எல்லாக் கதையிலும் ஒரு காதல் இருக்கும். சில நேரங்களில் அந்தக் காதலுக்குள் ஒரு கலவரமும் இருக்கும். ஆனால், கலவரத்திற்குள்தான் காதல் என்ற வகையறா கதைதான் பொன்னியின் செல்வன். வாளும், வேலும் பறக்க... ரத்தம் தெறிக்க... வன்மமும், வஞ்சகமும் பஞ்சமில்லாமல் பின்னியிருக்க... துரோகம் நிறைந்திருக்க கதை மாந்தர்களின் மனங்களில் பயம் நீங்கா நெருடலாக இருக்க... இது முழுக்க முழுக்க அரியணைக்கான சண்டைக் கதை என்று முன்முடிவு செய்துவிட்டால், கசிந்தோடும் காதலைக் காணத் தவறிவிடுவீர்கள். பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களுக்கு போர்க்களத்தைவிட காதல் களத்தில் தான் அதிகம் போகிறது. இங்கே நெஞ்சில் வஞ்சம் கொண்ட காதலும் உண்டு, வெள்ளந்திக் காதலும் உண்டு, தீராத விளையாட்டுப் பிள்ளைக் காதலும் உண்டு. காதலில் எத்தனை ரகம் இருந்தாலும், காதல் சுகமானது என்பதை கல்கி வார்த்தைகளால் செதுக்கியிருப்பார்.
சரவடிப் பேச்சுக்காரன், அதிரடி கவுன்ட்டர்களுக்கு குத்தகைக்காரன், வம்பளக்கும் கில்லாடியான வானர்குலத்து வந்தியத்தேவனின் காதலைப் பேசாமல் கடந்துவிட முடியுமா என்ன? ஆனால், அத்தனை வாய்ஜாலக்காரன் வந்தியேத்தேவனே பேசத் தடுமாறும் தருணம் பொன்னியின் செல்வனில் வரும். என்னடா இது கொம்பனுக்கு வந்த சோதனை என்று நாம் நினைக்கும் அந்தத் தருணம் அவன் குந்தவையை சந்தித்த தருணம். குந்தவையிடம் பேச முயற்சிக்கும் தருணங்கள் எல்லாமே வந்தியத்தேவனின் சொதப்பல் தருணங்களாகத் தான் போய்விடுகின்றன. காதல் தடுமாற்றம் போல!
பேரழகியான நந்தினியிடம் கூட ஆசை வார்த்தைகளை ஜாடையாகப் பேசி தனக்குத் தேவையான தகவல்களைக் கறக்க முயற்சிப்பவன் தான் வந்தியத்தேவன். புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கும் பூங்குழலியிடம் கூட ஒரு விண்ணப்பத்தை போகிற போக்கில் போட்டு வைப்பான். ஆனால் குந்தவையைப் பார்த்தால் மட்டும் அவனுக்கு நா வறண்டு கால்கள் பின்னிக் கொள்ளும்போல. பேச்சுமூச்சு இல்லாமல் நின்றுவிடுவான். வந்தியத்தேவன், குந்தவை காதல் கொண்டாடப்பட காரணம் இல்லாமல் இல்லை. கல்கி, இவர்களின் காதலை விவரித்த விதமே நம்மை வேறு ஒரு ரசனை நிரம்பிய உலகத்திற்கு இழுத்துச் சென்றுவிடும். குடந்தை ஜோதிடர் வீட்டில் இவர்கள் இருவரும் சந்தித்த தருணம் அழகானது என்றால், பழையாறையில் இவர்கள் சந்தித்துப் பேசிய காட்சியைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும்.
அங்கே இருவரும் ஒரு கணம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே கண் சேர்வதும், அடுத்த கணத்திலேயே தங்கள் கண்களைத் திருப்பி அக்கம்பக்கத்திலிருந்த பூ, மரம், பட்டாம்பூச்சி என்று பார்ப்பதுமாக இருந்தார்கள். இப்படி பார்த்துக் கொள்வது காதலில் இயல்புதானே என நினைக்காதீர்கள். அதைத் தாண்டிய ஆசை வார்த்தைகளில் தான் சுவாரஸ்யம் குவிந்திருக்கிறது. "விட்டுப் பிரிந்தால் அல்லவா மறுபடியும் சந்திப்பதாகச் சொல்லலாம்? தாங்கள் என் மனதைவிட்டு ஒரு கணமும் அகலவில்லை..." என்று வந்தியத்தேவனும், "பழுவேட்டரையர் சிறையில் இருந்து தப்பித்த உங்களை வேறொரு சிறையில் வைக்கப்போகிறேன். அந்தச் சிறையில் இருந்து தங்களால் தப்பிக்கவே இயலாது" எறு தன் காதலை இவ்வாறு ஒப்புக்கொள்ளும் குந்தவையும் தங்கள் காதல் வார்த்தைகளால் காதலை கரோனாவைவிட வேகமாக வாசகர்களுக்குப் பரப்பிவிடுகிறார்கள். காதல் ஒருபுறம் இருக்க, கடமை மறுபுறம் இழுக்க இவ்விருவரும் கண்ணியமாக காதலை தள்ளிவைத்துவிட்டு ராஜ்ஜியத்தைக் காப்பாற்றும் கடமையின் கவனத்தை செலுத்த வாய்ஜாலனின் காதல் மீது ஒரு மரியாதை வராமல் இருக்காது.
நம் கதைத்தலைவன் பொன்னியின் செல்வர் அருள்மொழிவர்மன் வீட்டுக்கு நல்ல பிள்ளை. போர்க்களத்தில் வீராதிவீரன். எதிரிகளை பறக்கவிடும் இரும்பு மார்புக்காரனுக்குள் கலையுணர்வும் மிகுதியாக உண்டு. கதையில் வரும் மற்ற ஆண் கதாபாத்திரங்களைப் போல் கோபத்தாலோ, வேகத்தாலோ முடிவுகளை எடுப்பவன் அல்ல. எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்யும் அவனுக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் வந்து சேர்கிறது. ஒருபக்கம், "ஈழத்துக்கு அழைத்துச் செல்லும்போது அவர் என்னை சமுத்திரகுமாரி என அழைத்தார்" என்று எண்ணி எண்ணி உருகும் பூங்குழலி. மற்றொருபக்கம் தான் மயங்கிவிழுந்தபோது தன்னை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றதை எண்ணி எண்ணி மீண்டும் மீண்டும் மயங்கும் வானதி. முதலில் இருவரிடமுமே அருள்மொழி வர்மனுக்கு எந்த அபிப்ராயமும் ஏற்படவில்லை. ஆனால், காலம் அவருக்கு வானதி மீது காதலைக் கொண்டு வருகிறது.
களத்தில் வாள் பேசும் வீரன் வந்தியத்தேவனுக்கு காதல் மொழி பேச வருமோ என்று நீங்கள் சந்தேகப்பட்டிருந்தால், அதை காதல் வார்த்தைகளால் வீழ்த்தி உங்களை ஆச்சர்யப்படுத்துவார் அருள்மொழிவர்மன். அவர் வானதியிடம் காதல் சொல்லும் தருணத்தை நீங்கள் புத்தகத்தில் படித்துதான் லயிக்க வேண்டும். ‘ஐயோ அப்போ பூங்குழலி!?’ என நீங்கள் அதிர்ச்சி ஆகலாம். ஆனால், அருள்மொழி ஏனோ இவளின் காதலை நாசுக்காக நிராகரிப்பான். அதை யூகித்தோ என்னவோ, தனக்காகவே காத்திருக்கும் அத்தை மகன் சேந்தன் அமுதனை மனதால் தழுவ தயாராகிவிடுவாள் பூங்குழலி. தான் தொழும் இறைவனுக்கு அடுத்த நிலையில் பூங்குழலியை பூஜிக்கும் சேந்தன் அமுதனின் காதலுக்கு முன்னால் அவளின் சிங்காதனமேறி பட்டத்து ராணியாகும் இச்சை பட்டுப்போகிறது. அந்த சமுத்திரகுமாரி உண்மைக்காதலின் உன்னதத்தை புரிந்து கொள்கிறாள்.
பட்டாம்பூச்சிக் காதல்களுக்கு இடையேதான் ஒரு சிக்கலான காதல் கதையையும் சேர்த்திருக்கிறார் கல்கி. கரிகாலன், நந்தினி இவ்விருவரின் காதல் கதை போன்ற சிக்கலான, சோகமான காதல் கதை வேறு இருக்கிறதா என்று தேட வேண்டும். இவர்கள் காதலாக பேசும் காட்சிகள் ஏதும் கதையில் விவரிக்கப்படவில்லை என்றாலும் வாசகர்களின் மனதில் ஆழமாகப் பதியும் அந்தஸ்தைப் பெற்ற காதல் இவர்களின் காதல். கரிகாலனுக்கு நந்தினி மீதான காதலை ஒருதலை காதல் என்றும் கூட சொல்லலாம். இளம்பிராயத்தில் விட்டுச்சென்றபோது நந்தினி நந்தினி என்று கதறத் தொடங்கியவர் பாவம் கடைசி தருணம் வரை கதறலுக்கு முடிவு கிட்டாமல் புலம்புகிறார்.
நந்தினி சோழ நாட்டிற்கு எதிராக சதி செய்கிறாள் என்று தெரிந்தபோதும் கூட, ‘என்னோடு வா. கடல் கடந்து தூர தேசம் சென்று வாழ்வோம்’ என்று அழைக்கும் வெகுளித்தனமான பரிதாப ஒருதலைக் காதல் தான் நம் இளவரசருடையது. வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்... போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்... வகையறா காதல் கரிகாலனுடையது. போர்க்களமே வாழ்விடமாக கரிகாலனுக்கு இருக்க நந்தினியோ பழுவேட்டரையரைக் கரம் பிடிப்பாள். சோழ நாட்டைப் பழி தீர்ப்பது மட்டும் பிறப்பின் இலக்கணமாகக் கொண்ட நந்தினிக்கு கரிகாலன் மீது காதல் இருந்ததோ ஏன் கடுகளவேனும் சாஃப்ட் கார்னர் இருந்ததா என்று தேட முற்பட்டால் அது மர்மக் கதையாகவே இருக்கும்.
கமுக்கமான காதல் என்று நிச்சயமாகவும் சொல்லிவிட முடியாது. சிறுவயதில் நந்தினிக்கும் கரிகாலன் மீது அபிப்ராயம் இருந்திருக்கலாம் என்று வேண்டுமானால் நாம் கற்பனை செய்து கொள்ளலாம். சிறுவயதில் தான் நடத்தப்பட்ட விதமும், வீரபாண்டியன கொலை செய்யப்பட்ட நிகழ்வும், தானும் சுந்தரச் சோழனின் மகளோ என்ற சந்தேகம், இல்லை வேறு எதுவுமோ கூட அந்தக் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கலாம். இவர்கள் காதலுக்கு ஒரு தனி புத்தகமே எழுதலாம். நந்தினியால் தினம் தினம் செத்துப் பிழைத்த கரிகாலன் ஒரு நாள் நந்தினியின் கண் முன்னரே உயிரைவிடுகிறான். வாள் உள்ளே பாயும் வேளையில் காதலியின் ஆசை நிறைவேறியதோ என்ற நிம்மதியால் இறக்கிறான் கரிகாலன். அலைந்துதிரிந்த அவன் மனதுக்கு நந்தினி தந்த காதல் பரிசு அதுவாகக் கூட இருக்கலாம்.
நந்தினி மிகப்பெரிய காதல்காரி. காதலால் கரிகாலனுக்கு விடுதலையும் தந்தவள் கந்தமாறன், பார்த்திபேந்திரன் என பலரையும் வார்த்தைகளால் மயக்கினாலும் கூட தன் கணவன் பெரிய பழுவேட்டரையருக்கு உண்மையானவள். கடைசி முறையாக கதையில் தோன்றும்போது தன் தவறுகளுக்கு மன்னிக்குமாறு பழுவேட்டரரையிடம் கைகூப்பி வேண்டிக் கொண்டுதான் விடைபெறுவாள்.
கரிகாலன், பெரிய பழுவேட்டரையர், கந்தமாறன், பார்த்திபேந்திரன் என நிறைய மனங்களைக் கடந்து சென்றாலும் நந்தினியின் மனம் என்னவோ உண்மையாக மயங்கியது வந்தியத்தேவனுக்காகத் தான் என்ற பார்வையும் எழாமல் இருக்காது. அடடே நம்ம தீராத விளையாட்டுப் பிள்ளை இங்கேயும் வேலையைக் காட்டிவிட்டாரா என்றால், இல்லை. சில தகவல்களைத் தெரிந்துகொள்ள போலியாக ஆசை வார்த்தைகளைக் கூறிய வந்தியத்தேவன் மீது பழுவூர் ராணிக்கு அன்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குந்தவையும் கூட கூறியிருப்பார். ஆனால், நந்தினியைப் பொறுத்தவரையில், ‘இருக்கு... ஆனா இல்ல’ என்றுதான் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தனை அழுத்தமானவள் அல்லவா நம் நந்தினி. வந்தியத்தேவன் அபிமானத்தைப் பெற நந்தினி எதுவும் செய்ய சித்தமாகியிருந்தாளோ?! கரிகாலனைக் கொன்று அந்தப் பழியை வந்தியத்தேவன் மீது சுமத்தவும் சித்தமாகியிருந்தாளோ என்னவோ?! நந்தினி கதாபாத்திரத்தைப் பொறுத்தவரையில் கல்கியும் அவளைப்போலவே இன்டன்ஸாகிவிடுகிறார்.
இதுமட்டும்தான் பொன்னியின் செல்வனில் நிறைந்திருக்கும் காதலா என்றால், இல்லை. புத்தகம் முழுவதும் காதலும் கொட்டிக்கிடக்கிறது. நீங்கள் வீரத்தை தேடினால் வீரம் விளையும், காதலைத் தேடினால் காதல் சுரக்கும். அதுதான் கல்கியின் பொன்னியின் செல்வன்.
| தொடரும்... |
முந்தைய அத்தியாயம்: PS for 2K கிட்ஸ் - 12 | பொன்னியின் செல்வன் - போர்க்கள வித்தகர்களின் தனித்துவங்கள்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago