காலத்தின் வாசனை | இலை போயாச்சு!

By தஞ்சாவூர் கவிராயர்

சென்னை ஓட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட உட்கார்ந்தேன். இலை போட்டார்கள். தொட்டுப் பார்த்தேன். வாழை இலை வடிவத்தில் கத்தரித்த பிளாஸ்டிக் வாழை இலை. நான் எழுந்துகொண்டேன். “சார், என்ன ஆச்சு?” என்றார் இலை போட்டவர். “ நிஜமான வாழை இலையில்தான் சாப்பிடுவது வழக்கம்” சொல்லிக்கொண்டே வெளியேறினேன்.

“சாருக்கு நிஜமான வாழை இலை வேணுமாம்” என்ற கேலியும் மற்றவர்கள் சிரிப்பதும் கேட்டது.

நாள்தோறும் வீடுகளில் வாழை இலையில் சாப்பிட்ட காலம் ஒன்று இருந்தது. தெருவில் “வாழை இலை…வாழை இலை…” என்று கூவி விற்பார்கள். வாழை இலை சாப்பாட்டுக்குத் தனி ருசி உண்டு. சூடாகப்பரிமாறிய சாதத்தின் சுவையை வாழை இலையின் வாசனை கூட்டிவிடும். எளிய உணவைக் கூட வாழை இலையில் பரிமாறினால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

தஞ்சாவூர் அருகில் உள்ள குக்கிராமத்தில் வசித்த நண்பரைப் பார்க்க இரண்டு மூன்று பேர் முன்னறிவிப்பு இல்லாமல் போய்விட்டோம்.

மழை பெய்துகொண்டிருந்தது. அந்த வேளையிலும் நண்பரின் அம்மா கொல்லைப்புறத்துக்கு ஓடிப்போய் வாழை இலை கொய்துவந்து சாப்பாடு பரிமாறினார்.

பச்சைப் பசேல் என்ற குருத்து நுனி இலைகள்… அதில் ஆவி பறக்கும் வெள்ளை வெளேர் சாதம். வற்றல் குழம்பு, கீரை மசியல், சுட்ட அப்பளம் அவ்வளவுதான். அந்தத் தாய் தன் அன்பை இலையாக்கிப் பரிமாறிய அனுபவம் இன்று வரை மறக்க முடியவில்லை.

இலையைப் பார்த்த மாத்திரத்தில் இது பூவன் இலை, மொந்தன் இலை என்று பெரியப்பா சொல்லிவிடுவார். அவருக்கு வாழை இலை கிடைக்காவிட்டால், மந்தாரை இலை அதுவும் இல்லாவிட்டால், தாமரை இலை. அப்போதெல்லாம் தஞ்சாவூரில் தாமரைக் குளங்கள் நிறைய. தாமரை இலைக்குப் பஞ்சமில்லை. தென்னை ஓலைகளை ஈர்க்குச்சியால் தைத்து இலையாக்கி, அதில் சாப்பிடுவதும் உண்டு. வாழைப்பூ மடலில் சாதம் பிசைந்து சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். வாழை மரத்தின் பட்டையைத் தைத்து இலையாக்கிக்கொள்வதும் உண்டு.

பெரும்பாலும் வாழை மரப் பட்டையில் வைதவ்யக் கோலம் பூண்டோருக்குச் சாப்பாடு தருவது வழக்கம். வீட்டுக்கு வீடு சருகுக் கட்டு இருக்கும். சருகில் நீர் தெளித்தால் அது உயிர்பெற்று விரிந்துவிடும். அதன் பின் பக்கம் பொன் நிறத்தில் மினுமினுக்கும். அந்தப் பகுதியில் சாப்பிடக் கூடாது. மங்கலான பகுதியில்தான் சாப்பிட வேண்டும்.

நான் மட்டும் மகாராஜாவாக இருந்தால், ‘சருகில் பிழிந்துவைக்கப்பட்ட பழைய சாதத்துக்கும் வடுமாங்காய்க்கும் பரிசாக, ராஜ்யத்தையே கொடுத்துவிடுவேன்’ என்றார் ஒரு வாழைச் சருகு ரசிகர். வாழை இலையின் நடுவே சோற்றைப் பெரிதாகக் குவித்து, அதில் சாம்பார் குளம் கட்டிச் சாப்பிடுவதும், இலையில் ஓடும் பாயசத்தையும் ரசத்தையும் சிந்தாமல் சிதறாமல் அள்ளிப் பருகும் லாகவமும் எல்லோருக்கும் கைவராது.

என் அமெரிக்க நண்பர் “வாழை இலையில்தான் சாப்பிடுவேன்” என அடம் பிடிப்பார். ஆனால், சாப்பிட முடியாமல் அவர் படுகிற கஷ்டத்தைப் பார்த்து நாங்கள் சிரிடா.. சிரி.. என்று சிரிப்போம்.

தஞ்சை ஓட்டல்களில் ‘சாப்பிட்ட பின் இலை எடுக்கவும்’என்று ஒரு போர்டு தொங்கும். வீடுகளில் விருந்தாளிகளை இலை எடுக்க விட மாட்டார்கள்.

வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்கள் ஒருமுறை நண்பர் வீட்டு விருந்தினை ரசித்துச் சாப்பிட்டார். சாப்பிட்ட பின் இலையை எடுத்துப்போட முனைந்த வரைப் பார்த்து, அந்த வீட்டுப் பெண்மணி ‘இலையை வெச்சுடுங்க’ என்று பதறியபடி சொல்ல ‘அதையும் சாப்பிடுகிற வழக்கமில்லை’ என்றாராம் கி.வா.ஜ. கிராமத்தில் இலை பறிக்கக் கத்தியெல்லாம் பயன்படுத்த மாட்டார்கள். நகத்தை வைத்துச் சுழற்றி லாகவமாகக் கத்தரித்துவிடுவார்கள். கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடுவது மரபு. ‘பச்சை’யான ஆணாதிக்கம்!

தஞ்சாவூர் தாட் இலையில் சாப்பாடு போட்டார்கள் என்று பெருமையாகச் சொல்வது உண்டு. தாட் இலை பெரிது பெரிதாக இருக்கும். இப்போதெல்லாம் திருமண விருந்துகளில், எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும் முகம் சுளிக்காமல் பிளாஸ்டிக் தட்டேந்தி உணவைப் பெற்றுக்கொள்கிறார்.

கும்பல் கும்பலாக நின்றபடி சாப்பிடும் அவர்களின் முகத்தில் வழியும் பெருமிதத்தைப் பார்க்க வேண்டுமே! விருந்துக் கூடங்களிலும்,வீடுகளிலும் சாப்பாடு தயார் என்பதை உணர்த்த முன்பெல்லாம் ஒரு குரல் உரத்துக் கேட்கும்.

‘இலை போட்டாச்சு!’

இன்று இதையே வருத்தத்துடன் மாற்றிச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

‘இலை போயாச்சு!’

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்