‘பொன்னியின் செல்வன்’ கதையின் முக்கியமான நிகழ்வுகள் அனைத்திலும் தோன்றும் ஒரே கதாபாத்திரம் வந்தியத்தேவன் மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. கதையில் வரும் திருப்பங்கள் பெரும்பாலானவற்றில் உள்ள ஒருவரும், கதையின் முக்கியத் திருப்பங்களில் ஒன்றாகவும் திகழ்பவர் நம் ஆழ்வார்க்கடியான் நம்பி.
திருமலையப்பன் என்பது இவரது இயற்பெயர். உடம்பெல்லாம் சந்தனம் அணிந்து, தலையில் முன்குடும்பி வைத்து, கையில் குறுந்தடியுடன், கட்டையும் குட்டையுமாய் சைவர்களுடன் 'திருமால் தான் பெரிய கடவுள்' என்று போகுமிடமெல்லாம் வாதமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு வைஷ்ணவ பக்தனாக இவரை முதன்முதலில் வந்தியத்தேவனுடன் நாமும் சந்திக்கிறோம். நாம் ட்ரெய்லரில் கண்ட நடிகர் ஜெயராம் இக்கதாபாத்திரதுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
சிவபக்தர்களுடன் வாக்குவாதம் நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது வந்தியத்தேவன் இடையில் வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை பரிகாசம் செய்து பேசியபோது அவனிடம் கோபப்பட்ட ஆழ்வார்க்கடியான், பின்னர் எப்படியோ அவன் கடம்பூர் மாளிகையில் வந்தியத்தேவன் தங்கப்போவதை அறிந்து, கூத்துப் பார்க்க தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கேட்கிறார். விக்ரமாதித்தனை பிடித்த வேதாளம் போல நம் ஹீரோவை பிடித்துக்கொள்கிறார்.
வந்தியத்தேவனோ அவரை நம்பவில்லை. ஏதோ இடிக்கிறதே என்று அவன் நினைத்தது போல நடு இரவில் நடந்த பெரிய பழுவேட்டரையரின் சதிக் கூட்டத்தில் ஆழ்வார்க்கடியானைக் கண்டதும் அச்சந்தேகம் உறுதியாகிறது. ஏன் கடம்பூர் மாளிகைக்கு கூத்துப் பார்க்க வர விரும்புவதாகப் பொய் சொன்னார் என்று வந்தியத்தேவன் கேட்கவே, அவனுக்கும் நமக்கும் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது .
ஆழ்வார்க்கடியானின் வளர்ப்புத் தங்கைதான் நந்தினி என்ற உண்மை தெரிய வருகிறது. தான் திருவேங்கடத்துக்கு சென்ற சமயத்தில் பெரிய பழுவேட்டரையர், நந்தினியின் அழகில் மயங்கி அவளை சிறைபிடித்துக் கொண்டு போய்விட்டார் என்றும் கூறுகிறார். நந்தினியை வளர்த்த அண்ணனான இவருக்கு கதை முழுவதும் வருமளவுக்கு என்ன வேலை என்பதைக் காண்போம்.
ஓகே ஓகே உதயநிதி - சந்தானம் போல ஜாலியான, கலகலப்பான காம்போ என்று தான் நம் ஆழ்வார்க்கடியானையும் வந்தியத்தேவனையும் சொல்ல வேண்டும். வந்தியத்தேவனுடன் அவன் போகுமிடமெல்லாம் தானும் உடன் சென்று, இருவரும் மாறி மாறி கேலி செய்துகொண்டும் பயணிக்கின்றனர். ‘பொன்னியின் செல்வன்’ கதை முழுவதும் சைவர்கள் நிரம்பியிருக்கும் போதும், வைணவத்தின் சார்பாக வருபவர் நம் நம்பி மட்டும்தான். நகைச்சுவை ததும்ப பேசுவதும், அறிவுபூர்வான ஆலோசனைகள் சொல்வதிலும் வல்லவராக இருப்பதும் இவரை ஒரு கட்டத்தில் நம் ஃபேவ்ரட் கதாப்பாத்திரமாக ஆக்கினாலும், கடம்பூர் மாளிகைக்குள் நுழைய முயன்றது, குந்தவையும் வந்தியத்தேவனும் பேசுவதை ஒட்டுக்கேட்டது போன்ற இவரது செயல்கள் இவர் மேல் சந்தேகத்தை அதிகமாகத்தான் ஆக்குகிறது.
வந்தியத்தேவன் இலங்கைக்குப் புறப்படும் பரபரப்பில் நாம் சிறிது நேரம் திருமலையை மறந்தே விடுகிறோம். சில அத்தியாயங்களுக்கு பின் ராமேசுவரத்தில் சைவர்கள் சிலருடன் கண்களில் அனல் பறக்க சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஆழ்வார்க்கடியான் நம்முன் மீண்டும் தோன்றுகிறார். 'அட என்னப்பா, என்னேரமும் சண்டை பிடித்துக் கொண்டேயிருக்கும் இவரிடம் என்ன ட்விஸ்ட் இருக்க முடியும்?' என்று நீங்கள் நம்பியின் சண்டைகளால் சளித்துப் போகவே, கல்கி அவர்கள் வழக்கம் போல நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.
ஆழ்வார்க்கடியானை பார்க்க சோழ நாட்டின் முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் படகில் வருகிறார். வந்தவரை 'குருவே' என்றழப்பதிலேயே நாம் யூகித்து விடலாம், ஆழ்வார் பக்தனான நம் முன்குடும்பி நம்பி முதல் மந்திரியின் சீடன் என்று. சீடன், தான் கடம்பூர் மாளிகைக்கு சென்றதிலிருந்து குந்தவை வந்தியத்தேவனை இலங்கை அனுப்பிய செய்தியை ஒட்டுக் கேட்டது வரை அனைத்தையும் ஒப்பிக்கையில் நாம் இன்னொரு விஷயத்தையும் அறிந்துக்கொள்ளலாம். பிரம்மராயரின் ஒற்றன்தான் ஆழ்வார்க்கடியான் நம்பி. முதல் மந்திரியான அன்பில் அநிருத்தப் பிரம்மராயரின் ஆணைக்கிணங்க எந்தச் செயலையும் செய்கின்ற, அவரது தலைசிறந்த ஒற்றன் ஆவார். தன் வளர்ப்புச் சகோதரி நந்தினி, பழுவூர் இளையராணியாகி, சோழநாட்டினைக் கைப்பற்றி, சோழர் குலத்தையே அழிக்க நினைக்கும் போதும், சோழர்களின் நலவிரும்பியாகவே திருமலை செயல்படுகிறார்.
வந்தியத்தேவன் ஒருபக்கம் பழுவேட்டரையர் சதியை ஒட்டுக்கேட்க, இங்கு ஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் சதி திட்டத்தை ஒட்டுக் கேட்கிறார். தன்மேல் சந்தேகம் வாரமல் இருக்க தன்னை ஒரு சாதாரண திருமால் பக்தன் போல காட்டிக்கொள்ள முயல்வது, பிரச்சினை வரும் இடங்களில் வலுச் சண்டைகளை தவிர்ப்பது, ராஜ ரகசியம் எதுவும் எவருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்வது, அனைத்தையும் தன் குரு முதல் மந்திரியிடம் கொண்டு சேர்ப்பது போன்று இவர் அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வதிலேயே எவ்வளவு தேர்ந்த ஒற்றர் நம்பி அவர்கள் என்று புரிந்துக்கொள்ளலாம். ராஜாங்க காரியங்களில் ஈடுபடுவது மட்டும் இவருக்கு வேலை இல்லை. வந்தியத்தேவனை பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதும் இவருக்கு முக்கிய பணியாக இருந்தது.
குந்தவையின் வேண்டுகோளின்படி அருள்மொழிவர்மனுக்கு ஓலை கொடுக்க இலங்கைக்குச் செல்லும் வந்தியத்தேவனை அநிருத்தாின் கட்டளைப்படி பின்தொடர்ந்து சென்று பல அபாயங்களிலிருந்து காத்து இளவரசரிடம் ஓலையை சேர்ப்பிக்க செய்கிறார். இளவரசரைத் தன்னுடன் வரும்படி வந்தியத்தேவன் அழைக்க, ஆழ்வாா்க்கடியான் முதல் மந்திரியின் யோசனைப்படி இளவரசா் ஈழத்தில் தங்குவதே நல்லது என்று தெரிவிக்கிறார். யாரோ இரவில் இளவரசரைக் கப்பலில் சிறைபடுத்திச் செல்கிறார்கள் என்று தவறாக நினைத்து, ரவிதாசனிடம் மாட்டிக் கொள்கிறான் வந்தியத்தேவன். இளவரசர் அருள்மொழிவர்மனும் அவனைக் காப்பாற்றச் செல்கிறார். ஆனால் அநிருத்தர் ஊமை ராணியை அழைத்து வரக் கூறியதால் மந்திரி இட்ட கட்டளையே முக்கியம் எனக் கருதி, இளவரசரைப் பின்தொடராமல், ஊமைப் பெண்ணைத் தஞ்சைக்கு அழைத்துச் செல்ல முயல்கிறார்.
கட்டளைகளை பின்பற்றுவதில் மட்டும் கெட்டிக்காரர் இல்லை நம் நம்பி. சிக்கலான சூழல்களில் சாமர்த்தியமாக செயல்படக்கூடியவர். பழையாறை நகருக்கு குந்தவை தேவியைச் சந்தித்து ஓலை கொடுக்க வந்த வந்தியத்தேவனை ஒற்றன் எனக் கூறி பழுவேட்டரையர் ஆட்களிடம் பிடித்துக் கொடுக்க முயல்கிறான் பினாகபாணி . அதை திருமலையப்பன் முறியடித்து, வந்தியத்தேவனைக் குந்தவையிடம் அழைத்துச் செல்கிறார். இளவரசர் கடலில் சூறாவளியில் சிக்கி இறந்துவிட்டார் எனும் வதந்தி மக்களிடம் பரவி, பழையாறை மாளிகைக்கு மக்கள் வந்து இளவரசர் எங்கே என்று மக்கள் கூச்சலிட்டனர். அவர்களை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று குந்தவை தேவியை அங்கு அழைத்துச் செல்கிறார். மக்கள் இதுபோன்ற சமயங்களில் குந்தவை தேவி ஒருவரது பேச்சைதான் பொறுமையாக கேட்டு நடப்பனர் என்பதை அறிந்துள்ளார். கதையில் பல சமயங்களில் ஆழ்வார்க்கடியான் இல்லையெனில் பல இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பலரும் வெளிவந்திருக்கவே முடியாது.
இப்படி சாமர்த்தியமான ஒற்றனாக இருந்தாலும் இவர் நந்தினியை வளர்த்த சகோதரர் என்பதை மறந்துவிட வேண்டாம். நந்தினியை முதன்முதலில் கடம்பூரில் சந்திக்க முயன்றதிலிருந்து, கடைசி கடைசியென மலைக்குகைக்கு அருகில் சந்தித்தது வரை அனைத்து சமயங்களிலும் ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கூட, தன் ஒற்றன் வேலையையும் விட்டு விட்டு தன் தங்கையை காப்பாற்றி செல்ல வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். சோழ நாட்டுக்கும் இல்லாமல் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் கையிலும் சிக்கிவிடாமல் நந்தினியை காப்பாற்ற வேண்டும் என்று அவர் விரும்புவதை நாம் பல இடங்களில் நாம் உணரலாம்.
ஆழ்வார்க்கடியான் கதாப்பாத்திரம் பலரையும் கவர்ந்த காரணம், முதலில் நகைச்சுவை உணர்வுமிக்க சண்டை பிடித்துக் கொண்டேயிருக்கும் வைஷ்ணவராக தோன்றுவது தான். இவரது காமெடி கதாப்பாத்திரத்துக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே இவரது இவரது ஒற்று அறியும் வேலைக்கும் தனி ஃபேன் பேஸ் இருக்கிறது. உங்களை நம் வீர வைஷ்ணவனின் எந்த முகம் மிகவும் கவர்ந்தது என்று என்னிடம் கேட்டால், இரண்டுமே பிடிக்கும் எதைச் சொல்வது என்று தான் குழம்புவேன். அதேபோல நீங்களும் நினைத்தீர்கள் என்றால், ஆழ்வார்க்கடியான் நம்பி தன் நகைச்சுவையாலும் சமயோசித புதியாலும் உங்களையும் என்னைப்போலவே தன் ரசிகராக்கிவிட்டார் என்றே அர்த்தம்.
| தொடரும்... |
முந்தைய அத்தியாயம்: PS for 2K கிட்ஸ் - 9 | பொன்னியின் செல்வன் - நந்தினியின் உண்மை முகம் எது?
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago