PS for 2K கிட்ஸ் - 14 | பொன்னியின் செல்வன் - நாவல் Vs சினிமா

By செய்திப்பிரிவு

அமரர் கல்கியால் எழுதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ புதினம் படமாக்கப்பட்டு, தமிழ் சினிமாவின் 70 வருடக் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பெரிய பொருட்செலவில் பெரிய நட்சத்திர பட்டாளத்தையேக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைப் படித்தவருடன் படத்துக்குச் செல்ல பயந்து அவர்களை பார்த்தாலே தெறித்து ஓடும், புத்தகமாகக் கதையை படிக்காத பார்வையாளர்களுக்கு, புத்தகமாகக் கதையைப் படித்த ஒரு பார்வையாளரின் பகிர்வுதான் இந்த அத்தியாயம். கதையை நான் வாசித்ததற்கும் படத்தைப் பார்த்ததற்கும் உள்ள வித்தியாசத்தையும், அனுபவத்தையும் ஸ்பாய்லர் இல்லாமல் பகிர விரும்புகிறேன்

லோகேஷ் கனகராஜின் ஃபேன் பாய் சம்பவம் ‘விக்ரம்’ என்றால், மனிரத்னத்தின் ஃபேன் பாய் சம்பவம் ‘பொன்னியின் செல்வன்’ என்றும் சொல்லலாம். முதலில் இயக்குநர் மணிரத்னத்திற்கும், இளங்கோவன் குமரவேல் மற்றும் ஜெயமோகனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். 5 பாகங்கள் - 250 அத்தியாயங்கள், 50-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் என அமரர் கல்கியால் எழுதப்பட்ட 'பொன்னியின் செல்வன்' புதினத்தை, ஒரு சிக்கலான கதைக்களம் கொண்ட கதையை மிக அழகாக, நேர்த்தியாக திரைக்கதையை எழுதியுள்ளனர்.

கதையே தெரியாவிட்டாலும் ஒரு குழப்பமும் இல்லாமல் புரியும் வகையில் திரைக்கதையை அமைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ஓலை கொண்டுபோகும் வழியில் நண்பன் கந்தமாறன் வீடான கடம்பூர் கோட்டையில் தங்குவான் வந்தியத்தேவன். ஆனால், படத்தில் கரிகாலரே சதித் திட்டத்தை கேட்டு அரசரிடம் தெரிவிக்கச் சொல்வது போல் அமைந்திருக்கும். 'ராட்சச மாமனே' பாடலில் சேந்தன் அமுதனை (அஸ்வின்) கவனித்திருப்பீர்கள். கதையில் தஞ்சையில் சின்னப் பழுவேட்டரையர் படையிடம் அமுதன் ‘ஒற்றன்’ என மாட்டிக்கொள்ள, வந்தியத்தேவன் மட்டுமே பழையாறை வருவது போலும், ஈசான சிவபட்டர் என்றவர் குந்தவையிடம் அவனைப் பற்றி தெரிவிப்பது போல் கதை அமைந்திருக்கும். படத்தில் ஈசான சிவபட்டரை தூக்கிவிட்டு சேந்தன் அமுதனை அவ்விடத்தில் வைத்துள்ளனர். இப்படி கதையில் கத்தி, கத்தரி போட்ட இடங்கள் பலவும் கச்சிதம்.

இருப்பினும், பூங்குழலியின் கதாபாத்திரத்தை கல்கி அறிமுகப்படுத்திய காட்சிகள்தான் அவளின் வித்தியாசமான ரசிக்கத்தக்க குணாதிசயங்களை எடுத்துச் சொல்லும். திரையில் அக்காட்சிகள் இல்லாதது சிறிது ஏமாற்றமே. படத்தில் பூங்குழலி, வந்தியத்தேவனிடம் நடந்துக்கொள்ளும் விதத்தை வைத்து வேண்டுமானால் அவளின் கதாபாத்திரத்தினைக் குறித்த ஒரு சிறிய புரிதல், புதினத்தை வாசிக்காத பார்வையாளர்களுக்கு கிட்டியிருக்கலாம். மற்றபடி பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி துடிப்பும் குறும்பும், பொன்னியின் செல்வனைக் கண்டதும் வெளிப்படுத்தும் வெட்கமும் என மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

இச்சமயம் மற்ற கதாபாத்திரங்களைக் குறித்தும் பார்த்துவிடுவோம். கதையில் வரும் வந்தியத்தேவனுக்கும் திரையில் வரும் வந்தியத்தேவனுக்கும் 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க பரிசுப் போட்டி அறிவிக்கலாம். அப்படி நம் வாணர் குல வீரனுக்கே உரிய துடிப்புடனும் குரும்புடனும் கார்த்தி காட்சிகளில் நம் விருப்பத்தை வென்றுவிட்டார். பழையாறையில் நடக்கும் கிருஷ்ண ஜெய்ந்தி விழாவின்போது தோன்றும் 'ராட்சச மாமனே' பாடலில் கார்த்தி, கம்சனாக ஆடும் காட்சிகள் அழகு. கதையில் சொல்லப்பட்டதுபோல் சிறப்பான நடனமும் இல்லாமல், ரசிக்கும்படியான ஆட்டம். தஞ்சையில் இருந்து தப்பி ஓடும் காட்சிகளில் நாமும் வந்தியத்தேவனுடன் ஓடுவது போன்றே தோன்றுகிறது.

ஆதித்த கரிகாலனின் கதாபாத்திரத்கை வேறு எவராலும் இவ்வளவு கச்சிதமாக செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். ‘சியான்’ விக்ரம் தன் கதாபாத்திரமாகவே உருமாறி உயிரைக் கொடுத்துதான் நடித்துள்ளார். காதலினால் ஏற்பட்ட வடு, வெறி, கோபம், குழப்பம், தவிப்பு என அனைத்தையும் தன் மிக நேர்த்தியான நடிப்பினால் வெளிப்படுத்தியுள்ளார். வீரபாண்டியனை கொன்றவுடன் 'கொல்ல வேண்டாம்’ என நந்தினி கெஞ்சியும் இப்படி செய்து விட்டோமே' என்று உணரும் கரிகாலனின் முகத்தை அப்படியே கொண்டுவந்து திரையில் நிருத்தியுள்ளார் விக்ரம்.

கதையின் பெரும்பாலான ஆண் கதாபாத்திரங்கள் விளையாட்டுப் பிள்ளையாகவும் அல்லது கோபக்காரர்களாகவும், நந்தினியின் வலையில் சிக்கிக் கொண்டிருப்பவர்களாகவுமே இருப்பர். நம்பொன்னியின் செல்வர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. பொறுமையும் சாந்தமும், போர்களில் மாவீரனுமானவர் அருள்மொழி. அந்தத் தெளிவும் கம்பீரமும் ஜெயம் ரவி முகத்தில் அவ்வளவு அழகாக காட்டியுள்ளார். மொத்தத்தில், சண்டைக் காட்சிகள் முதல் சிறிதளவே வரும் காதல் காட்சிகள் வரை அனைத்திலும் மூவருமே தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய். நந்தினி கதாபாத்திரம் செய்யவே பிறந்தவர். பெரிய மெனக்கெடல் இல்லாமல் தன் கண் அசைவிலும் இதழோர சிரிப்பிலுமே திரையரங்கையே அதிர விடுகிறார். பழுவேட்டரையரிடம் அப்பாவியாக நடிப்பதும், கரிகாலரின் பெயரைக் கேட்டால் கண்களில் அனல் பறப்பதுமாக நந்தினிக்கு நியாயம் செய்துள்ளார்.

குந்தவையாக த்ரிஷா வாழத்தான் செய்திருக்கிறார். ஜெஸ்ஸியாவது ஜானுவாவது. த்ரிஷா என்றால் குந்தவைதான் என்பதுபோல் நடித்துள்ளார். அந்த கம்பீரம், நளினம், தெளிந்த நீரோடையைப் போன்ற சிந்தனை, வந்தியத்தேவனிடம் காதல் பேசுதல், கரிகாலரிடம் கோபமாக சீறுதல் என குந்தவை தேவியின் அனைத்து குணாதிசயங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி குந்தவையை திரையில் மிளிர வைத்திருக்கிறார்.

சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக அந்தக் கோபம், கம்பீரம், நந்தினியைக் கண்டவுடன் மயக்கம் என பக்காவாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியுள்ளார். பார்த்திபனும் கண்ணசைவில் தஞ்சைக் கோட்டையை கைக்குள் வைத்திருக்கும் சின்ன பழுவேட்டரையராக முதல் காட்சியிலேயே மாஸ் பதிவு செய்கிறார்.

ஜெயராம் - ஆழ்வார்க்கடியான். கல்கியிடம் கேட்டாலும் இவரையும் விட சிறந்த ஒரு தேர்வை ஆழ்வார்க்கடியானுக்கு கண்டுபிடிக்க இயலாது. இவரும் வந்தியத்தேவனும் வரும் காட்சிகள் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.

வானதியாக சோபிதா சிறுநேரமே தோன்றினாலும், ‘ராட்சச மாமனே’ பாடலில் நடனத்திலும், சிறு சிறு முகபாவங்களாலும் ஸ்கோர் செய்கிறார். பிரபு, லால், விக்ரம் பிரபு, நிழல்கள் ரவி ஆகியோர் சிறு நேரமே தோன்றினாலும் சிறப்பாக நடிந்துள்ளனர். பிராஷ் ராஜ் சுந்தர சோழராக வழக்கம் போல் தேர்ந்த நடிப்பினை காட்டியுள்ளார். மொத்தத்தில் புதினத்தில் வருணிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களை எவ்கையிலும் பாதிக்காத, புத்தகத்தை வாசித்தவர்களுக்கு மனதில் நெருடலை ஏற்படுத்தாத நல்ல நட்சத்திர தேர்வுகள்.

பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளாக கிஷோர். அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ் கான், வினய் குமார் வரும் காட்சிகளில் அசுரர்கள் போல நடித்து பாண்டிய நாட்டவர்களுக்கு ஹீரோவாக ஆகின்றனர். ஆஸ்வின் சாதுப் பிள்ளை சேந்தன் அமுதனாகவும், ரகுமான் மண்ணாசை பிடித்த மகுடிப்பாம்பாகவும் பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாக நடித்துள்ளனர்.

இவ்வளவு கதாபாத்திரங்கள் இருந்தும் பூங்குழலியின் அறிமுகம், குந்தவை - வானதியின் அழகான அக்கா - தங்கை உறவு போன்ற காட்சிகள் காட்டப்படாதது ஏமாற்றமே. சுந்தர சோழர் மற்றும் மந்தாகினியின் கதை கூறப்பட்டிருந்தால், 'நந்தினி யாருடைய மகள்' என்ற கேள்வியும் எழ, 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்' என்பதை விட நந்தினி யாருடைய மகள்?!' என்ற கேள்வி ட்ரெண்டிங் ஆகி இரண்டாம் பாகத்திற்கான சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கும்.

சோழ நாட்டை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியதற்கு ரவி வர்மன், ஸ்ரீகர் பிரசாத், தோட்டா தரணி முதலான கேமராவுக்குப் பின்னால் உள்ளவர்களின் உழைப்பு ஆகச் சிறப்பு. அழகியல் ததும்பும் சோழ நாடு, கம்பீரமான தஞ்சைக் கோட்டை, கரிகாலனின் சோகத்தால் சூழப்பட்ட காஞ்சி பொன் மாளிகை, புழுதி பறக்கும் போர்க் களங்கள், சோழர்களுக்கு எதிரான சதித்திட்டத்தின் பிறப்பிடமான கடம்பூர் மாளிகை, இலங்கையின் புத்த கோயில்கள் என அனைத்துமே கச்சிதமாக காட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கதையில் போர்க் காட்சிகள் ஏதும் விவரிக்கப்படவில்லை எனினும்,

ஆ.மதுமிதா

படத்தில் அவை, அசல் கதையை பாதிக்காத வகையில் அமைந்துள்ளது

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்காக இசையமைத்த பாடல்கள் முதலில் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உட்பட்டாலும், படத்திற்கு பூரணமாக, 'ஹைப்' ஏற்றுபவையாவே அமைந்துள்ளது.

முழுமையாகச் சொல்லவேண்டுமானால் கச்சிதமான ஒளிப்பதிவு, சாமர்த்தியமான திரைக்கதை, ஆங்காங்கே மணிரத்னத்தின் 'டைரக்டர் டச்' அதேநேரத்தில் கதையையும் பாதிக்காமல், நடிகர்கள் அனைவரும் அவரவர் நடிப்புத் திறனை வெளிபடுத்த வாய்புகளுடன், சிறப்பான படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பொன்னியின் செல்வனை கல்கியின் எழுத்திலும் வர்ணனைகளிலும் பார்த்து, கதைக்குள்ளேயே வாழ்ந்துக் கொண்டிருக்கும் புத்தக வாசகர்களுக்கு, கதையின் முழுத் தாக்கத்தையும் முக்கியத் திருப்பங்களையும் திரையில் கொண்டு வராததால், முழுதாக படம், கதையை மிஞ்சி விட்டது என்று ஒப்புக்கொள்ள மாட்டோம். ஆனால், கதையின் அசல் தன்மையை பாதிக்காமல் கல்கியின் எழுத்திற்கு நியாயம் செய்துள்ளமையால் பொன்னியின் செல்வனை புத்தகம் வாயிலாக காதலித்தவர்கள் அபிமானத்தையும் வெல்கிறது ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம்.

| தொடரும்... |

முந்தைய அத்தியாயம்: PS for 2K கிட்ஸ் - 13 | பொன்னியின் செல்வன் - கடந்துபோன, கடந்து போகாத காதல்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்