சென்ற வாரக் கந்தாயத்திலே குறிப் பிட்ட விரோதி கிருது வருஷத்து ஜனனதாரி பாராகவன், எனக்கு ரொம்ப நெருக்கமான சினேகிதன். எவ் வளவு நெருக்கம் என்று கேட்பீர் களானால், வங்கியில் பணமெடுக்கப் போகிறவர் நிற்கிற வரிசை நெருக்கத் தைக் காட்டிலும் பெரிய நெருக்கடி நெருக்கம். நடை உடை பாவனையில் ஆரம்பித்து, எடை இடை சோதனை வரைக்கும் என்னை அப்படியே காப்பியடிப்பது அவன் வழக்கம். ரொம்ப முக்கியம், அவனும் ஒரு சிறந்த சாப்பாட்டு ராமன்!
ஓர் உதாரணம் சொன்னால் உங் களுக்கு அவனை அல்லது என்னைப் பின் தொடரலாமா? வேண்டாமா என்று முடிவு செய்ய உபகாரமாயிருக்கும்.
ஒரு சமயம் அவனும் நானும் உத்தி யோக நிமித்தம் காஞ்சிபுரத்துக்கு சிறு பயணமொன்று மேற்கொண்டிருந் தோம். உத்தியோக நிமித்தமென்பது ஒன்றரை மணி நேர வேலையே. எனவே, அதை முடித்த பிற்பாடு என்ன செய்யலாம் என்று கேட்டேன். ஒரு நிமிஷம் இரு என்று சொல்லிவிட்டு பாராகவன் யாருக்கோ போன் செய் தான். அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது. செட்டியார் கடை போன்தான். ஒரு ஏழெட்டு நிமிடம் பேசியிருப்பான். கவனமாக என்னிடம் காசு வாங்கி கடைக்காரருக்குக் கொடுத்துவிட்டு, ‘‘நாம் சில மணி நேரம் இங்கே ஊரைச் சுற்றுவோம். இரவு ஒன்பது மணிக்குக் கிளம்பி சின்ன காஞ்சிபுரத்துக்குப் போகிறோம்’’ என்று சொன்னான். பேருக்கொரு தம்பி இருந்தென்ன? ஊருக்கே ஒரு தம்பி உண்டென்றால் அது இங்கேதான்!
மணி அப்போது மதி யம் பன்னிரண்டரை என்று நினைவு. ஒன்றிரண்டு மணி நேரம் சுற்றிக்கொண்டே இருந்தோம். களைப்பாகிவிட்டது. டேய், இரவு வரை ஊர் சுற்றிக்கொண்டாவது எதற்காக அல்லது யாருக்காகக் காத்திருக்க வேண்டும்? திருவெஃகா யதோத்காரி யைச் சேவிக்கவா? திருமழிசையாழ்வார் அளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் சுமாராக எனக்கும் வெண்பா எழுத வரும். விரும்பிக் கேட்பாரானால் ஆழ்வா ரைப் போல் அவர் பேருக்கொன்று எழுத ஆட்சேபணை இல்லை. எனக்காக அவர் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு நான் நின்றிருந்த அரப்பணச் சேரிக்கே வர முடிந்தால் இன்னும் விசேடமாயிற்றே? கால் வலி கொல்கிறது மகனே.
இல்லை. இது பக்தி சம்பந்தப்பட்ட தில்லை. பசி சம்பந்தப்பட்டது என்று பாராகவன் சொன்னான். மாலை வரை நடந்து தீர்த்தால் பசி பிறாண்டும். அதோடு ஒரு சினிமாவுக்குப் போவோம். உள்ளூர் தியேட்டரில் ‘என் தங்கை கல்யாணி’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. கொலைப் பசியோடு கூட உணர்ச்சி வேகங்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு சிறு பயணம் மேற்கொள்வோம். சின்ன காஞ்சிபுரம். உலகின் அதி உன்னத ஊத்தப்பமானது அங்கே உள்ள ஒரு ராயர் மெஸ்ஸில்தான் கிடைக்கும்.
ஆன்மாவுக்கு நெருக்கமானவன் யாருக்கோ போன் செய்து விசா ரித்து இப்படியொரு தகவலைச் சொல்லும்போது நான் எப்படி மறுக்க முடியும்? அன்று முழுநாளும் சுற்றித் தீர்த்துவிட்டு சின்னக் காஞ்சிபுரம் ராயர் கடைக்குப் போய்ச் சேர்ந்தபோது மணி எட்டே முக்கால்.
அந்த மெஸ்ஸானது இருட்டிய பிறகுதான் திறக்கும். எட்டு மணிக்கு மேல்தான் கூட்டம் வரும். பதினொரு மணிக்குள் எப்படியும் முன்னூறு நாநூறு ஊத்தப்பங்கள் கபளீகரமாகிவிடும் என்றார்கள்.
இது எனக்கு வியப்பளித்தது. நான றிந்த காஞ்சிபுரமானது, இட்லிக்குப் புகழ்பெற்றது. ரெகுலர் இட்லியல்ல. ‘காஞ்சிபுரம் இட்லி’ என்பது வைஷ்ணவ ருசி அடையாளங்களுள் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாறு கொண்டது. வரதராஜப் பெருமாள் இன்றளவும் தளதளவென மின்னுபுகழ் தேக சம்பத்தோடு இருப்பதற்கு அதுவே காரணம்.
மூன்று தம்ளர் அரிசிக்கு ஒரு தம்ளர் உளுத்தம்பருப்பு. இரண்டையும் சேர்த்தே அரைக்க வேண்டும். கிரைண்டரெல்லாம் அநாசாரம். உரலில் இட்டுத்தான் அரைக்கவேண்டும். அது வும் அரை நறநறப்புப் பதத்தோடு அரையல் நின்றுவிட வேண்டும். பிறகு சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை என ஐந்து ஐட்டங்களை அதே நறநறப்புப் பதத்தில் இடித்து அதன் தலையில் கொட்டி, மேலுக்கு அரை தம்ளர் உருக்கிய நெய், இரண்டு கரண்டி நல்லெண்ணெய் சேர்ப்பது அவசியம். உப்பு சேர்த்துக் கிளறி பொங்க வைத்துப் பிறகு இட்டு அவித்தால் ‘இட்டவி’ என்கிற இட்லி தயார். எள் சேர்த்து அரைத்த மிளகாய்ப் பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் இந்தக் காஞ்சிபுரம் இட்லியைக் கிலோ கணக் கில் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். நிறுத்தத் தோன்றாது.
ஆனால், இங்கு இதனை நிறுத்தி விட்டு மேற்படி ராயர் கடை ஊத்தப்பத் துக்கு வருவோம். நான் அங்கே நான்கு ஊத்தப்பங்களுக்கு ஆணை கொடுத்தேன். காலை சாப்பிட்டதற்குப் பிறகு வேறெதையும் உண்டிராதபடியால் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. இத்தனை மெனக்கெட்டுக் காத்திருந்து வந்திருக்கும் ராயர் கடை ஏமாற்றிவிடக் கூடாது என்று தவிப்பு ஒருபுறம். பத்து மணிக்குமேல் இந்த வெண்ணைக்குச் சென்னை செல்லப் பேருந்து கிட்டுமா என்கிற பயம் ஒருபுறம்.
எல்லாம் சிறிது நேரம்தான். ஊத்தப்பங் கள் வந்தன. பொன்னிறத்துப் பெண் ணுக்கு சந்தனக்காப்பு இட்டாற்போன்ற தொரு நிறம். நடுநடுவே குழித்துக் கொண்ட ஓட்டைகளில் உலகளந்த பெருமாள் உறைந்திருக்கலாம். இதிலும் நெய் - நல்லெண்ணெய் கலந்திருந்ததை நாசி காட்டிக்கொடுத்தது. தொட்டதும் சுட்டதில் ஒரு சுகமிருந்தது. விண் டெடுத்து வாயில் இட்டபோது விண்டுரைக்க முடியாத அதிருசியை அனுபவித்தேன்.
ஒரு விஷயம். தோசை மாவு புளித்தால் ஊத்தப்பம் என்பது அக்வாகார்டில் வடிகட்டிய அயோக்கியத்தனம். ஊத்தப் பத்துக்கு நிறைய மெனக்கெட வேண் டும். அதிகம் புளிக்காத மாவில் சேர்க்கப்படும் ரவையின் அளவு இதில் முக்கியம். தக்காளி, கேரட், வெங்காயம், குடைமிளகாய்த் தூவல் முக்கியம். விதை எடுத்த பச்சை மிளகாயின் நேரடி வாசனை அதிமுக்கியம். மாவில் சீரக, பெருங்காயச் சேர்மானம் அனைத்திலும் முக்கியம். இவை அனைத்துக்கும் பிறகு சமைப்பவரின் பொறுமை. வருடும் சூட்டில்தான் அடுப்புத் தீ இருக்க வேண்டும். ஒரு பக்கம் வெந்து முடிக்க இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகலாம். திருப்பிப் போட்டு மூடி வைத்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்கள்.
உலகத்தர ஊத்தப்பம் செய்வதென் பது ஆயகலை அறுபத்து நான்கைவிட அசகாயக் கலை. அதை அந்த ராயர் மெஸ்ஸில்தான் நான் உணர்ந்தேன். என்ன ருசி! எப்பேர்ப்பட்ட ருசி! கிரங்கிப் போய் உண்டுகொண்டிருந்தபோது, ‘‘பொடி ஊத்தப்பம் கொண்டு வரவா?’’ என்றார் ராயர். பொடி தோசை போலப் பொடி ஊத்தப்பம் போலும். சரி அதற்கென்ன? கொண்டு வாருங்கள்.
வந்தது. ஒரு விள்ளல். அடுத்த விள்ளல். மூன்றாவது விள்ளலில் நான் அலறியேவிட்டேன். ‘‘ஐயா இது என்ன பொடி? எப்படி இதில் இத்தனை ருசி!’’
கல்லாதாரி சிரித்தார். ‘‘என்ன பொடின்னு தோணறது?'’ என்று எதிர்க் கேள்வி கேட்டார்.
அது மிளகாய்ப் பொடிதான். அதைத் தாண்டி அதில் வேறு ஏதோ கலந்திருக் கிறது. என்னவாயிருக்கும்? அவர் சொல்ல வில்லை. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டு, விடைகொடுத்துவிட்டார்.
ஏற்கெனவே சுண்டலின் மேலிட்ட வண்டலின் சூட்சுமம் புரியாது குழம்பிக் கொண்டிருந்தவனுக்கு இது இரண் டாவது தாக்குதல். ஏதேது, முடியின்றி மூவுலகில்லாதது போலப் பொடி யின்றி உணவின் ருசியில்லை போலிருக்கிறதே?
சரி, முதலில் பொடியைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிப் பார்த்துவிடுவோம் என்று அன்று முடிவு செய்தேன்.
- ருசி தொடரும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago