பாதிக்கப்படக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

* உலக அளவில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. உலகில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகிறது என ஐ.நா. அமைப்பின் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

* உலகில் உள்ள அனைத்து குழந்தைகளையும் நாம் காக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். சிறுவர்களை நாம் பாதுகாப்பும் கண்ணியமிக்கவர்களாக வளர்க்க வேண்டும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்