அதிசய உணவுகள் - 17: பூட்டானின் தேசிய உணவு!

By சாந்தகுமாரி சிவகடாட்சம்

‘‘ஒரு சமையல் குறிப்புக்கு உயிர் கிடையாது. நீ ஒரு சமையல்காரனாக அதற்கு உயிரூட்ட வேண்டும்!’’ -தாமஸ் கெல்லர்

ஹிமாச்சல் பிரதேசம், தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இடங் களைச் சுற்றிப் பார்ப்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். பனி படர்ந்த மலைகள், தெள்ளந்தெளிந்த நீரை சுமந்துகொண்டு ஓடி வரும் சிற்றோடைகள், உடலை ஊடுருவிச் செல்லும் குளிர் காற்று, வானுயர்ந்த பைன் மரங்கள், பருவ காலங்களுக்கு ஏற்றாற்போல் பூக்கும் பூக்கள்... என்று ஆன்மாவுக்கும், உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் இடங்களாக அவை இருக்கும்.

இமைய மலையின் கிழக்கு முனை யில் இருக்கும் நாடான பூட்டானைப் பார்க்க பல நாட்களாக பேராவல் கொண்டிருந்தேன். பூடான் இந்தியா, சீனாவுக்கு இடையிலான ‘சில்க்’ பாதை யில் அமைந்திருக்கிறது. நானும் என் கணவரும், பூட்டானின் தலைநகரமான திம்பு-வை சென்றடைந்தோம். பூட்டா னின் புகழ்பெற்ற ‘நிமலங்’ திருவிழாவைப் பார்ப்பதற்காக, அவ்விழா நடைபெறும் நேரத்தில் சரியாகத் திட்டமிட்டு அதற்கேற்ப சென்றிருந்தோம். ‘பூம்தாங்’ என்ற பூட்டானின் அழகிய கிராமத்தில் நடக்கும் இந்த விழாவை பார்ப்பதற்காக காரில் பயணப்பட்டோம்.

ஆஹா! கண் முன்னர் விரிந்த காட்சி கள் தந்து சுகானுபவத்தை இன்றளவும் நினைத்து மெய்சிலிர்க்கிறேன். பூட்டா னின் பள்ளத்தாக்குகளைப் பல கணவாய் கள் இணைக்கின்றன. சிலா, டாச்சுலா, பிலா போன்ற கணவாய்களைக் கடக்கும் போது, காரை விட்டு கீழே இறங்கி புகைப் படங்கள் எடுத்துக்கொண்டோம்.

எங்கள் காரில், ஓட்டுநரும் வழிகாட்டி யும் எங்களுடன் நாங்கள் பூட்டானில் தங்கியிருந்த 10 நாட்களுக்கும் நிழ லைப் போலவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். தாயை சேய் கவனித் துக்கொள்வதைப் போல எங்களைக் கண்ணும் கருத்துமாகவே பார்த்துக் கொண்டனர். அவர்களுடைய விருந் தோம்பல் ஈடு இணையற்று இருந்தது. பூட்டானிய மக்களுக்கே உரித்தான பண்பாடு இதுவென்று பின்வரும் நாட்களில் நான் புரிந்துகொண்டேன்.

பூட்டானிய மக்கள் மிகக் காரமான உணவு வகைகளை சர்வசாதாரணமாக உண்ணுகிறார்கள். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் எல்லாம் உணவு மேஜைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னாலேயே ‘உணவில் காரத்தை தவிர்த்துவிடுங்கள்…’ என்று சொல்லிவிடுவோம்.

சாதாரண பருப்புக் கடைசல் என்றால் கூட அதில் பன்னிரண்டு பச்சை மிளகாய்கள் மிதக்கும். இரண்டு நபர்கள் இருக்கும் ஒரு வீட்டில், ஒரு வாரத்துக்கு வாங்கப்படும் பச்சை மிளகாய்களின் அளவு மூன்று கிலோக்களைத் தாண்டி விடும் என்று எங்கள் வழிகாட்டி சொன்னபோது, வார சமையலுக்கு இரண்டு பச்சை மிளகாய்களை மட்டுமே பயன்படுத்தும் என்னுடைய மூக்கு வியர்த்துப் போனது!

‘நிமலங்’ திருவிழாவைப் பார்க்க சென்ற இடத்தில், மதிய உணவுக்காக ஹோட்டலுக்குத் திரும்பி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் எங்களுக் காக காரம் இல்லாமல், தனிப்பட்ட முறையில் அதிக கவனத்துடன் தயாரிக் கப்பட்ட உணவை டிபன் பாக்ஸில் கொண்டு வந்திருந்தனர்.

மதிய உணவுவேளை வந்தது. இயற்கை சூழ்நிலை மிக்க இடத்துக்கு அழைத்துச் சென்றனர். டிபன் பாக்ஸ்கள் திறக்கப்பட்டன. எங்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. கார் ஓட்டுநரும், வழி காட்டியும் அவர்களுக்குப் பிடித்தமான உணவை வேறு கேரியர்களில் கொண்டு வந்ததை திறந்தனர்.

‘‘இதைக் கொஞ்சம் சாப்பிட்டுத்தான் பாருங்களேன்…’’ என்றார் வழிகாட்டி.

அவர் நீட்டிய கிண்ணத்தைப் பார்த்த நான் விக்கித்துப் போனேன். வெள்ளையான ஒரு வஸ்துவில், வதக்கப்பட்ட மூன்று அங்குல நீளமுள்ள பச்சை மிளகாய்கள் கிட்டத்தட்ட நாற்பது இருக்கலாம், மிதந்துகொண்டிருந்தன.

‘‘ஏன், மேடம் இப்படிப் பயப்படுறீங்க..? இது பூட்டானின் தேசிய உணவு! இதன் பெயர் ‘இமா டாட்சி’ (Ema datshi). இமா என்றால் மிளகாய்கள், டாட்சி என்றால் சீஸ். இவை இரண்டும் சேர்ந்து தயாரிக் கப்படுவதால் இதற்கு ‘இமா டாட்சி’ என்ற காரணப் பெயர் வந்தது…’’ என்றார்.

பிறகு, ஒரு தட்டில் பூட்டான் மக்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் சிவப்பு அரிசியினால் ஆன சாதத்தில், கிண்ணம் நிரம்ப இருந்த இமா டாட்சியை போட் டுப் பிசைந்து ஓட்டுநரும், வழிகாட்டி யும் சமமாகப் பகிர்ந்து சாப்பிட ஆரம் பித்தார்கள். பார்த்துக்கொண்டிருந்த என் கண்களில், காரத்தின் நெடி பட்டு கண்ணீர் சுரக்கத் தொடங்கியது.

‘‘எங்கள் சாப்பாட்டை சிறிது ருசிக் கிறீர்களா..? என்று அவர்களிடம் நான் கேட்டபோது, ‘‘பச்சை மிளகாய்கள் சேர்க் காத பதார்த்தத்தை நாங்கள் சாப்பிட் டதே இல்லை..’’ என்று மறுத்துவிட்டனர். ‘‘எப்படி உங்களால் இப்படிப்பட்ட காரசார மான பொருளை சிறிதும், முகம் கோணா மல் சாப்பிட முடிகிறது?’’ என்றேன்.

‘‘மேடம்… ‘யாக்’ என்ற மாட்டின் பாலில் இருந்து தயாரித்த தயிரைப் பயன்படுத்தி இந்த சீஸைத் தயாரிக்கிறோம். இந்தக் குளிர்பாங்கான தேசத்தில், இந்த சீஸ்தான் எங்களுக்கு அதிகமாகத் தேவைப்படும் எனர்ஜியைத் தருகிறது. அதுமட்டுமல்ல; குழந்தைப் பருவம் முதற்கொண்டே, அதிக அளவில் பச்சை மிளகாய்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘இமா டாட்சி’-யை சாப்பிட்டு எங்கள் நாக்கு, அதனுடைய காரத்துக்கும் பழகிவிட்டது..’’ என்றார்.

பூட்டானிய மக்களில் 95 சதவீதம் பேர் பவுத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகையினால், காய் கறி உணவு வகைகளையே அதிக அளவில் விரும்பி உண்ணுகிறார்கள். ஏரிகளில், குளங்களில் மீன் பிடிக்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமிசமும், மீனும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

‘ஆரா’ என்கிற மதுபானம் பூட்டானில் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. இது, அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவதாக சொல்கிறார்கள். பூட்டானில் நான் உண்டு மகிழ்ந்த அயிட்டங்களில் ‘மோமோ’-வும் ஒன்று. காய்கறிகள், சிக்கன் முதலியவற்றை உட்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘மோமோ’ வாயில் போட்டவுடனேயே பஞ்சைப் போன்று மெத்தென்ற தன்மையுடன், சுவையில் நம்மை ஆட்கொண்டன!

‘போச்சா’ என்கிற வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘பட்டர் டீ’-யை என் கணவர் மிகவும் விரும்பிக் குடித்தார். டீயே குடிக்காத நானும் அந்த ‘போச்சா’-வை அருந்தி மகிழ்ந்தேன்.

பூட்டானின் தேசிய குறிக்கோள் ‘ஆனந்தமாக இருப்பது!’ ஆமாம்… இயற்கை சூழ்நிலையில் குழந்தை உள் ளம் கொண்டு, அன்பை ஒருவருக் கொருவர் பரிமாறிக்கொண்டு வாழும் பூட்டானிய குடிமக்கள் பாக்கியசாலிகள்!

- இன்னும் பயணிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்