‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ டீசரில் காட்டப்பட்ட முக்கியக் கதாபாத்திரங்கள் பலருக்கும் தற்போது நன்கு அறிமுகமாகியிருக்கும். 10 அத்தியாயங்களாக கதாபாத்திரங்களுடன் நாம் பழகிக் கொண்டிருக்கிறோம். போர்க்களத்தில் புயலெனவும், மனதிற்குள் பெரும் புயலொன்றோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதித்த கரிகாலன் முதல் ஒற்றரியும் கலையில் பி.எச்.டி வாங்கிய ஆழ்வார்க்கடியான் நம்பி வரை என் மனதைக் கவர்ந்த கதாபாத்திரங்களை பற்றி சொல்லியாகிவிட்டது. இவர்கள் அனைவரும் உங்கள் மனதிலும் இடம் பிடித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
‘கதையில் இவ்வளவுதான் முக்கிய கதாபாத்திரங்களா?’ என்று கேட்டால், இல்லை. கதையில் இருக்கும் பல கதாபாத்திரங்களுள், மற்ற சில முக்கியக் கதாபாத்திரங்களைப் பற்றியும் சுருக்கமாக நாம் காண்போம். இப்போது ட்ரெய்லரும் வெளியாகிவிட்ட நிலையில், கதாபாத்திரங்களை இன்னும் ஆழமாகப் பார்த்தால் இன்னும் பல அற்புதங்களை அறியலாம்.
முதலில், சுந்தர சோழர். ‘மூவுலகையும் ஆளப் பிறந்தவன்’ என்று அருள்மொழிவர்மனை கதையில் பல இடங்களில் பலரும் கூறியிருப்பார்கள். ஆனால் கதையில் தற்போது சோழ நாட்டை ஆண்டுக்கொண்டிருக்கும் 'முவுலகையும் ஆளும் சர்க்கரவர்த்தி' சந்தர சோழரே ஆவார். இளம் பிராயத்தில் தான் தலைமை வகித்துச் சென்ற போரில் தோல்வியுற்றதால் மனம் வருந்தியும், தன் சோழகுல கவுரவத்தை காப்பாற்றவும் கடலில் குதித்து இலங்கையருகில் ஒரு தீவில் கரைசேர்கிறார். அங்கு தன்னை கரடி ஒன்றிடமிருந்து காப்பாற்றும் மந்தாகனியின் மேல் காதல் வயப்படுகிறார். ஆனால், சில காலத்திலேயே தன்னைத் தேடிக்கொண்டு தன் நாட்டவர் வர, மந்தாகினியிடம் விரைவில் திரும்பி வருவதாக சத்தியம் செய்துவிட்டு திரும்புகிறார்.
ஆனால், தன் நாட்டு மக்கள் தான் முடிசூட்டப்பட்டு சர்க்கரவர்த்தி ஆனதற்கு இவ்வளவு மகிழ்ச்சியடைகையில் லட்சக்கணக்கான மக்களின் மகிழ்ச்சி முக்கியமா அல்லது ஒரே ஒரு ஊமைப் பெண்ணின் வாழ்க்கை முக்கியமா என்றெண்ணி இலங்கைப் போவதில்லை என்று முடிவு செய்கிறார். ஆனால் ஒருநாள் மக்கள் கூட்டத்திற்கு இடையில் சோகம் ததும்பிய முகத்துடனும் கண்ணீர் நிறைந்த கண்களினாலும் தன்னை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த மந்தாகினியைக் கண்டு, தான் அவளுக்கு துரோகம் இழைத்துவிட்டோமோ என்று குற்ற உணர்ச்சியிலும், அவளை இனி என்ன செய்வது என்ற பயத்திலும் குழப்பமடைந்து மயக்கமடைகிறார்.
பின்னர் மந்தாகினி இறந்துவிட்டாள் என்ற செய்தி அவர் காதிற்கு எட்டுகிறது. ஆனால், மந்தாகினியின் தோற்றத்தை ஒத்த தோற்றம் கொண்டிருக்கும் நந்தினி தினமும் மந்தாகினி போல வேடமிட்டு சுந்தர சோழரை பயமுறுத்த, மந்தாகினி தான் ஆவியாக வந்து தன்னை பழிவாங்குவதாக எண்ணி குந்தவையிடம் இவற்றையெல்லாம் கூறி அழுது புலம்புகிறார்.
‘பொன்னியின் செல்வன்’ கதையில் என்னை மிகவும் கவர்ந்த பல விஷயங்களுள் ஒன்று, சோழ அரச குலத்தை சேர்ந்தவர்களின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம். அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் செல்வ செழிப்புடனும், கவலையற்றவர்களாக இல்லாமல் ஒவ்வொருவரும் தன் மனதிற்குள் மலையளவு சோகத்தையும் புயல் போன்ற மனக்கிளர்ச்சியையும், சொல்லமுடியாத ஏக்கத்தையும் வைத்துக்கொண்டுதான் இருப்பர்.
ஆதித்த கரிகாலனுக்கு (விக்ரம்) தான் வீரபாண்டியனைக் கொன்றதால் நந்தினியின் குரோதத்தை சம்பாதித்துக் கொண்டோமே... அவள் முகத்தில் எப்படி விழிப்போம் என்ற பயம், அருள்மொழிக்கு (ஜெயம் ரவி) எங்கே நம்மை சோழ நாட்டு சக்கரவர்த்தியாக்கி விடுவார்களோ... நாம் சக்கரவர்த்தி ஆகாவிட்டால் நாடு என்னாகும் என்ற பயம், குந்தவைக்கு (த்ரிஷா) தம்பியை அரசனாக்க முடியாதோ, ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முடியாதோ என்ற பயம். இவர்களின் கவலைகள் பற்றாததற்கு ஆதித்த கரிகாலனின் தாத்தாவான திருக்கோவிலூர் மலையமானுக்கு (லால்) தன் பேரனுக்கு பழுவேட்டரையர்களால் ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயம், செம்பியன் மாதேவிக்கு (ஜெயச்சித்ரா) தன்
மகன் மதுராந்தகன் (ரகுமான்) சிம்மாசனம் ஏறிவிடுவானோ, தான் கட்டி காத்துக் கொண்டிருக்கும் ரகசியம் வெளியே வந்துவிடுமோ என்ற பயம், கொடும்பாளூர் வேளாருக்கு (பிரபு) அருள்மொழி சிம்மாசனம் ஏறமாட்டாரோ, வானதியை (ஷோபிதா) அவருக்கு திருமணம் செய்துவைக்க முடியாதோ என்ற பயம், சம்புவரையருக்கு (நிழல்கள் ரவி) தன் கடம்பூர் அரண்மனையில் வைத்து ஏதும் விபரீதம் நடந்து விடுமோ என்ற பயம், மணிமேகலைக்கு தான் காதலிப்பவன் செய்யாத குற்றத்திற்கு சிறைப்படுவானோ என்ற பயம்.
இப்படி பல கதாபாத்திரங்களும் மனதில் இருள் சூழ சுற்றிக் கொண்டிருக்க, கதையில் தோன்றும் சில கதாபாத்திரங்களை பார்க்குப்போது நம் முகத்தில் சிரிப்பு தோன்றும். தன்னை நாலா பக்கமும் பகையும் ஆபத்தும் சூழ்ந்திருக்கவும் தன் குறும்புத்தனமான இயல்பை இழக்காத வந்தியத்தேவன் (கார்த்தி) மற்றும் கோயில் திருப்பணி செய்வதையே உலகின் சிறந்த பனியாகக் கருதிக்கொண்டு தன் மாமன் மகள் பூங்குழலியை எப்படியேனும் கரம் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சேந்தன் அமுதனை சில எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
இந்நேரத்தில் நாம் வானதியை மறந்துவிட கூடாது. ஏ.ஆர்.ஆர் இசையில் வெளிவந்த 'சொல்' என்ற பாடலை நாம் கேட்டிருப்போம். கதையில் குற்தவை மற்றும் வானதியின் அறிமுகக் காட்சியில் குடந்தை ஜோதிடரை பார்க்கச் செல்லும் வழியில் படகில் வானதி, பிற தோழிகள் பின்னிசை பாட, தன் அழகிய குரலில் பாடுவாள். அதுதான் இப்பாடலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
போஸ்டரில் குந்தவையும் வானதியும் ஒருவரை ஒருவர் பார்த்து அழகாக சிரித்துக் கொண்டிருப்பர். குந்தவைக்கு நம் அரவணைப்பில் இருப்பவள், தன் தம்பி இவளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றதாலேயே வானதி மேல் தனி பிரியம். பெற்றோர் இல்லாவிட்டாலும் குந்தவை ஒருத்தி போதும் என அக்கா, அக்கா என்று குந்தவை மேல் அன்பு மழையை பொழிவாள் வானதி. அருள்மொழியை கரம் பிடிப்போமா, ஏன் அவரைக் கண்டு மயங்கினோம்? (காதல் மயக்கம் மட்டுமில்லை, உண்மையிலேயே மயங்கி கீழே விழுந்துவிட்டாள்) என்ற பயமும் குழப்பமும் இருந்தாலும் குந்தவை தன்னுடன் இருக்கிறாள் என்ற நிம்மதியும், ஒருவிதமான வெகுளிதனத்தையும் அவளிடம் நாம் காணலாம்.
இப்படி படகு செலுத்திக் கொண்டும், பாட்டுப் பாடிக்கொண்டும் இருக்கும் பூங்குழலி மற்றும் வானதி போன்ற பெண்கள் மட்டும் சோழ நாட்டை அழகாக்கவில்லை. சோழ நாடு உண்மையில் எப்படியிருந்தது என உண்மை வரலாறுகள், பல தரவுகளும் உள்ளன. அதில் நம் கல்கி தன் புனைவுக் கதையில் விவரிக்கும் சோழ நாடு, அழிகியல் ததும்பும் செழிப்பான நாடாகவே காட்டப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான கோட்டையையுடைய தஞ்சை, கரிகாலனால் கட்டப்பட்ட பொன் மாளிகையுடன் வீற்றிருக்கும் காஞ்சி, மனதிற்கு நிம்மதி தரக்கூடிய அழகிய பழையாறை எனப் பல இடங்கள் உண்டு. 'பொன்னி நதி' பாடலைக் குறித்து கலவையான விமர்சனங்கள் இருப்பினும் பாடல் வரிகள், வந்தியத்தேவன் பயணிக்கும் வழியில் இருக்கும் மக்களுடன் சேர்ந்து சோழ நாட்டை எளிமையாகவும் அழகாகவும் விவரிப்பது போலவே அமைந்துள்ளது.
நீர் பாய்ந்தவுடன் செழித்து நின்று நெல் வளருவதற்கேற்ப வளமான மண், தங்கள் நாட்டு பெருமையைக் கூற ஆங்காங்கே உளியை வைத்து கல்வெட்டு பொரிக்கக் காணப்படுவது, பகைவர்களைக் கண்டவுடன் வில்லேந்தி எதிர்தது நற்கும் வீரர்கள் என்று அழகிய பொன்னி நதி பாயும் சோழ நாட்டின் அழகைக் குறித்து விவரித்துக் கொண்டே போகலாம்.
ஆனால் கதையில் சோழ நாடும் மக்களும் இறுதிவரை இப்படி மகிழ்ச்சியுடன் இருந்ததாக இல்லை. சோழ ராஜ குடும்பத்தில் ஒருவர் இறக்கப் பேகிறார் என 'தூமகேது' வால் நட்சத்திரம் தோன்றியதோடு அனைவரது நிம்மதியும் காற்றோடு காற்றாக போகிறது . போர் புரிந்து வெற்றி வாகை மட்டுமே சூடும் சோழ நாாடிற்குள்ளேயே போர் வெடித்தது. இருப்பினும் இதற்கிடையேயும் ஆங்காங்கே காதல் மலர்ந்தது.
ட்ரெய்லரில் காட்டப்பட்ட காட்சிகள் எல்லாமுமே கல்கியின் எழுத்துகளுக்கு புத்துயிர் பாய்ச்சியது போலவே எனக்கு தோன்றிற்று. வானை கிழிக்கும் வால் நட்சத்திரமாக இருக்கட்டும்... ஒளி பாய்ந்த விக்ரமின் முகமாக இருக்கட்டும்... எல்லாமே படத்தினை அங்குலமாக அங்குலமாக பார்க்கும் ஆவலை அல்லவா தூண்டியிருக்கிறது எனக்கு.
அடுத்த அத்தியாயத்தில் பொன்னியின் செல்வனில் உள்ள போரையும், காதலையும் உணர முயற்சிப்போம்.
| தொடரும்... |
முந்தைய அத்தியாயம்: PS for 2K கிட்ஸ் - 10 | பொன்னியின் செல்வன் - ஆழ்வார்க்கடியான் நம்பி என்னும் ‘அட்டகாச’ கதாபாத்திரம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago