யாரை வதைத்து யாரை உயர்த்தும் நோட்டு உத்தி?- இன்னொரு பார்வை

By கிருத்திகா தரண்

எத்தனையோ பிரச்சினைகள், கஷ்டங்களை மீறிய கேலி, கிண்டல்கள், கலாய்ப்புகளுடன் நம்பிக்கையை இழக்காமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் நிலைமை மேம்பட்டு வருவதை கண்கூடாக காண முடிகிறது.

செல்லாத நோட்டு அறிவிப்பு வந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் எனது ஃபேஸ்புக் பதிவு: "கார்ப்பரேட் பணநாயகம் தொடக்கம்".

அந்த சந்தேகம் மனதில் இருந்து இந்த நொடி வரை போகவில்லை. சில நாட்கள் இந்த நடவடிக்கைகளை கேலிப் பொருளாய் சிரித்துச் சென்றாலும், பிறகு ஒருநாள் 'என்ன இருந்தாலும் இந்தியாவில் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதமரை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அவர் ஒரு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு நடவடிக்கை எடுத்து இருக்கும்போது, தொடர்ந்து அதை விமர்சித்து எதிர்மறை எண்ணத்தை இன்னும் ஆழப்படுத்த வேண்டாம்' என்று நிறுத்திக்கொண்டேன்.

சீனாவில் பொருளாதார வளர்ச்சி சீரான பாதையில் செல்வதை மறுக்க முடியாது. அவர்கள் எம்.என்.சி, கார்ப்பரேட்களை வளரவிட்டார்களா? இல்லை, உள்ளூர் தொழிலதிபர்களை வளர விட்டார்களா? என்று கூர்ந்து கவனித்தால், அங்கு சிறு, குறு தொழில்கள் செய்யும் பல சிறு அதிபர்கள் மிக அதிகம் என்பதைக் காண முடிகிறது. அதுவும் நம் அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடும் தேசம்தான். ஆனால், கூகுளுக்கு கூட மாற்றுத் தேடுதளம் வைத்திருக்கிறார்கள்.

எந்த நாட்டில் எந்தப் பெருள் தயாரித்தாலும், சீனாவில் ஒரு கிராமத்தின் கடைகோடி சிறு தொழிலதிபர் அதேபோன்ற பொருளை தயாரித்து விற்றுக் கொண்டிருப்பார். எம்.என்.சி. முதலான அந்நிய சக்திகளை உள்ளே விடாமல், தங்கள் நாட்டில் காபி அடித்தோ, கற்றுகொண்டோ சிறு குறு வியாபாரிகளை அடித்தளமாக கொண்டு முன்னேறுகிறார்கள். அதேநேரத்தில் வரிகளை குறைத்து எம்.என்.சி-யை உள்ளே விட்டு வியாபார தந்திரம், தொழில்நுட்பம் எல்லாம் கற்றுக்கொள்ள தயங்குவதும் இல்லை.

சீனா பின்பற்றும் 'மாடல்' சரி என்று சொல்லவில்லை. அனால், அமெரிக்க பயணம் மேற்கொண்டு இருந்தபோது ஒன்றை கவனித்தேன். பெரும்பாலும் ஹோட்டல், பார், சில சிறு சேவைகள் தவிர சிறு கடைகள் எங்குமே இல்லை. ஒவ்வொரு ஊரிலும், ஏரியாவிலும் ஒரு பெரிய திடல் போன்ற இடத்தில் மால்கள், சூப்பர் மார்க்கெட்கள் இருக்கும். பெரும்பாலும் காஸ்ட்கோ, வால்மார்ட், டார்கெட் இல்லையெனில் அமேசான் முதலானவை என்ன பொருட்கள் இறக்குமதி செய்கிறார்களோ அவைதான் அமெரிக்காவின் பொருட்கள். எனக்கு தோன்றியது இதுதான்: மொத்த அமெரிக்கர்களும் என்ன, என்ன பொருட்களை தேர்ந்து எடுப்பது என்பது குறிப்பிட்ட பத்து முதலாளிகள் கைகளிலும் சிக்கி உள்ளது. வெளித் தோற்றத்துக்கு சுதந்திரமாக இருப்பதுப் போல இருந்தாலும், மறைமுகமாக நமக்கு பொருளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இல்லை என்பதை உணர முடிகிறது.

பாசி மணி கடைகள், பெட்டிக் கடைகள், தெருவோர தள்ளுவண்டி சாப்பாடு, மளிகைக் கடைகள் முதல் மிகப் பெரியசிலை வடிமைப்பாளர் வரை தனக்கென எந்த ஊடகமும் இல்லாமல், இந்தியாவில் தனிப்பட்ட மார்க்கெட் பிடிக்கக் கூடிய சுதந்திரமும் வாய்ப்பும் உண்டு. அமெரிக்காவில் வெளியே உண்பது முக்காவாசி உணவு செயின் கடைகளில்தான் நடக்கிறது. ஸ்டார் பக்ஸ், பர்கர் கிங், மெக் டொனால்ட்ஸ், கே.எப்.சிதான் கண்களில் பட்ட இடமெல்லாம்.

நம்ம ஊரில் ஒரு தள்ளு வண்டியில் ஏழைகள் பசியாறிக் கொண்டு இருப்பதை ஐந்து தெருக்களுக்கு ஒரு இடத்தில் காணலாம். இது நம் வியாபார முறை. இஸ்திரி போடுபவர் முதல் கீரை பாட்டி, பூ விற்கும் அக்கா , பழைய பேப்பர் வாங்கும அண்ணா என்று நம் அடித்தட்டு வியாபாரத்தின் வலைபின்னல் மிக மிக பெரிது. அதை எளிதில் எந்தக் கார்பரேட்டாலும் உடைக்க முடியாது.

முக்கிய நகர் பகுதியில் கடை போட இடம்பிடிக்க ஒரு நாளுக்கு ஆயிரம் முதல் ஆரம்ப்பிகிறது 'இதர' செலவு. இது ஒரு எடுத்துக்காட்டு. ஒவ்வொரு அடிமட்ட வியாபாரியும் மறைமுகமாக யாருக்காவது பணம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு பில், பணம், ரசீது எதுவும் இல்லை. இது மிக நுண்ணிய வலைப்பின்னல்.

போலீஸ் முதல் பஞ்சாயத்து ஆபிஸ் வரை சில விஷயங்களுக்கு பயணம் செய்யவேண்டி இருந்தது. எங்கும் லஞ்சம் குறையவில்லை. விசாரித்ததில், பழைய பணமாக வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் அவர்களை பகைத்துக்கொள்ள தயாராக இல்லை. மறுநாள் அவர்களுக்கு பிழைப்பை பார்க்கப் போக வேண்டும். இதே வேலையாக அலைய முடியாது. கேட்பதை கொடுத்து விட்டு தனக்கு நியாயமாக ஆக வேண்டிய வேலைகளை செய்துகொண்டுதான் செல்கிறார்கள். இவை எந்தக் கணக்கில் வரும்?

"அதெல்லாம் இல்லை, பிரதமர் சொல்லிட்டார்... யாரும் லஞ்சம் கொடுக்காதீங்க" என்று சொன்னால், நடுத்தர வியாபாரிகள் என்ன மோரும், ரிளையன்ஸுமா வைத்து இருக்கிறார்கள்... கோடி கோடியாக பேங் லோன், ஃபண்ட்ஸ், டிவிடன்ஸ், ஷேர் என்று நிதி திரட்ட? முழுக்க பில் போடாமால் எந்த வியாபாரமும் எனக்கு தெரிந்து நடப்பதில்லை. பெரும்பாலும் அறுபது அல்லது எழுபது பர்சன்ட் பில் போடுவார்கள். மிச்சம் முப்பது பர்சன்ட் பில் போடாமல் நடக்கும் வியாபரங்களில்தான் லஞ்சம் போன்றவை கொடுக்கப்படும். இவை முழுக்க கறுப்பு பணம் என்றும் சொல்ல முடியாது. ஒரு பொருள் தயாரிப்பில் பல இடங்களில் வரி விளையாடும்.

எடுத்துக்காட்டாக, ஒரு சட்டை நூலில் வரி, அடுத்து லாரியில் வர சுங்க வரி, அடுத்து தயாரிக்க மூல துணியாகி விற்க வரி, அங்கு வேலை செய்யும் அனைவரும் சம்பாதிக்கும் பணம் வரி, அங்கு சாப்பிடும் உணவுகள் மீது வரி, அந்த ஆலைக்குத் தேவையான ஒவ்வொரு பொருளுக்கும், சேவைக்கும் வரி, விற்கும் வரி, அடுத்து சுங்க வரி, தைக்கும் ஆடை உற்பத்தி ஆலையை எடுத்துக்கொண்டால் வரி கட்டி வாங்கின பட்டன், நூல் கண்டு, தையல் மெஷின் என்று பல பொருட்கள். ஒரு நூல், சட்டையாவதற்குள் எத்தனை எத்தனை வரிகள். இதில் லாபம யாருக்கு? அரசுக்குத்தானே?

எனவே, சிறு சிறு வியாபாரிகள் சின்ன அளவில் பில் போடாமல் போடும் சிறு வரி ஏய்ப்புகள் நஷ்டத்தை விட லாபம் அதிகமாக தரும். அனைவரும் ஏமாற்றுவதை நியாயப்படுத்தவில்லை. இதுதான் இந்தியா.

கார்ப்பரேட் ஒரு கம்பெனி ஆரம்பிக்க ஷேர் மார்க்கெட், வங்கி, நிதிகள் என்று மக்களின் பணத்தை சேகரிக்கும். முதலாளி கணிசமாக போடுவார். பிறகு தொழிலில் குதிக்கும். சிறு வியாபாரிகளை ஒட்டு மொத்தமாக நசுக்கும், கோக் வந்து பன்னீர் சோடா கூட மார்க்கெட் போய், துளியும் பொது நலமில்லாமல் நீர் நிலைகளை உறிஞ்சி, மக்களுக்கு சர்க்கரை நோய்களை வாரி வழங்கிய இவர்களுக்கு சலுகையோ சலுகை. இவர்கள் என்னதான் செய்கிறார்கள்?

கறுப்புப் பணம் என்றால் பெரும் முதலாளிகளிடம்தான் முடங்கி இருக்கிறது. இன்று வரி இல்லாவிடில் கடையை எந்த நாட்டுக்கும் இடம்பெயர்க்க துணிய யோசிக்கவே செய்யாத தேச பக்தர்கள். இவர்கள் இல்லாவிடில் அரசாங்கம் இல்லை. தேர்தலுக்கு பணம் இல்லை. முடிந்தால் அரசியல்வாதிகள், இல்லாவிடில் அவர்களே அரசியலில் குதிக்கவும் தயங்குவதில்லை. அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு இருந்தாலும் சில கொள்கைகள் துளியாவது விஞ்சி இருக்கும். பெரும் முதலாளிகள் கையில் செல்லும் அரசாங்கம் கொள்ளைகளில் மட்டுமே ஈடுபட்டு இருக்கும்.

உதாரணத்துக்கு ஓலா, உபெர் வந்து ஆட்டோ, கார் சிறு தொழில் விற்பன்னர்களை அழிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். நாளை அவர்கள் வைத்தது சட்டமாகும். அவர்கள் வசூலிப்பது வாடகையாகும். ஜியோ அனைத்து மொபைல் நிறுவனங்களையும் நஷ்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அடுத்து மோனோ போலியில் இறங்க ஆரம்பித்து இருக்கிறாகள். நம் தொழில் வலைப்பின்னல்களை அறுக்க தொடங்கி பெரும் முதலாளித்தத்துவத்தை புகுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

என் மகன் கல்லூரியின் பகுதியாக பாஸ்டனில் ஜான் ஹாக் கம்பெனியில் வேலை செய்கிறான். நேற்று எண்ணூறு பேரை மலேசிய கிளையில் இருந்து ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்களாம். இதுதான் கார்ப்பரேட். சிறு முதலாளிகளாக இருப்பவர்களை பணம் காட்டி, வாழ்க்கை முறை காட்டி தன் பக்கம் இழுக்கும் புதைகுழி அது. ஆப்பிரிக்க அடிமைகளை உருவாக்கிய மேற்கிந்திய நாகரிகத்தின் இன்னொரு வடிவமே கார்ப்பரேட் நிறுவனங்கள். அவர்கள் தேவை என்றால் பாலூட்டவும், தேவை இல்லாவிடில் விஷமூட்டவும் அறிந்து வைத்திருப்பார்கள்.

யார் வேண்டுமென்றாலும் கம்பெனி ஆரம்பிக்க சுதந்திரம் இருக்கிறதே என்ற விவாதம் வரும். கோடிக்கணக்கில் உள்ள வியாபாரிகளை அழித்துவிட்டு ஆயிரக்கணக்கில் முதலாளிகளை உருவாக்கும் மரணக் கிணறு விளையாட்டு இது. சாதாரண மக்களால் யோசிக்க முடியாத இடம். மிகத் தந்திரங்கள் தேவை. இவை பெரும்பாலும் முதலாளிகள் வாரிசுகளுக்கு கை வந்தக் கலை. நம்மை போன்றவர்கள் ஏறுவது மிகக் கடினம். நமக்கு ஒரு பெட்டிக்கடை வைத்து, அதில் ஒன் பெட் ரூமில் வாழும் சுதந்திரம் போதுமானது. நம்மை வேலையை விட்டு யாரும் தூக்க முடியாது. நேற்று மலேசியாவில் ஆஹா ஓஹோ என்று வாழ்ந்த எண்ணூறு பேரின் நிலைமை? குடும்பத்தின் பிரச்சினை? இதுதான் கார்ப்பரேட் அரசாங்கம். எதுவும் கேட்க முடியாது!

இந்த செல்லா நோட்டு விவகாரத்தில் கவனித்தது என்னவென்றால், கார்ப்பரேட்டுக்கு அதிக வசதியாகவும், சிறு தொழில் முனைவோர்களுக்கு பிரச்சினையாகவும் ஆனதுதான். பெரும்பாலும் குறு தொழில் முனைவோர்கள் கையில் இருநூறு பவுன் அவசரத்துக்கு வைத்து இருப்பார்கள். வியாபார பிரசிச்னைகளுக்கு அதுதான் கைகொடுக்கும். அது கறுப்பு முதலீடு இல்லை. வாழ்வாதாரம். பொருளாதார அடிப்படையும். அடுத்து ஐம்பது நாட்கள் குறு வியாபாரிகள் தாங்குவார்களா? திரும்பத் தொழிலை சரியாக செய்ய எந்த வங்கி பணம் தரும்? அரசாங்கம் மைக்ரோ பைனான்ஸ் ஏற்பாடு செய்யுமா?

அடுத்து நிலம். பெரிய கம்பெனிகள் யாரும் நில உச்ச வரம்புகள் மாட்ட மாட்டார்கள். அவர்கள் ஒரு பப்ளிக் லிமிட்டட் ஆரம்பித்து, குடும்பத்தினரை கூட்டு சேர்த்து லெட்டர் பேட் கம்பெனி பெயரில் நிலங்களை வாங்கி போடுவார்கள். சிறு, குறு முதலாளிகள்தான் கொஞ்சம் வியாபார, வீட்டு, எதிர்கால செலவுக்கு இரண்டு சைட்கள் அதிகமாக வாங்கி போடுவார்கள்.

கறுப்பு முதலைகள் பிடிபட வாய்ப்பு மிகக் குறைவு. ஏன் என்றால் பெரும்பாலான அச்சடித்த பணம் வங்கிக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறது. ஆனால் கறுப்பு பணம் என்பது "பணம் என்ற பொருள்" என்று நடுத்தர மக்களை நம்ப வைத்ததை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

கள்ளப் பணம் கண்டிப்பாக குறைந்திருக்கும். அதற்கு துணிவான நடவடிக்கைக்கு பிரதமருக்கு பாராட்டுகள்; ஆனால் யாருடையை வயிற்றில் அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். யாருக்கு பால் வார்க்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியக் கூடும். இது அவருக்கே தெரியாமல் கூட இருக்கலாம்.

இந்த நாட்டுக்கு முதல் தேவை அடிப்படை கல்வி. ஒரே சட்டத்தில் எல்லாருக்கும் சமமான கல்வியை கொண்டு வாருங்கள். ஒரு நான்கு வருடம் ஆகட்டும். பிறகு கற்றுக் கொடுங்கள். பிறகு உங்கள் பொருளாதார சீரமைப்பை ஆரம்பித்து இருந்தால் உங்களின் நியாயத்தை புரிந்துகொள்ள முடியும்.

அடிப்படை கல்விக்கே தடுமாறும் நாட்டில், வறுமைக்கோட்டின் கீழ கோடிகளில் இருக்கும் நாட்டில், பேங் கியூவில் செலவுக்கும் பணம் எடுக்கும்பொழுது கூட இறக்கும் நாட்டில், கேஷ் லெஸ் எகானமி யாருக்காக? ரோஜா டயலாக் நினைவுக்கு வருகிறது. ஓர் அமைச்சரின், ஏன் பிரதமரின் உயிருக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை ஏழை விவசாயியின் - வங்கியில் இறந்தவர்களின் உயிர்.

செல்போன் எல்லாரிடமும் இருக்கிறது. அதுபோல கார்டு, ஏ.டி.எம் என்று எல்லா குக்கிராமங்களிலும் சொல்லப் போகிறார். வெளிநாடுகளை பார்த்து இந்தியா சூடு போட்டுக்கொள்ள முடியாது. முதலில் எங்கள் கீரைக்கார பாட்டி, பூக்காரமா, இஸ்திரி தாத்தா, அசாம், மணிப்பூர் புலம் பெயர்ந்த குடும்பங்கள், கட்டுமான தொழிலாளர்கள், நாடோடிகள் இவர்களுக்கு ஒரு அடிப்படை கல்வி, இலவச தரமான மருத்துவம் முதலானவற்றைச் செய்துவிட்டு, பிறகு கள்ளப் பணம் ஒழித்தால் நாங்கள் வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம்.

நாட்டின் கல்வி, ஆரோக்கியம் இரண்டு கட்டமைப்பை மேம்படுத்தாமல் எந்தச் சட்டம் வந்தாலும் அது ஒரு சாராருக்கு செய்யும் துரோகமே. நாட்டின் தேச பக்தி பற்றியும் பேச்சு வருகிறது. யாருக்கும் போரிடவோ, அதனால் உயிர் இழக்கவோ விருப்பம் இல்லை. ஆயுத அரசியலுக்கு, உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கு தேவையில்லாமல் அப்பாவி மனிதர்கள் மற்றும் ராணுவ வீரர்களை பலிகொடுப்பது நடக்கிறது. இனி எந்த சிறு போர் நடவடிக்கை எடுத்தாலும் ஆட்சியை அடுத்தகட்ட தலைவரிடம் ஒப்படைத்துவிட்டு பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களும் போர் முனையில் நிற்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். இப்படி எல்லா நாட்டிலும் சட்டம் வந்தால் பல போர்கள் இருக்காது.

பறவை, மிருகம், நதி, மலை, காடு, கண்டம், கடல் எதற்குமே எல்லை இல்லை. மனிதர்கள்தான் செயற்கையாக நாடு என்று பிரித்து எல்லைப் போட்டு, தேசப் பக்தி, பாதுகாப்பு என்ற பெயரில் சக மனிதர்களை கொன்றுக் குவிக்கிறான். மனித நேயம் மட்டுமே எல்லைகளை தாண்டிய மகத்தான சக்தி என்று எப்பொழுது உணரப் போகிறோம்? சக மனிதனை, அவன் குடும்பத்தை நாசப்படுத்தும் செயல் இல்லையா தீவிரவாதம், போர், மதம் எல்லாம்? ஒரு தலைவர் முற்போக்கு சிந்தனைகளுடன் செய்லபடும்பொழுது எளிவர்களை கைவிடமாட்டார்.

கார்ப்பரேட் என்பது ஓர் இணை அரசாங்கம் அளவிற்கு வளர்ந்து இருக்கிறது. அதற்கு ஆதரவாக அரசின் கரங்களும் இறங்கி இருக்கு. அவற்றால் இன்னொரு கிழக்கிந்திய கம்பெனி அழிவை நாம் சந்திக்க நேரிடும். நம் வளங்களை இழக்க நேரிடும்.

ஐந்து கோடி ரூபாய் முதலீடு போட்டது, கடன் வாங்கி தொழில் செய்தது எல்லாம் ஒரே நாள் அறிவிப்பால் நடுதெருவுக்கு வந்துவிட்டதாக ஒரு சிறு தொழிலதிபர், திருப்பூரில் உடனடியாக எழு லட்சம் நஷ்டம் ஆனாதாக நண்பர். திருப்பூர் எழுந்திருக்க வருடங்கள் ஆகும் என்ற நண்பி... இன்னும் ஆயிரமாயிரம் கதைகள். இவர்கள் நசிய நசிய அத்தனை வியாபாரமும் வெளிநாட்டினர் கைக்கோ அல்லது காரப்பரேட் நிறுவனக்களுக்கு செல்லும்.

நாட்டு நடப்பு மீது கவனம் செலுத்தும் ஒரு குடும்பத் தலைவியின் பார்வையில் மட்டுமே இத்தனை புலப்படுகிறது என்றால், பொருளாதார நிபுணர்களுக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் பெரும்பாலும் அவர்கள் நிறுவனம் சார்ந்து இயங்கி யோசிப்பவர்கள்.

நம் நாட்டுக்கு தேவை தன்னிறைவு பொருளாதாரமே தவிர, அதாவது ஒரு கிராமத்தில் உள்ள சந்தை போல. துணி, நகை, அடுப்பு, ஆடு, மாடு, காய்கறிகள் அனைத்துமே அங்கே உற்பத்தி, அங்கே விற்பனை. அங்கு நிஜமான கேஷ் லெஸ் அதாவது பண்டமாற்றில் கூட செய்ய முடியும். அந்த பொருளாதாரமே இந்தியாவை வலுப்படுத்தும். எளியவர்களை நசுக்கும் இவை நமக்கு தேவையா?

கிர்த்திகா தரன் - தொடர்புக்கு kirthikatharan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்