அ.ச.ஞானசம்பந்தன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

தமிழறிஞர், இலக்கியத் திறனாய்வாளர்

சிறந்த தமிழறிஞரும் படைப்பாளியுமான அ.ச.ஞானசம்பந்தன் (A.Sa.Gnanasambanthan) பிறந்த தினம் இன்று (நவம்பர் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருச்சி மாவட்டம் கல்லணையை அடுத்துள்ள அரசங்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர் (1916). தமிழறி ஞரும் ஆன்மிக சொற்பொழிவாள ருமான தந்தை லால்குடி உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தான் சொற் பொழிவாற்றிய இடங்களுக்கு எல்லாம் மகனையும் அழைத்துச் செல்வார். இதனால் பல அறிஞர்களின் உரைகளையும் கேட்கும் வாய்ப்பு சிறுவனுக்கு வாய்த்தது.

* சிறந்த அறிவும், சொற்பொழிவாற்றும் திறனும் பெற்ற சிறுவன், 9-வது வயதில் சொற்பொழிவாற்றத் தொடங்கினான். 1927-ல் இவனின் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த ம.ரா.குமாரசாமிப் பிள்ளை, தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைச் சிறுவனுக்கு அணிவித்தார்.

* 1930 வரை திருச்சியிலும் பின்னர் லால்குடியில் பள்ளிக் கல்வி தொடர்ந்தது. பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் சேர்ந்தார். இவரது தமிழறிவைக் கண்டு வியந்த, தமிழ்துறைத் தலைவராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியின் அறிவுரைப்படி தமிழ்த்துறைக்கு மாறினார். அதில், முதுகலைப் பட்டம் பெற்றார். ஆங்கில மொழி அறிஞர், வி.எஸ்.நிவாச சாஸ்திரி மற்றும் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் உள்ளிட்ட பல தமிழறிஞர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது.

* 1942-ல் இருந்து, 14 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றினார். இலக்கியத் திறனாய்வு பாடம் நடத்தினார். 1956-ல் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் நாடகத் தயாரிப்பாளராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

* சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப் பரணி, கம்ப ராமாயணம் உள்ளிட்ட காவியங்களை நாடகங்களாக எழுதினார். தமிழக அரசின் செய்தித் துறையில் மொழிபெயர்ப்புப் பிரிவின் இணை இயக்குநராகவும் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் செயலர், இயக்குநராகவும் செயல்பட்டார்.

* தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் விருப்பத்துக்கு இணங்க மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 1940-ல் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நடைபெறும் கம்பன் விழாவில் ஏறக்குறைய 45 ஆண்டுகாலம் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

* அமெரிக்கா, கொழும்பு, பர்மா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் புதுடெல்லி, பம்பாய், கல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் புராணங்கள், இலக்கியம் குறித்து சொற்பொழிவாற்றியுள்ளார். இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, ‘கம்பன் புதிய பார்வை’, ‘திரு.வி.க.’ உள்ளிட்ட 7 நூல்களாக வெளியிடப்பட்டன.

* இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘குறள் கண்ட வாழ்வு’, ‘மகளிர் கண்ட வாழ்வு’, ‘மந்திரங்கள் என்றால் என்ன’ உள்ளிட்ட 10 நூல்களாக வெளிவந்தன. ‘ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்’, ‘கம்பன் காலை’, ‘தம்பியர் இருவர்’ உள்ளிட்ட கம்ப ராமாயணம் குறித்த பல திறனாய்வு நூல்களையும் எழுதினார்.

* பெரிய புராணம் குறித்து 3 திறனாய்வு நூல்களையும் திருவாசகம் பற்றி 5 நூல்களையும் படைத்துள்ளார். 1985-ல் இவர் எழுதிய ‘கம்பன்: புதிய பார்வை’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்காக, தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றார். ‘இலக்கிய கலை’ என்ற நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்தது.

* ‘அகமும் புறமும்’, ‘அரசியர் மூவர்’, ‘அருளாளர்கள்’, ‘இன்னமுதம்’, ‘கம்பன் எடுத்த முத்துக்கள்’ உள்ளிட்ட இவரது நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்டன. ‘செந்தமிழ் வித்தகர்’ எனப் போற்றப்பட்டார். இறுதிவரை தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தவரும் திறனாய்வுக்கலை முன்னோடியுமான அ.ச.ஞானசம்பந்தன் 2002-ம் ஆண்டு 86-வது வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்