அந்த வாட்ஸ்அப் வீடியோவை மனைவியிடம் காட்டியது என் தப்பு.
‘என் நண்பன் எப்புடி பெரிய ஆளா ஆகியிருக்கான் பாரு’ என்று பீத்திக்கொள்ளத்தான் காட்டினேன். அது ரிவர்ஸ் அடித்து என் பக்கமே திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை.
மூன்றாம் வகுப்பில் ஏபிசிடி ஆரம்பித்த தும், மிரண்டு போனவன், பள்ளியை விட்டு ஓடிவிட்டான். எங்கோ டீ ஆத்தி னான். ஹோட்டலில் வேலை பார்த்தான். போஸ்டர் ஒட்டினான். அப்புறம் கரை வேட்டியுடன் சுற்றிக் கொண்டிருந்தவன் இப்போது பெரியாளாகிவிட்டான். சட்டை பாக்கெட்டுக்குள் புத்தம்புது ரோஸ் கலர் காந்திகள் சிரித்துக்கொண்டிருந்தனர். நாய் கட்டும் சைஸில் கழுத்திலும் கையிலும் சங்கிலிகள். எல்லாம் 916 கேடிஎம் கோல்டு!
ஆடி காரில் ஸ்டைலாய் போஸ் கொடுக்கும் படத்தை எனக்கு வாட்ஸ் அப்பில் போட்டுவிட்டிருந்தான். கா.கா.பீ.கா. என்று ஏதோ ஒரு கட்சிப் பெயர் சொன்னான். அதில் மாவட்டமாக இருக்கிறானாம்.
அதைத்தான் மனைவியிடம் காட்டி னேன்.
சற்று நேரம் வெறித்துப் பார்த்தாள். ‘‘கூடப் படிச்சேன்றீங்க. மூணாங்கிளாஸ் படிச்சுட்டு அவுரு எப்படி ஆகியிருக்காரு பாருங்க.. உங்க அக்கோன்டன்ஸியை தூக்கி குப்பைல போடுங்க’’ என்றாள்.
எனக்கும் அவமானமாகத்தான் இருந்தது.
‘‘இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. வேலைய விடுங்க. உடனே அவரு மாதிரி அரசியல்ல சேந்துடுங்க’’ என்றாள்.
ரோஸ் கலர் காந்திகள் கொண்ட சட்டை பாக்கெட், சங்கிலிக் கழுத்து, ஆடி காருக்குள் என் உருவத்தை மார்ஃபிங் செய்து மனசுக்குள் ஃபைலை ஓபன் பண்ணிப் பார்த்தேன்.
அம்சமாக இருந்தது!
எவ்வளவோ செஞ்சுட்டோம். ஒண் ணும் சரிப்பட்டு வரல. இதையும்தான் செஞ்சு பார்த்துடலாமே என்ற நப்பாசை எட்டிப் பார்த்தது.
படிப்பில் அரசியல் நண்பன் அளவுக்கு கேவலமான மோசமில்லையே தவிர, நானும் கொஞ்சம் சுமார் மோசம்தான். என் மனப்பாடக் கோளாறால் அக்கவுன் டன்ஸி மூணு செமஸ்டருக்கு மேல் தாண்ட முடியவில்லை. இப்போதுகூட பதிமூணாம் வாய்ப்பாடு தகராறு.
(எக்கச்சக்கமாக அரியர்ஸ் வைத் தவர்கள் டிகிரிக்கு மேல் ஒரு கோடு போட்டுக்கொள்ளலாம் என்ற ஐடியாவை கண்டுபிடித்தவர் வாழ்க!) தூரத்து உறவினரின் சிபாரிசில் ஒரு கம்பெனியில் சேர்ந்தேன். சேரும்போதே, இன்டர்வியூவில் தக ராறு. சேர்ந்த பிறகு, லீவு தகராறு. ஒரு நல்லது, கெட்டதுக்கு போக முடியவில்லை.
அந்த வேலையை விட்டுவிட்டு, ஒரு நண்பன் சொன்னான் என்று சோமுகோழி பிசினஸில் இறங்கினேன். அதன்பிறகு பண்டிகை, நாள், கிழமை எல்லாம் சோமுகோழியுடன்தான். சோமு கோழிகள் ஒரு பக்கம் கழியும். என் பொழுதுகள் சோமுகோழிப் பண்ணை யில் கழியும். பிறகு, கோழிகளுடன் சேர்ந்து பிசினஸும் படுத்ததால், சூட் கேஸையும் லேப்டாப்பையும் தூக்கிக் கொண்டு ‘மெடிக்கல் ரெப்’ என கிளம்பி னேன். அரை நிமிஷம் டாக்டரை பார்க்க ஆறு மணி நேரமாக நோயாளிகளுடன் அமர்ந்து இருமிக்கொண்டிருக்க இயலாமல் அதையும் விட்டேன்.
இப்போதைய கிளார்க் வேலையும் திருப்தி இல்லாததால் நீளம் தாண் டியோ, உயரம் தாண்டியோ அரசியலில் குதித்தே ஆவது என்று தீர்மானித்தேன்.
நல்லதொரு சுபமுகூர்த்த நாளில் நண்பனைப் பார்க்க அவனது கட்சி ஆபீஸுக்குப் போனேன். நெய் தடவிய, ‘டை’ தடவிய முரட்டு மீசை, மேல் நான்கு பட்டன்களுக்கு வேலையே இல்லாத வெள்ளைச் சட்டை, அந்த இடைவெளி யில் எட்டிப் பார்க்கும் வைரக்கற்கள் பதித்த தலைவரின் பதக்க செயின் என அக்மார்க் அரசியல் முத்திரையோடு, கட்சித் தலைவரின் அருகே பவ்யமாக நின்றபடி போட்டோவில் கேனத்தனமாக சிரித்துக் கொண்டிருந்தான்.
ஒருசில கரைவேட்டிகள் அவனைப் பார்த்துவிட்டுப் புறப்பட்டன. இன்னும் சில வேட்டிகள் அவனைப் பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருந்தன.
அந்த இடைவேளையில்தான் என்னை அழைத்தான்.
அவனது அறையில் ஏசி சில்லென் றிருந்தது. டவல் போட்ட ராட்சத சுழல் நாற்காலியை முழுவதுமாக ஆக்கிரமித் திருந்தான். இந்த ஆக்கிரமிப்புகூட இல்லாவிட்டால் அவன் அரசியல் வாதியா!
‘அப்புறம், என்ன திடீர்னு இந்தப் பக்கம்?’
நேரடியாக பாயின்ட்டுக்கு வந்தான்.
‘எப்படியாச்சும் என்ன அரசியல்ல சேர்த்துவிடேன்.’
படுபயங்கர காமெடியை கேட்டது போல குபீர் குபீரென குலுங்கிக் குலுங்கி சிரித்தான். அவனது குலுக்கலில், பாக்கெட்டில் இருந்த தலைவர் போட்டோ எகிறிக் குதித்துவிடும்போல இருந் தது. அதை உள்ளே அமுக்கியவன், சிரிப்பில் இருந்து சற்று ஆசுவாச மானான்.
‘ஏதோ அசோக் லேலண்ட்டுல சேத்துவுடுறமாதிரி சொல்ற!’ என்று கேட்டுவிட்டு மீண்டும் சிரித்தான்.
‘சிரிக்காதப்பா, சீரியஸா கேளு. மொதல்ல, இந்த கிளார்க் வேலையை ராஜினாமா செய்யப்போறேன். அப்புறம், ஒரு நல்ல கட்சியில... வேணாம்.. எதுனா ஒரு கட்சியில என்னை கிளார்க்கா சேத்து வுடு. அப்புறம், அசிஸ்டென்டு, ஜூனியர் மேனேஜர், சீனியர் மேனேஜர்னு புரமோ ஷன் வாங்கி அப்புறம், உன்னைப் போல மாவட்டச் செயலாளர் ஆகிடுறேன்.’
என் மாஸ்டர் (?) பிளானை சொல்லி முடித்ததும், முன்பைவிட இன்னும் பெரிய குபீராக சிரித்தான்.
‘பட்டயக் கிளப்புற மாப்புள. அரசி யல்ல நீ பெரிய ஆளா வருவ. ஆனா, இங்க கிளை, வட்டம், மாவட்டம்தான். நீ சொல்றதெல்லாம் கிடையாது’ என்றான். ஒரு நோட்டை எடுத்தான். ‘கிளை வட்ட மண்டலப் பகுதி வாரிய துணைக் கழக செயலாளர்’ என்று படுவெயிட்டாக எனக்கு ஒரு பதவி கொடுத்தான். கையெழுத்து போட்டு அன்றே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண் டேன். கட்சிக் கரை போட்ட துண்டை எனக்கு போர்த்தி வாழ்த்தி வழியனுப்பினான்.
‘கிளை வட்ட மண்டலப் பகுதி வாரிய துணைக் கழக செயலாளர்.’
என் பதவியை ஒருமுறை சொல்லிப் பார்த்தேன். ‘கெத்’தாக இருந்தது. கட்சி அங்கவஸ்திரம் எனக்கு கம்பீரமாக இருந்தது. பின்னங்கழுத்தை சொரியவும் வசதியாக இருந்தது.
இப்படித்தான் தொடங்கியது என் அரசியல் வாழ்க்கை. தொடங்கிய ஜோரில் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, டீ, பிரியாணி என நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது.
முதல் கிலி.. நான் பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம் வடிவில் வந்தது. கண்ணை சுழற்றும் தூக்கத்தை அடக் கிக்கொண்டு, அரசியல் கூட்ட மேடை யில் உட்கார்ந்திருப்பது எவ்ளோ கஷ்டம் என்று உட்கார்ந்து பார்த்தால்தான் தெரி யும். வாயில் இருந்து திமிறிக்கொண்டு வரும் கொட்டாவியை அமுக்கி வாய்க் குள்ளேயே விடுவது ரொம்ப சிரமமாக இருந்தது. மேடையில் இருந்த அனை வருமே இப்படி விதவிதமாக கொட்டாவி களை அமுக்கி விட்டுக்கொண்டிருந் தனர்.
பொதுக்கூட்டத்தில், ஆக்ரோஷமாக மைக் பிடித்து பேசிக்கொண்டிருந்தார் பேச்சாளர். ‘உங்களையெல்லாம் ஒன்று கேட்கிறேன்’ என்று கூட்டத்தை நோக்கி வீராவேசமாக பேசியவர், திடீரென மைக்கை பொத்திவிட்டு, கடைசியாக உட்கார்ந்த என்னை சைகையில் அழைத் தார். ‘நோட்டு அடிக்கிறது ரிசர்வ் பேங்க்கா, ரிவர்ஸ் பேங்கா’ன்னார்! நானோ பதிமூணாம் வாய்ப்பாடே தகராறு கேஸு. திடீரென்று கேட்டதில் எனக்கும் கன்பியூஸ் ஆகிவிட்டது. ‘பெப்பெப்பபப’ என்று விழித்தேன். தனது சிவந்த விழிகளால் என்னை முறைத்தவர், ‘நோட்டு அடிக்கும் வங்கியை பார்த்து ஒன்று கேட்கிறேன்’ என்று சமாளித்தார். சிறப்புரை முடியும்வரை எந்த வங்கி என்று மட்டும் சொல்லவே இல்லை. ஆனால், காரில் ஏறும்வரை என்னை முறைத்துக்கொண்டே இருந்தார்.
இது மட்டுமல்ல; இதுபோல அரசிய லில் ஓராயிரம் பிரச்சினைகள். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியை அழுக்கு படாமல் பார்த்துக் கொள்வது, விறைப் பாய் இருக்குமாறு அயர்ன் செய்வது. எந்நேரமும் யாரையாவது கும்பிட்டுக் கொண்டும், வாய் அகற்றி சிரித்துக் கொண்டும் இருப்பது என்பதுபோல வேறு சில சின்னச் சின்ன பிரச்சினை களும் உண்டு.
இது மட்டுமில்லாமல், பொன்னாடை வாங்கி வாங்கி அக்கவுன்ட் பழுத்து விட்டது. போர்த்திப் போர்த்தி அக்குள் பழுத்துவிட்டது.
பள்ளிக்கூடம், ஆபீஸ் வேலை, இன்டர் வியூ, பிசினஸ், சுயதொழில் ஆகியவற் றில் நான் எதற்கெல்லாம் பயந்து அரசிய லுக்கு வந்தேனோ, அதெல்லாம் டிபார்ட் மென்டல் ஸ்டோர் கணக்காய், இங்கு ஒரே இடத்தில் கிடைக்க ஆரம்பித்தது.
இருந்தாலும், ரோஸ் காந்தி, நாய் சங்கிலி செயின், ஆடி கார் ஆசையில் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தேன்.
ஒருநாள், என்னிடம் பேச்சு கொடுத்தார் ஒரு தொண்டர். ‘கட்சீல என்னவாக்கீறீங்க?’ என்றார்.
‘கி.வ.ம.ப.வா.து.க. செயலாளர்’ என்றேன் நெஞ்சை நிமிர்த்தி.
‘அண்ணனுக்கு வேண்டியவர் னாங்க. டம்மி போஸ்டிங்தானா?’ என்றார்.
டம்மி போஸ்டிங்கா?
‘சாதாரண அடிப்படை தொண்டர், அடிமட்ட தொண்டர்தான். அதையே நம்ம கட்சியில இப்படி டிசைன் டிசைனா சொல்லுவாங்க. நம்ம ஏரியாவுல மட்டும் இதுபோல நானூத்தி நாப்பத்தெட்டு கி.வ.ம.ப.வா.து.க. செயலாளர்கள் இருக்கிறாங்க’ என்று அதிர்ச்சி குண்டு வீசினார் அந்த தொண்டர்.
‘இட்லி கடை நடத்தலாமா?’ என்று வேறொரு நண்பன் ரெண்டு நாள் முன்பு கேட்டிருந்தது ஞாபகம் வந்தது. கி.வ.ம.ப.வா.து.க. செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதினேன். இட்லி பானைக் காக கட்சித் துண்டை எட்டாகக் கிழித்தேன்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago