மான்டேஜ் மனசு 18: மாறாக் காதலின் பொக்கிஷங்கள்!

By க.நாகப்பன்

பல ஆண்டுகளுக்குப் பிறகு குமார் செல்போனில் அழைத்தான்.

''என்ன பண்ற மாப்ள''

''அலுவலகத்துல இருக்கேன் டா. என்ன விஷயம்?''

''நானும் சென்னையிலதான் இருக்கேன். உன் ஆபிஸ் எங்கே?''

''மவுன்ட் ரோடு''

''சூப்பர் மாப்ள. நான் தேனாம்பேட்டையிலதான் வீடு எடுத்து தங்கி இருக்கேன். வந்து ஒரு மாசம்தான் ஆச்சு''

''சூப்பர் டா. சந்திக்கலாமா''

''நிச்சயமா''

''சரி சாயந்திரம் பேசுறேன்'' என்று உரையாடலுக்குத் திரையிட்டு பணிகளில் கவனம் செலுத்தினேன்.

இன்றைய இரவை எப்படிக் கழிக்கலாம் என்ற யோசனையுடன் இருந்தபோதுதான் குமாரே அழைத்தான். சந்தித்தோம்.

குமாரால் அந்த இரவு ஒளி பெற்றது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

புத்தகக் குவியல்களுக்கிடையில் இருக்கும் கடிதங்களைக் கண்டெடுத்து 'என்ன மாப்ள... இவ்ளோ கடிதங்கள்' என ஆச்சர்யம் காட்டினேன்.

குமார் காதல் ஏற்கெனவே ஒரு முறை மேலோட்டமாக சொல்லி இருக்கிறான். ரத்தமும் சதையுமான அந்தக் காதலை மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.

''என் தங்கச்சி நிஷாவோட தோழி கலா. கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டல் ரூம்மேட்ஸ். கவிதை, அரசியல் ஆர்வம், புத்தக வாசிப்புன்னு என்னைப் பத்தி நிறைய விஷயங்கள் சொல்லச் சொல்ல கலாவுக்கு என்கிட்ட பேசணும்னு ஆர்வம் வந்துச்சு.

அப்போ நானும் கல்லூரியில் படிச்சுக்கிட்டு இருந்தேன். ஊருக்குப் பக்கத்துலயே காலேஜ் இருந்ததால வீட்ல இருந்து காலேஜ் போய் படிச்சேன். வயல்வேலையில கவனம் செலுத்திக்கிட்டே சிறு பத்திரிகைகளுக்கு கதை, கவிதை அனுப்புறதை வழக்கமா வெச்சிருந்தேன்.

அதனாலயே எங்க ஊர் போஸ்ட்மேன் எனக்கு நண்பரானார். தினமும் ஏதாவது ஒரு கடிதமோ, புத்தகமோ, சிற்றிதழோ எனக்கு வந்துகிட்டே இருக்கும். அப்படி ஒருநாள்ல தான் கலாகிட்ட இருந்து கடிதம் வந்தது.''

அந்தக் கடிதம் இதுதான் என்று வாசிக்கக் கொடுத்தான்.

20.11.2001

விடுதி

அண்ணன் குமாருக்கு வணக்கம்.

நான் நிஷாவின் தோழி கலா.

நலமா இருக்கிறீர்களா?

நிஷா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறாள். உங்களைப் போல திறமையாக அரசியல் பார்வையோடு வளர ஆசைப்படுகிறேன். எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள தனித்துவமாக இயங்க விரும்புகிறேன். அதற்காக நீங்கள் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பதில் கடிதம் எழுதினால் மகிழ்வேன்.

நன்றி.

கலா.

இதுபோன்ற பல கடிதங்கள் படிக்கக் கொடுத்தவன் என் சொத்து, என் பொக்கிஷம், இத்தனை வருட வளர்ச்சியில் நான் சம்பாதித்த ஒட்டு மொத்த அன்பு இதுதான் டா என என் கைகளில் ஒப்படைத்தான்.

நான் அதைப் படிக்கப் படிக்க கலங்கிப்போனேன்.

இந்தக் காதலை கடிதங்கள் வழியாக உங்களுக்கும் கடத்துகிறேன்.



24.12.2001

விடுதி

குமார்...

நலமே. நலமாயிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

கலைக்குழுவுடன் என்னை சேர்த்தமைக்கு நன்றி. அவர்களுடனான நட்பு பலமடைந்துள்ளது.

நான் லெனின் மற்றும் மாக்ஸிம் வாழ்க்கை வரலாற்றை படிக்க விரும்புகிறேன். நூல்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும்.

உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள். என்னை ஒருமையில் அழைத்து எழுதியதற்காக மன்னிப்பு கோரியிருந்தீர்கள். அப்படி கூப்பிடுவதையே நானும் விரும்புகிறேன்.

உங்களுக்கு இல்லாத உரிமையா?

சரி. உடன் கடிதம் எழுதுங்கள். காத்திருக்கிறேன்.

இப்படிக்கு

கலா...



08.02.2002

சென்னை

தோழமையுள்ள கலாவுக்கு வணக்கம்.

நலம். நலமாயிருப்பாய் என நம்புகிறேன்.

சென்னை வந்த நீ ஒரு தொலைபேசியாவது பண்ணியிருக்கலாம். மனசு கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அமைப்பு முடிவு அல்லது தோழர்களின் வழிநடத்தல் அதுவாயிருந்தால் அதுகுறித்து பேச ஒன்றுமில்லை.

கடிதங்களில் பின்குறிப்பு அவசியமற்றது. நீ அனுப்பிய வாழ்த்துமடலில் அது மோசமானதாகவே இருந்தது. என்ன செய்வது யோசித்து யோசித்து ஒரு வாழ்த்து மடல் தேடியிருந்திருப்பாய். வீணாக்கலாமா? நன்றி.

குமார்.

10.04.2002

விடுதி

பிரியமுள்ள குமாருக்கு

கலா எழுதிக்கொள்வது...

நீண்ட நாட்களுக்குப் பிறகு கடிதம் எழுதுகிறேன் என்ற வருத்தம் வேண்டாம். இப்பொழுதுதான் எனக்கு புராஜக்ட் வேலை முடிந்தது. இன்னும் 15 நாட்களுக்குள் சென்னை வந்துவிடுவேன்.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களது கடிதம் வந்திருந்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இப்போதெல்லாம் கடிதப் போக்குவரத்து குறைந்துவிட்டது. இனிமேல் பழையபடி தொடர விரும்புகிறேன்.

பகிர்ந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நான் கற்றுக்கொள்ள வேண்டியவையும் நிறையவே உள்ளன.

ஊருக்கு எப்போது வருவீர்கள். பார்த்து இரண்டு மாதங்களாகிவிட்டன. ஆனால், தினமும் நினைக்கத் தோன்றிவிடும். நேரடியாகப் பார்த்து நிறைய பேசவேண்டும் என்று தோன்றுகிறது.

நிஷாவுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், பதில் இல்லை., இனி நேராகப் பார்த்தால் கொலை செய்துவிடலாம் என்று இருக்கிறேன். இதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைதானே. சரி குமார். இனி அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். பதில் போடவில்லையென்றால் நிஷாவுக்கு நேர இருக்கும் கதிதான் உங்களுக்கும்...

தோழி

கலா...

03.07.2002

விடுதி

வணக்கம் குமார்.

கடிதம் போடாமைக்கு முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். கண்டிப்பாக இனியும் இந்த நிலைமை நீடிக்காது. இக்கடிதம் வந்த இரு நாட்களுக்குள் இன்னொரு கடிதம் வந்துவிடும்.

எனக்கு அதிக மனக் கஷ்டம் குமார். உங்களிடம் ஒருநாள் முழுதும் பேசினாலொழிய அது தீராது. உங்களது இரண்டு கடிதங்களும் கிடைக்கப்பெற்றன. வாழ்த்துகள் என்ற வாழ்த்துடன் கடிதம் வந்தது.

நான் இன்னும் கல்லூரியில் பேராசியராக அமர்த்தப்படவில்லை. தோழர் சுரேகாவிடம் இதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறியிருந்தேன். நான் பணியில் சேர்ந்திருந்தால் உங்களுக்குதான் முதலில் சொல்லியிருப்பேன்.

இன்று உங்களின் இரண்டாவது கடிதம் வந்தது. உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போது கடிதம் வந்தது. பிரம்மையோ என்று கூட யோசிக்கத் தோன்றியது. உண்மையில் உங்கள் கடிதம் மட்டும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது குமார். அது இரண்டு வரியாக இருந்தாலும் கூட.

அடுத்த கடிதம் விரைவில் குமார். எதற்கும் அடுத்த கடித,ம் படிக்கும் முன்பு ஒரு ஜலதோஷத்திற்கான மாத்திரையை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

தோழமையுடன்

கலா.

22.07.2002

விடுதி

வணக்கம் குமார்.

நீங்கள் அனுப்பிய புத்தகங்களும் கடிதமும் இன்றுதான் கிடைக்கப்பெற்றது.

நீங்கள் இனிமேல் ஊருக்கு வருவதாக இருந்தால் தகவல் தெரிவித்துவிட்டு வாருங்கள். என்னை சந்திக்காமல் இனி ஊரிலிருந்து சென்னை செல்லக்கூடாது.

எம்.எஸ்.சி. முடித்தவுடன் வேலைக்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறேன் குமார்.

இப்போதுதான் வீட்டு வேலைகள் செய்யக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதுவும் ஒரு நல்ல ஃபுரொபஷன். எனக்கு எங்கு வேலையில்லாவிட்டாலும் வீட்டு சமையற்கட்டில் வேலை காத்திருக்கிறது.

என்னால் உங்களை மாதிரி ஒருவரை உற்சாகப்படுத்தும் அளவுக்கு கடிதம் எழுத முடியவில்லை குமார்.

உண்மையில் அனைத்து கடிதங்களையும் நல்ல கையெழுத்துடன் சிறந்த வார்த்தைகளுடன் அழகாக எழுதிவிடுகிறீர்கள். என்னால் அப்படி எழுத முடியவில்லை. உங்களைப் போல் விஷயத்தை சரியாக வரையறுத்து எழுதுவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை.

வீட்டில் இருந்துகொண்டு எந்த உருப்படியான வேலையையும் செய்ய முடியவில்லை. கடுமையான வேலைகள் எனக்காகவே உள்ளன. படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் இருப்பது போன்ற ஒருநேரம் மிகவும் கொடுமையானது. அதுவும் பெண்ணாக இருப்பதால் கொடுமை கொஞ்சம் கூடுதல். அதிகமாக வெளியில் சொல்லமுடிவதில்லை. ஊரில் எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள். நான் எப்போது இதிலிருந்து விடுபடுவேன் என்று துடித்துக்கொண்டிருக்கிறேன்.

என்ன குமார். ரொம்ப அறுத்துவிட்டேனா. இனிமேல் இப்படி எழுதாமல் இருக்க முயற்சி செய்கிறேன். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

கடிதம் எழுதுங்கள்.

இப்படிக்கு

தோழி கலா.

11.08.2002

விடுதி

இனிய தோழன் குமாருக்கு கலா எழுதிக்கொண்டது.

முந்தைய கடிதம் என்னால் எத்தனை முறை படிக்கப்பட்டதென்று தெரியவில்லை.

முன்பை விட இப்போது கம்யூனிஸத்தில் தெளிவு அதிகமாகி இருக்கிறது. இன்னும் தெளிவடைய விரும்புகிறேன்.

நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். துரை. சண்முகத்தின் நரகல் கதை பிடித்திருந்தது. உன் அடிச்சுவட்டில் நானும் நாவல் அருமை. ட்ராப் என்ற அந்தப் புரட்சியாளனை குயென்னைப் போல நானும் மிகவும் நேசித்தேன். கடைசியில் அந்தப் பாத்திரம் இறந்தவுடன் மிகவும் கஷ்டமாகிவிட்டது. நாவல் மிகவும் உயிரோட்டமாக இருந்தது.

இப்போதெல்லாம் பிரச்சினைகளை தூரத்தில் நின்று பார்க்க முற்பட்டிருக்கிறேன். அப்படிப் பார்க்கும்போதுதான் என்னுடைய பிரச்சினை சாதாரணமாகத் தெரிகிறது.

புரட்சியில் இளைஞர்கள் நூலைப் படித்தேன். அது பற்றி நேரில் பேச நிறைய விஷயங்கள் உள்ளன.

நான் இப்போது கம்யூனிஸத்தில் அதிகம் வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காராணம் நீங்கள்தான். என்னை வளர்த்த பெருமை உங்களையே சேரும் குமார்.

நாம் எப்போது சந்திப்பது? ஏனெனில் சந்தித்துக்கொள்வதின் அவசியம் ஏற்பட்டுள்ளது.

இப்படிக்கு

கலா

29.09.2002

இரவு 2.30 மணி

சென்னை

அன்புள்ள கலாவுக்கு...

வணக்கம்.

இரண்டு பேருமே இப்போது நலமாயில்லை என்பது இரண்டு பேருக்குமே தெரிந்த விஷயம். உடம்பை கவனித்துக் கொள்வோம்.

ஒரு வேளை இந்தக்கடிதம் ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் அல்லது நினைத்துப் பார்க்கத் தூண்டும்படி இருக்கும்.

அன்பு கலா 28.09.இரவு அன்று உனக்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் 2.30 மணி நேரம் காத்திருந்துவிட்டுதான் வந்தேன்.

உடல் சோர்வு, வேலைச்சுமை இவற்றுக்கிடையிலும் என்னை இயல்பாக வைத்திருக்க உதவும் உன் நினைவுகளை வைத்துக்கொண்டு கவிதைகள் மட்டும் எழுதிவிட்டேன்.

நாம் இருவரும் அநேக கடிதங்கள் இதற்கு முன் எழுதிக்கொண்டோம். இந்த காதல் உணர்வு நிலையோடு எழுதும்போதுன் ஒரு வகையில் சந்தோஷம், பரவசம் வரத்தான் செய்கிறது. முதலில் அதை வென்று யதார்த்தமாக இருக்க முயற்சிப்போம்.

தூக்கம் வருகிறது. உனக்கெழுதும் கடிதம் முதலில். தூக்கம் பிறகுதான்.

சில நேரங்களில் வந்துவிடுகிறது வாழ்க்கை குறித்த விசாரணைகள். நாம் என்னவாகப் போகிறோம்? என்பது பற்றி. மகிழ்ச்சியை எப்படி அணுகுவது, படைப்பாற்றலோடு ஏற்படும் முரண்பாடு இரண்டும் வரத்தான் செய்கிறது.

அன்புடன்

குமார்.

06.01.2003

பிரிய தோழன் குமாருக்கு

நான் நலமாக இல்லை குமார். நான் என்ன செய்யட்டும்? என்னால் யாரையும் பாதிக்காமல் முடிவெடுக்க முடியவில்லை. சாதாரண பிரச்சினையைப் போட்டு இப்படி குழப்பிக் கொள்கிறேனோ என்ற அச்சம் எழுகிறது.

உங்களது பலவீனம் நான் என்று எழுதியிருந்தீர்கள். மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பலமாக இல்லாமல் இப்படி பலவீனமாக ஆகிவிட்டோமோ என்று. எனக்கு இப்போது எதைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை. உற்சாகமே இல்லாமல் படுமோசமாக இருக்கிறேன்.

நான் உங்களை சந்தித்திருக்கக்கூடாது குமார். நீங்களாவது நிம்மதியாக இருந்திருப்பீர்கள். ஆனால், என் முடிவில் எந்தத் தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.

ஆனால், நான் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக நினைக்க வேண்டாம். ஏனெனில், உங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு நான் மட்டும் சந்தோஷமாக இருப்பதாக கற்பனை செய்ய வேண்டாம்.

உங்கள்மேல் நான் கொண்ட பாசமோ, நேசமோ பொய்யில்லை. நான் வளர்க்கப்பட்ட சூழல் அப்படி. என் வீட்டில் பெரிய பிரச்சினை. நான் மட்டும் காதல் திருமணம் செய்துகொண்டேன் என்றால் பெரும் ஆபத்து காத்திருக்கும்.

நான் என் பக்கம் மட்டுமே சிந்திக்கவில்லை. இரு வீட்டினரின் பக்கமும் சேர்த்தே தான் சொல்கிறேன். இருவருக்கும் இடையேயான மனக்கஷ்டம் நாளடைவில் மறைந்துவிடும் என்றே நினைக்கிறேன்.

நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுவது அல்லது எழுதுவது என்று தெரியவில்லை.

நம் இருவருக்கும் இடையேயான உறவு நட்பாக இருப்பதிலேயே என் மனம் நிறைவு கொள்கிறது. தவிர, காதல் அந்த நிறைவைத் தரவில்லை. ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது.

நீங்கள் என் நண்பன், ஆசிரியர், குரு என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது, மற்றபடி இந்த நிலையில் எனக்கு வேறு எதுவும் மகிழ்ச்சியைத் தரவில்லை.

நான் என் உணர்வுகளையே சரியாகப் புரிந்துகொள்ளாமல் உங்களிடம் பழகியது மிகத் தவறு. அதற்காக நீங்கள் என்ன செய்தாலும் ஏதோ ஒருவகையில் தண்டனை கொடுத்தாலும் சரிதான்.

நான் வேறு எதையும் மனதில் வைத்துக்கொண்டு எதையும் எழுதவில்லை. உங்களை நிராகரிப்பதற்கு நான் போக்கு காட்டுவதாகவெல்லாம் நீங்கள் நினைத்தால் அது என்னைப் பற்றிய புரிதலில் உள்ள குறைபாடே.

ஆனால், நான் இன்னமும் ஒத்துக்கொள்வேன் உண்மையில் நான் உங்கள் மேல் காதல் கொண்டேன் என்பதை.

இப்போதைக்கு நாம் அரசியல் ரீதியாக வளர்வோம். நம் உறவு நட்பா? காதலா? என்பதை காலம் தீர்மானிக்கட்டும்.

நான் ஏன் இவ்வளவு விரிவாக கடிதம் எழுதி விளக்குகிறேன். நீங்கள் என்ன என்னைப் பற்றி புரிந்துகொள்ளாதவரா?

எனக்கு மார்க்சிய - லெனினிய அரசியலை அறிமுகம் செய்த முதல் ஆசிரியனே நீங்கள்தானே. உங்களால்தான் என் வாழ்க்கைப் பாதை திசை திரும்பியது. இல்லாவிடில் எங்கோ ஒரு மூலையில் வேலையைப் பார்த்து வெற்று வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்.

என் வாழ்வின் மிக முக்கிய நபர் நீங்கள். உங்களை நான் நிராகரிப்பதற்கு எந்த வகையிலும் உரிமை இல்லை.

நான் எனக்குள் போட்டுக்கொண்ட கட்டுப்பாட்டை சில நேரங்களின் உங்களின் காதலும், கடிதங்களும் தகர்த்துவிடுகின்றன. என்னை குழந்தையாகவும், தாயாகவும் போற்றிய உங்களது அன்பை, பண்பை என்ன சொல்லி போற்றுவது? உண்மையில் நீங்கள் கிடைத்தது என் பேறு.

வாழ்க்கையின் இறுதிவரை அனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற தோழியாக இணைந்து செயல்படுவேன்.

தோழமையுடன்

கலா.

***

இந்தக் கடிதங்களைப் படித்து முடித்ததும் குமாரிடம் என்னால் இயல்பாகப் பேச முடியவில்லை. இதுவும் கடந்து போகும் என்று வழக்கமான வெற்று அறிவுரையை சொல்லவும் மனமில்லை. பேசாமொழியுடன் வீட்டுக்கு வந்தேன்.

கலா - குமார் கடிதங்கள் எனக்கு 'பொக்கிஷம்' படத்தை நினைவூட்டியது.

சேரன் இயக்கத்தில் இலக்கிய வடிவில் ஓர் இயல்பான சினிமா என்ற அடைமொழியோடு வந்த படம் 'பொக்கிஷம்'.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், எஸ்.எம்.எஸ் என்று நவீன வடிவங்களில் காதலித்தும், அன்பைப் பரிமாறிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. ஆனால், கடிதத்தின் மூலம் அன்பை வளர்ப்பது, நட்பைத் தொடர்வது சுகானுபவம். திரும்பத் திரும்ப படிப்பதும், விரும்பி விரும்பிப் பார்ப்பதும் கடிதங்களைத்தான் என்பது காலம் நமக்கு உணர்த்தும் வரலாற்று உண்மை.

பொக்கிஷத்திலும் அதுதான் நிகழ்கிறது. அம்மா கேட்டதற்காக, வீட்டுப் பத்திரத்தைத் தேடுகிறான் மகன் ஆர்யன் ராஜேஷ். கடைசியில் லெதர் சூட்கேஸில் இருக்கும் பத்திரத்தைக் கண்டெடுக்கும்போது சில கடிதங்கள் இருப்பதையும் பார்க்கிறான்.

'போன் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டியா' என எகிறும் காதலி பிந்து மாதவியின் அழைப்பை அடுத்தடுத்து புறக்கணித்துவிட்டு கடிதங்களில் மூழ்குகிறான். அவன் படிக்கும் கடிதங்கள் வாயிலாக அப்பா சேரனின் காதலைத் தெரிந்துகொள்கிறான்.

1970-ல் கொல்கத்தாவில் மெரைன் இன்ஜினீயராக இருக்கும் லெனின் (சேரன்), மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தந்தை விஜயகுமாரைப் பார்க்க சென்னை வருகிறார். அப்போது பக்கத்து இருக்கையில் இஸ்லாமிய பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்து தங்கியிருக்கிறார். அவருக்கு உதவியாக மகள் நதீரா (பத்மப்ரியா) உடனிருக்கிறாள்.

தீடீரென வயிற்றுவலியில் அவஸ்தைப்படும் நதீராவின் அம்மாவை பரிசோதிக்க டாக்டரை அழைக்கிறார் சேரன். அதற்குப் பிறகு அவள் அம்மாவின் சிகிச்சைக்கான பணமாக ரூ.2000 கொடுத்து உதவுகிறார். அந்த உதவி நன்றியாக மாறி, கடித வடிவில் நட்பாகத் தொடந்து காதலாக கனிகிறது.

விடுமுறை முடிந்து கொல்கத்தா திரும்பும் சேரன், பத்மப்ரியாவுக்காக கம்யூனிசம் ஏன் எதற்கு? என்ற புத்தகத்தை, தன் அப்பா விஜயகுமாரிடம் கொடுத்துவிட்டு, அவளிடம் ஒப்படைக்கும்படி கூறிச் செல்கிறார்.

பத்மப்ரியா அவள் உறவினர் வீட்டுக்குச் சென்றதால் சேரன் ஊருக்குக் கிளம்பும்போது அங்கு இல்லை. அதற்குப் பிறகு அவள் நினைவாகவே இருக்கும் சேரனுக்கு அப்பாவிடம் இருந்து ஒரு கடிதம் வருகிறது.

'நதீரா நீ சொல்லாமல் போய்விட்டதால் வருத்தப்பட்டாள். எனக்கு மருந்து மாத்திரை கொடுத்து கவனித்தாள். நன்றி சொல்லி கடிதம் அனுப்பு' என்று நதீராவின் முகவரியை எழுத, சேரனுக்கு உற்சாகம் பீறிடுகிறது.

கடிதம் எழுதி, பதில் கடிதத்துக்காகக் காத்திருக்கிறார். பத்மப்ரியாவுன் பதில் கடிதமும் வந்து சேர்கிறது. இந்தக் கடிதப் போக்குவரத்து நாளடைவில் அவர்களுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பரஸ்பரம் காதலை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

பத்மப்ரியா படிக்கும் கல்லூரிக்கு போன் செய்து சேரன் பேசுகிறார். அடுத்த சில நாட்களில் காரைக்கால் வந்து கல்லூரி அருகில் பத்மப்ரியாவை சந்திக்கிறார்.

ஒரு கட்டத்தில், சேரன் தன் தந்தையிடம் நடந்ததைச் சொல்கிறார். விஜயகுமாரும், சேரனும் பெண் கேட்டு நாகூர் புறப்படுகிறார்கள். பத்மப்ரியாவின் தந்தை, 'கல்லூரி படித்த பிறகு திருமணம் செய்து வைக்கலாம். அதுவரை சேரன் மாதத்துக்கு ஒரு கடிதம் மட்டும் போடட்டும்' என நிபந்தனை விதிக்கிறார்.

அதன்படி சேரன் கடிதம் போடுகிறார். ஆனால், 3 மாதங்கள் கடந்தும் பதில் கடிதம் வரவில்லை. அப்பா விஜயகுமாரை போய் என்ன நடந்தது என பார்க்கச் சொல்கிறார். விஜயகுமார் படிப்பு வேலை அதிகம் இருப்பதால் கடிதம் எழுதவில்லை என சொல்ல, நிம்மதியாகும் சேரன் தொடந்து கடிதம் எழுதுகிறார். பதிலே வராததால் நேராக சேரன் நாகூர் வந்துவிடுகிறார். அப்போதுதான் யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டை விற்று காலிசெய்துவிட்டுப் போனது தெரியவருகிறது.

அதற்குப் பின் எங்கு தேடியும் பத்மப்ரியாவை சேரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பாவின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். ஒரு மகன் பிறக்கிறான்.

அந்த மகன்தான் கடிதத்தைப் படித்து, அப்பாவின் காதலைப் புரிந்துகொள்கிறார். சேரன் எழுதி போஸ்ட் செய்யப்படாத கடிதங்களை எடுத்துக்கொண்டு, பத்மப்ரியாவைத் தேடுகிறான். மலேசியாவில் இருக்கிறார் என தெரிந்த பிறகு அங்கு சென்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு கடிதங்களை அளித்துவிட்டு வருகிறான்.

அழுகையும் ஆற்றாமையுமாக பத்மப்ரியா திருமண மறுப்பில் உறுதியாக இருந்ததை சொல்கிறார். விரைவில் சந்திப்பேன். இனி பிரிய மாட்டேன் என்று மரணத்தை குறிப்பிடுகிறார்.

''ஒரு விஷயத்தை பழகுற வரைக்கும் பிரச்சினை இல்லை. பழகுன அப்புறம் அதை ஒதுக்குறதுதான் கஷ்டம். இதான் மனித இயல்பு'', ''அழகா இருக்குற பொண்ணுங்க மனசை சலனப்படுத்துவாங்க, அறிவா இருக்குற பொண்ணுங்க நம்ம சிந்தனையையும் சேர்த்து சலனப்படுத்துவாங்க'' என யதார்த்தங்களை வசனங்கள் மூலம் சேரன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சேரன் நடிப்பும் தவிப்பும் கதாபாத்திரத்துக்கு ஓரளவே நியாயம் சேர்க்கிறது. செதுக்கி ஒதுக்கிய மீசை, தடித்த கன்னம் என்று முதிந்த முகத்தோடு சேரன் நடித்திருப்பது கூட பரவாயில்லை. அதுவும் காதல் பாடல்களில் துண்டை தோளில் போட்டபடி உலா வருவதை ரசிக்க முடியவில்லை.

கடிதம் பத்திரமாக போய் சேர்கிறதா என்பதை சோதித்து அறிய தபால்காரருக்கு ஓயாமல் வணக்கம் வைப்பது, அஞ்சல் அலுவலகத்துக்கே வந்து கடிதம் மூட்டை கட்டி கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வது, கடிதம் போடும் அஞ்சல்பெட்டி மழையில் நனையாமல் இருக்க குடை பிடிப்பது போன்ற காதலுக்கே உரிய அபத்தங்களை அழகாக செய்யும் போது மட்டும் சேரன் ரசிக்க வைக்கிறார்.

பத்மப்ரியா தன் கண்களில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், பத்மப்ரியாவின் வருகையை, இருப்பை, பிம்பத்தை முழுக்க பிரதிபலிக்காமல் மீனாவின் பின்னணிக் குரல் தடுத்துக்கொண்டே இருக்கிறது.

'பொக்கிஷம்' படம் ஆண் பார்வையில் மட்டும் நீண்டு செல்லும் திரைக்கதைதான் அலுப்பை வரவழைக்கிறது. கடிதம் மட்டுமே பிரதான இடத்தைப் பிடித்திருப்பதால் சோர்வு ஏற்படுகிறது.

திருமண மறுப்பில் உறுதியாய் இருக்கும் பத்மப்ரியாவின் தனிமையை, வலியை, வாழ்க்கையை ஏன் வாய்ஸ் ஓவரில் சொல்ல வேண்டும்? அவர் பார்வையில் காதலைப் பற்றி சொல்லியிருந்தால் 'பொக்கிஷம்' போற்றுதலுக்குரிய படமாக இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

***

குமார் கலாவிடம் தன் காதலைச் சொன்னது ரஷ்யப் புரட்சி நாளான நவம்பர் 7-ல் தான். ஆனால், கலாவால் குமாரின் காதலை கல்யாணம் வரைக்கும் கொண்டு செல்ல முடியவில்லை.

முதல் ஆசிரியன், ஆசான், குரு, அரசியல் பார்வையை விதைத்த உங்களைத் திருமணம் செய்து கொள்ள மனம் மறுக்கிறது. ஏதோ ஒன்று தடுக்கிறது. நட்பாய் தொடர்வோம் என்று கடைசியாய் குமாருக்கு கடிதம் எழுதினாள்.

அதற்கடுத்த ஒரு போராட்டத்தின் போது சென்னையில் ஒரு மண்டபத்தில் கொத்து கொத்தாக தோழர்களை கைது செய்து அடைத்து வைத்திருந்தனர். அப்போது குமார் தேநீர் அருந்தும்போது காற்றைக் கிழித்து வந்தது அந்த ஒற்றைக் குரல். அதைக் கேட்கும் சக்தியும், தெம்பும் குமாருக்கு இல்லை. ஆனால், அது கலாவின் குரல்தான் என்பதை உணர்ந்த அந்த நொடியே குமார் அந்தப் பக்கமே திரும்பவில்லை. ஒட்டுமொத்த வலிமையை குமார் இழந்துவிட்டிருந்தான்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குமார் தஞ்சை இசை விழாவுக்கு சென்றான். அங்கே கலாவின் அப்பா கையில் ஒரு குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார்.

குமாரைப் பார்த்ததும் பிரகாசமாய், 'எப்படி இருக்கீங்க தம்பி. நம்ம கலா பாப்பா குழந்தைதான்' என்றதும் குமாருக்கு வார்த்தைகள் வரவில்லை.

கலாவின் குழந்தை இப்போது 5-ம் வகுப்பு படிக்கிறான்.

குமார் சமீபத்தில் அன்புக்குரிய தகப்பன் ஆகி இருக்கிறான்.

மேலே உள்ள கடிதங்களில் குமாரின் கடிதங்கள் மட்டும் எழுதி போஸ்ட் செய்யப்படாதவை.

பிரிய நேர்ந்த பிறகும் எந்த சூழலிலும் அவதூறு சொல்லாததே அன்பின் அடையாளம் என்று குமார் சொன்னது மட்டுமே மீண்டும் மீண்டும் எனக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

- மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்.

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 17: மௌன ராகம் - காதலின் பேசாமொழி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்