மான்டேஜ் மனசு 17: மௌன ராகம் - காதலின் பேசாமொழி!

By க.நாகப்பன்

அலுவலகத்தில் வழக்கமான பணி நிமித்தங்களுக்கிடையே நண்பர் சராவுடன் பேசிக்கொண்டிருந்ததில் சினிமா பற்றிய பேச்சு வளர்ந்தது.

டாபிக்கல் சுவாரஸ்யங்கள் இருந்தாலும் மிஷ்கின், செல்வராகவன், மணிரத்னம் பற்றிப் பேசாமல் சினிமா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை.

'மௌன ராகம்' வெளியாகி 30 வருடங்கள் ஆனதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தனக்குப் பிடித்த டாபிக் பற்றிப் பேசும்போது நீங்கள் சராவை உற்று கவனிக்கும் தேவை இருக்காது. ரொம்ப சாதாரணமாக ஒரு வித அலாதி ஆர்வத்துடன், எக்ஸைட்மென்ட்டுடன் சரா பேசுவது பிடித்தமானதாக இருக்கும்.

சமயங்களில் அவர் சுட்டிக்காட்டும் படங்கள் மீது இனம் புரியாத ஈர்ப்பும், வேறு பார்வையும் கூட ஏற்படும். அப்படித்தான் அன்று 'மௌன ராகம்' பற்றிப் பேச ஆரம்பித்தார்.

'''மௌன ராகம்' படத்தை எப்போ முதல்முறையா பார்த்த?''

''சரியா நினைவில்லை. சன் மூவிஸ் சேனல்ல பார்த்திருக்கேன். 'தளபதி', 'மௌன ராகம்' ரெண்டு படங்களையும் அதிகம் பார்த்திருக்கேன். அப்போ நான் நாலாவது படிச்சிருந்திருப்பேன்னு நினைக்கிறேன்.''

''நீங்க?'' என்று கேட்டதுதான் தாமதம். அருவி மாதிரி கொட்ட ஆரம்பித்துவிட்டார்.

''நான் 'மெளன ராகம்‬' படத்தை 13 வயசுல டிடியில் ரெண்டு மூணு தடவை கார்த்திக் போர்ஷன் முடியற வரைக்கும் பார்த்தேன். அதுக்கு மேல என்னால நகர முடியல. ஆனால், அந்தப் படம் எப்ப போட்டாலும் கார்த்திக் சாகற வரைக்கும் பார்ப்பேன். அதுவே எனக்கு நல்ல நிறைவைக் கொடுத்துச்சு.

அதே படத்தை 17 வயசுல முழுசா பார்த்தேன். அப்பவும் என்னை கார்த்திக் கேரக்டர்தான் ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிச்சு.''

''இன்ட்ரஸ்டிங். மிஸ்டர் சந்திரமௌலின்னு துள்ளலும் உற்சாகமா கூப்பிடுற அந்த குரலை அப்புறம் கார்த்திக் படங்கள்ல பார்க்க முடியலை. நூலகத்தில் இருக்கும் ரேவதியிடம் காதலை சொல்ல வரும் கார்த்திக் சீரியஸ் ரியாக்ஷன் கொடுத்துட்டு, மைக் போட்டு கலாட்டா முறையில் காதல் சொல்வது எனக்குப் பிடிச்சது. ஆனா, மைக் போட்டு லவ் சொன்ன கார்த்திக்கு அந்த பேரு இல்லை. சும்மா மைக் பிடிச்சு பாடுற மாதிரி பாவனை காட்டினவரை மைக் மோகன்னு சொல்லிட்டோம்ல.''

'' அட. இப்படியும் யோசிக்கலாம்ல. என் 26 வயசுல 'மௌன ராகம்' பார்த்த போது கார்த்திக் மேல இருந்த கிரேஸ் குறைஞ்சுது. மோகன் கேரக்டர் முழுசா பிடிச்சது. எவ்ளோ அழகா எல்லாத்தையும் டீல் பண்றான்னு தோணுச்சு. 30 வயசுல பார்த்த போது ரேவதி கேரக்டரோட ஆசைகள், தவிப்புகள், சிக்கல்கள் மேல கவனம் போச்சு. அவளை எவ்ளோ அழகா டீல் பண்ணி, தன் மீது காதல் கொள்ள வைக்கிறது அந்த மோகன் கேரக்டர்னு தோணுச்சு. அப்பவும் மோகனோட கேரக்டர்தான் என்னை ரொம்ப ஆட்கொண்டுச்சு.''

''இப்பவும் அப்படி தோணுதா?''

''இப்பவும் புது படம் மாதிரியே பார்க்க முடிஞ்சுது. ஆனால், இப்ப அந்த மோகன் கேரக்டர் மேல செம கோபம் வந்துச்சு. ரேவதி கேரக்டர் எவ்ளோ இறங்கி வந்த அப்புறமும் மோகன் குத்திக்காட்டுறது சாடிஸம்.

இப்படித்தான் நான் அந்த சினிமாவை ஒவ்வொரு கால காட்டத்துலயும் ஒவ்வொரு விதமா ரசிச்சு பார்த்திருக்கேன். செம்ம படம். ஒரு தடவை கூட அலுப்பு ஏற்படல.''

''இனியும் தொடர்ந்து 'மௌன ராகம்' பார்ப்பீங்கதானே?''

''ஆமாம். 'மெளன ராகம்' படத்தை 40, 50, 60 வயசுலகூட நான் பார்க்க வாய்ப்பிருந்தால் பார்ப்பேன். அப்ப அந்தப் படம் நிச்சயம் அலுப்பு ஏற்படுத்தாம வேறு விதமான அனுபவத்தைத் தரும்னு நம்புறேன்.''

'' 'மெளன ராகம்' படத்துல நான் சொன்னது இதைத்தான்னு மணி சார் கோனார் நோட்ஸ் போட்டிருந்தா வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு அனுபவங்கள் கிடைச்சிருக்காது. ஆனா, நிஜத்துல அப்படி யாராச்சும் இருக்காங்களா?''

''என் அத்தை இருக்காங்க. காதல் எல்லாம் இல்லை. ஆனா, புது இடத்துல அறிமுகம் இல்லாத ஆணோட குடும்பம் நடத்துறது சாதாரண அனுபவம் இல்லை.''

''நிச்சயமா.''

சராவுடன் பேசியதிலிருந்து ஆண்டாள் அத்தை மட்டுமே நினைவில் இருந்தார்.

பக்தி இலக்கியத்தில் வரும் ஆண்டாள் கண்ணுக்குத் தெரியாத கடவுள் கண்ணனுக்காக சகலத்தையும் கொடுக்கத் துணிகிறாள். காதல் உள்ளத்தைப் பறிகொடுக்கிறாள். என் மாமாவின் மனைவி ஆண்டாள் அதிலிருந்து அப்படியே முரண்பட்டவர்.

சிவராஜ் மாமா, தன் மனைவி ஆண்டாளைப் பற்றி அதிகம் சிலாகித்துப் பேசியிருக்கிறார்.

ஆண்டாள் அத்தைக்கு அவர் அப்பாவின் முகமே தெரியாது. அத்தை குழந்தையாய் இருக்கும்போதே அவர் அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ஓடிப் போய்விட்டார்.

அத்தையை வளர்த்து ஆளாக்கியதெல்லாம் அவர் அம்மாதான். 'அப்பா வளர்க்காத பொண்ணை தப்பா பேசிடக்கூடாது'னு அவர் அம்மா பார்த்து பார்த்து வளர்த்தார். தைரியமான பெண்ணாக வளர்ந்தாலும் அத்தையின் குறும்புத்தனமும், சேட்டையும் எப்போதும் கலகலப்பாக்கும். ஆனால், அத்தையும் சில தீர்க்கமான முடிவுகள் திகைப்பை வரவழைக்கும்.

''திடீரென்று ஒருநாள் அப்பா தன் கண்முன் வந்து நின்றாலும் கூட எனக்கு எந்த பாசமும் இருக்காது. அவர் என் அம்மாவுக்கு புருஷனா இருக்கலாம். எனக்கு அப்பா கிடையாது. என் வாய்ல இருந்து அப்பாங்கிற வார்த்தை வராது. எப்பவும் அவரைக் கூப்பிடமாட்டேன். 20 வயசுல திடீர்னு எப்படி என்னால ஒருத்தரை அப்பான்னு ஏத்துக்க முடியும்?'' என்பார்.

அத்தையின் அம்மாதான் கண் கலங்கியபடி, ''என் புருஷன் திரும்பி வந்தா போதும்'' என எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டிருப்பாள்.

ஆண்டாள் அத்தையின் சிந்தனையில் தெளிவு இருக்கும். ''முன்ன பின்ன தெரியாத ஒருத்தனை கைகாட்டி, அவன் தான் உன் புருஷன்னு சொல்வாங்க. அவனை நம்பி என் 50 வருஷ வாழ்க்கையை ஒப்படைக்கணுமா? அதெப்படி சாத்தியமாகும்'' என்று முற்போக்கு முகத்துடன் கேள்வி கேட்டவர் ஆண்டாள் அத்தை.

பேச்சு, கவிதை என்று கல்லூரி காலங்களில் ஆண்டாள் அத்தை வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரின் கவிதைகளை அரும்பு, பெண்ணே நீ, மல்லிகை மகள் உள்பட பல இதழ்களில் பிரசுரம் ஆகியுள்ளன.

அத்தைக்கு சிவராஜ் மாமாவுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. ''அதெப்படி அறிமுகமே இல்லாத ஒருத்தர் கூட போன்னு சொல்றீங்க. நானும் போகணுமா? இவ்ளோ நாள் தெரிஞ்சவங்க வீட்டுக்குக் கூட போகக்கூடாதுன்னு கண்டிப்பா வளர்த்தீங்க. இப்போ தெரியாத இடத்துக்கு, திரும்பி வரணும்னு நினைச்சா கூட வர முடியாத அளவுக்கு தூரமா அனுப்பிறீங்க.

அம்மா அப்பாவே காசும் கொடுத்து பொண்ணை வியாபாரம் பண்றாங்க. அதுக்கு கல்யாணம்னு நாகரிகமா பேர் வைக்குறீங்க. ஆனா, அதுக்கு பேர் வேற. அந்த சடங்கு சம்பிரதாயத்துக்கெல்லாம் நான் சம்மதிக்கமாட்டேன்'' என்றார்.

ஆண்டாள் அத்தை எதிர்காலம் குறித்த எல்லா கனவுகளோடும் வலம் வந்தவர். அத்தை டிகிரி முடித்ததுமே சந்தர்ப்பவசத்தால் திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்பட்டதால் இப்படி வார்த்தைகளை உதிர்த்தார்.

அதையும் மீறி பெங்களூரில் வங்கியில் பணிபுரிந்து வந்த சிவராஜ் மாமா, பக்கத்து ஊரில் பெண் பார்க்கும் படலத்தில் அத்தையைப் பார்த்து பிடித்திருக்கிறது என்று சொன்னார்.

அத்தையின் தாத்தா ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். தனக்குப் பிறகு தன் மகள் மாதிரி பேத்தியும் தனியாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சிவராஜுக்கு கட்டிக் கொடுக்க சம்மதித்தார்.

ஆண்டாள் அத்தைக்கு இஷ்டமே இல்லை. அவர் தாத்தாவின் உடல்நிலையும், அம்மாவின் அழுகையும் திருமணத்துக்கு சம்மதம் சொல்ல வைத்தன.

ஒரு பொம்மையைப் போல மணமேடையில் உட்கார்ந்திருந்தார். இப்போதும் திருமணத்தில் எடுத்த அந்த ஒரு போட்டோவைப் பார்த்தாலும் செயற்கையாக அத்தை நின்றிருப்பது தெரியும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மூலையில் இருக்கும் ஆண்டாள் அத்தை பெங்களூருக்கு கணவனுடன் சென்றார்.

மாமியார், கணவன் என இரண்டு பேர் மட்டுமே இருக்கும் வீட்டில் மருமகளாக, மனைவியாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகள் ஆண்டாள் அத்தைக்கு அளவுக்கு அதிகமாகவே வழங்கப்பட்டன.

''கல்யாணத்துக்கு முன்னாடி உங்ககிட்ட பழகவே இல்லை. இந்த இடம் புதுசு. நீங்க, உங்க அம்மா புதுசு. நான் கொஞ்சம் பழகணும். அதுக்கு கொஞ்சம் நாள் ஆகும்'' என்று கணவனிடம் சொன்னார். சிவராஜ் மாமாவும் நிறைய விட்டுக்கொடுத்தார். காலம் கைகூடும் என்று காத்திருந்தார்.

பேசித் தீர்க்க முடியாதது எதுவும் இல்லை என்பதில் அழுத்தமான நம்பிக்கை இருவருக்கும் இருந்தது. நிறைய பேசினார்கள். புரிந்துகொண்டார்கள்.

பிடிக்கலை. வேணாம். என்னை ஏன் கல்யாணம் பண்ணீங்க என்று ஆரம்பத்தில் பேசிய ஆண்டாள் அத்தை அதற்குப் பிறகு அன்பின் வடிவமாய் மாறிப் போனாள்.

பைக் விபத்தில் காயப்பட்ட சிவராஜ் மாமாவை அத்தை அனுசரணையாக பார்த்தக்கொண்டார். அதற்குப் பிறகு மெல்ல அரும்பியது காதல். அவர்கள் காதலின் அடையாளமாய் இப்போது ஸ்வேதா இன்ஜினீயரிங் படிக்கிறாள். கணேஷுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.

'மௌன ராகம்' ரேவதியை நினைக்கும்போது ஆண்டாள் அத்தைதான் மனதுக்குள் வந்து போகிறார்.

'மௌன ராகம்' மணி சாரின் முக்கியமான படம்.

பெற்றோருக்காக அறிமுகமில்லாத ஆணை திருமணம் செய்துகொள்ளும் பெண், காதலனை மறக்க முடியாமல் கணவனுடன் வாழப் பிடிக்காமல் விவாகரத்து கேட்கிறாள். ஒரு வருடம் சேர்ந்து வாழ வேண்டும் என்ற சட்ட நெறிமுறை அறிவுறுத்துகிறது. அந்த காலகட்டத்தில் இருவரும் காதலில் விழுந்து மனமொத்த தம்பதிகள் ஆகிறார்கள்.

மருத்துவமனையில் இருந்து வரும் மோகனை ரேவதி பணிவிடைகளால் கவனிக்கிறார். சாப்பாடு ஊட்ட முயற்சிக்கும் ரேவதியைத் தடுக்கிறார். 'நான் தொட்டா கருகிடமாட்டீங்க' என சொல்லும் ரேவதியிடம், 'எனக்கு ஒண்ணும் இல்லை. உனக்குதான் கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கும்' என்கிறார்.

போதிய ஓய்வில்லாமல் அலுவலகம் கிளம்பும் கணவனைப் பார்த்து, 'ரெஸ்ட் எடுங்க. தொட்டுத் தாலி கட்டுன பொண்டாட்டி நான். என் பேச்சை கேட்க மாட்டீங்களா' என்கிறார்.

'என்னைப் பொறுத்தவரை அது வெறும் மஞ்சள் பூசின ஒரு கயிறு' என்று முன்பு ரேவதி சொன்ன அதே வார்த்தையை ரிப்பீட் அடிக்கிறார்.

ரேவதியின் அப்பா - அம்மா வருகையிலும் மோகன் பெரிய ஈடுபாடு காட்டவில்லை.

விவாகரத்து மனுவா? கொலுசா? என்ற இரண்டு சாய்ஸில் கொலுசைத் தேர்ந்தெடுத்ததை ரேவதி மோகனுக்கு காட்ட விரும்புகிறார். மோகன் எரிந்துவிழுகிறார். அவரின் உச்சகட்ட கோபத்தால் அவசர அவசரமாக மெட்ராஸுக்கு டிக்கெட் எடுக்க நேரிடுகிறது.

'நான் வெட்கத்தை விட்டு ஒத்துக்குறேன். நான் உங்களை விரும்புறேன்' என்று சொல்லும் ரேவதி பயணம் செய்யும் ட்ரெயின் கிளம்பியபோது மோகன் அடிபட்டு, காயத்துடன் ரயில் ஏறி, ரேவதியை உடன் அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறார்.

ரேவதியின் மனநிலையை, கதாபாத்திரத்தின் வடிவமைப்பை வசனங்களே உணர்த்திவிடுகின்றன. ''பொண்ணு பார்க்கிறது சந்தையில மாட்டைப் பார்க்கிற மாதிரி இருக்கு. எனக்குப் பிடிக்கலை'', ''எனக்கு கல்யாணம் பண்ணப் பார்க்கறீங்களா? இல்லை விக்கப் பார்க்கறீங்களா வரதட்சணை வேண்டாம்னு சொன்னா உடனே பொட்டலம் கட்டி வித்துடுவீங்க''.

முதலிரவுக்கு தயாராகச் சொல்லும் அம்மாவிடம், ''எனக்கு இது வேண்டாம் மா. பிடிக்கலை. இதே ரெண்டு நாள் முன்னாடி இப்படி என்னை அனுப்பி இருப்பியா?'' என்று கேட்கிறார்.

''இதெல்லாம் செங்கல் சிமென்ட்டால கட்டுனது. இதை வீடா மாத்த வேண்டியது உன்கையிலதான் இருக்கு.''

''எனக்கு செங்கல், சிமென்ட்டே போதும்'' என்று வெறுப்பை உமிழ்கிறாள்.

கார்த்திக்குடன் பேசும்போதும், ''என்னைப் பார்க்க வர்றது, ரோட்ல பார்த்து அழகா இருக்கேன்னு சொல்றது, வீட்டுக்கு வந்து பிடிச்சுருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றதெல்லாம் பிடிக்காது'' என்கிறார். இதன் மறு உருவாக்கம் தான் அலைபாயுதேவில் வரும் "சக்தி நான் உன்ன விரும்பலை. நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு'' வசனம்.

ஏன் மோகன் சாடிஸ்டா இருக்கார்? என்ற கேள்வி விடாமல் துரத்துகிறதா? இந்த இடத்தில் நுட்பமாக சில சங்கதிகள் உள்ளன. மோகன் நடத்தையை ஆரம்பத்தில் இருந்தே கவனிக்க வேண்டும்.

கல்யாணம் பிடிக்கலை என்று சொன்ன ரேவதியிடம், மோகன் சொல்வது என்ன?

''குழந்தை ஏன் அழுதுகிட்டே பொறக்குது தெரியுமா. இந்த உலகத்துக்கு வர விருப்பம் இல்லைன்னு அழலை. வந்த இடம், மொழி, சூழல் எல்லாம் புதுசா இருக்குன்னு அழுது. கிட்டத்தட்ட அதே மாதிரிதான் உன் நிலைமையும். புது இடம், புரியாத மொழி, அறிமுகமில்லாத புருஷன். அந்த கஷ்டம் எனக்கு புரியுது. அது தானா மறையுற வரைக்கும் நான் காத்திருக்க தயாரா இருக்கேன்'' என்று பொறுமையாக அணுகுகிறார்.

என் இதயம் என்னிடம் இல்லை என்று ஃபிளாஷ்பேக்கில் கார்த்திக் உடனான காதலைச் சொன்ன பிறகும் கூட, ''உன் கடந்த காலத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. எதிர்காலத்தைப் பகிர்ந்துக்க ஆசைப்பட்டேன். இன்னும் ஆசைப்படறேன்'' என்று நிதானத்தை கடைபிடிக்கிறார்.

''உங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன வேறுபாடு'' என்று கேட்கும் வழக்கறிஞரிடம், ''வேறுபாடு எதுவும் இல்லை. பெருசா எந்த ஈடுபாடும் இல்லை'' என இயல்பாக சொல்கிறார்.

விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போது நண்பர்களின் விருந்தில் ரேவதி பங்கேற்காத போதும் எதுவும் சொல்லவில்லை. ''என் மேல உங்களுக்கு கோபம், வருத்தமே இல்லையா'' என்று ரேவதி கேட்கும் கேள்விக்கு ''குட் நைட்'' என்று ஒற்றை வார்த்தையில் பக்குவப்பட்டு பதில் அளிக்கிறார்.

''உனக்கு எல்லா சுதந்திரமும் இந்த வீட்ல இருக்கு. எந்த விதத்துலயும் உன் வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன். இந்த ஒரு வருஷம் உன் விருப்பம் போல இருக்கலாம்'' என்றி ரேவதியிடம் சொல்லும் போது புரிதலில் ஆளுமை செலுத்துகிறார்.

''உன் அப்பா, அம்மா கிட்ட அன்பா, மரியாதையா நடந்துக்க ஆசைதான். ஆனா, ஒரு வருஷம் கழிச்சு நீ உன் வீட்டுக்குப் போகும்போது விவாகரத்துக்கு காரணம் நீமட்டும்தான்னு நினைப்பாங்க. இப்போ அப்படி ஒரு புருஷனோட வாழ்றதை விட தனியா வந்ததே நல்லதுன்னு உன்னை வரவேற்பாங்க'' என்ற மோகனின் பதில் காலம் கடந்தும் யோசிக்கக்கூடியதாக உள்ளது.

''கணக்கு எல்லாம் போட்டு விட்டு ரேவதி நீங்க சொல்ல எதாவது இருக்கின்றதா?'' என்று கேட்க, ''நாலு மணிக்கு டிரெயின் இரண்டுமணிக்கு வந்து அழைச்சிகிட்டு போறேன்'' என்கிறார்.

ஏன் மோகனின் நடவடிக்கைகள் இப்படி இருக்கின்றன? ''நான் போட்ட காபி சாப்பிடமாட்டீங்களா'' என ரேவதி கேட்கும்போது, ''ஒரு வருஷத்துக்கு அப்புறம் யார் காபி போட்டுத் தருவா? அந்த சுகம் பழகிடுச்சுன்னா பின்னாடி நான் தானே கஷ்டப்படணும்'' என்கிறார்.

கொலுசை காட்ட விரும்பும் ரேவதியிடம் எரிச்சல் அடைகிறார் மோகன். அதில் சங்கட்டப்படும் ரேவதி நிம்மதிக்காக நடு ரோட்டில் நடக்க, சில வாலிபர்கள் அவரைத் துரத்துகின்றனர். அந்த நேரத்தில் மோகன் வந்து நிலைமையை உணர்ந்து ரேவதியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். ரேவதியின் கையில் ஏற்பட்ட காயத்துக்கு பேண்டேஜ் போடுகிறார். காலை எழுந்ததும் ரேவதிக்கு குங்குமம் வைத்துவிடுகிறார். அப்படி என்றால் அந்த எரிச்சல் உண்மையானது இல்லை.

அப்போது பார்த்து மெட்ராஸ் செல்ல டிக்கெட் கிடைக்கிறது.

''நான் என்ன பண்றது?'' (''போகாதேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன். சத்தியமா இந்த ஜென்மத்துக்கு உங்களை விட்டுப் போகமாட்டேன்'' என ரேவதி மனதில் மருகுகிறார்.)

(''போக விரும்பலைன்னு ஒரு வார்த்தைமட்டும் சொல்லேன். சத்தியமா நான் உன்னை போக விடமாட்டேன்'' என மோகனும் நினைக்கிறார்.)

''நான் போகட்டுமா? வேண்டாமா?''

''உன் இஷ்டம். நீ என்ன நினைக்குறியோ அதை செய்.''

''நான் நீங்க நினைக்குறதைப் பத்தி கேட்குறேன்.''

''இது உன் வாழ்க்கை உன் முடிவு. எனக்கும் உன் முடிவுக்கும் சம்பந்தம் இல்லை'' என்கிறார் மோகன்.

பிரிவுக்குத் தன்னையோ அல்லது ரேவதியையோ தயார்படுத்துவதற்காக அதை மோகன் சொல்லவில்லை.

எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ரேவதியே தெளிவாக டிக்ளேர் செய்துவிட வேண்டும் என்பதை மோகன் கதாபாத்திரம் விரும்புவதையே இதிலிருந்து உணர முடிகிறது.

'ஓ மேகம் வந்ததே' சிறந்த மழைப்பாடலாக இப்போதும் சொல்லப்படுகிறது. 'நிலாவே வா', 'மன்றம் வந்த தென்றலுக்கு', 'பனி விழும் இரவு' பாடல்களும், 'சின்னச் சின்ன வண்ணக்குயில்' பாடலும் எவர் க்ரீன் ஹிட். பாடலிலும், காட்சிக்குத் தகுந்த பின்னணி இசையைக் கொடுத்து மௌனத்தை உலவ விட்ட விதத்திலும் இளையராஜா இசை ராஜா. பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவும் படத்தை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றன.

'மௌனராகம்' படத்துல வர்ற 'பனி விழும் இரவு' பாடலில் ஃபுளூட் வாசிக்கிற மாதிரி சின்ன துண்டுக் காட்சியில் சின்ன வயது பிரபுதேவா வந்து போகிறார்.

''கல்யாணம் பண்ணாமயே சேர்ந்து வாழுறாங்க. நீ என்னடான்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரே வீட்ல பிரிஞ்சு இருக்கே'' என வி.கே.ராமசாமி பேசுகிறார். லிவிங் டூ கெதர் வாழ்க்கை பற்றி அப்போதே பேசியிருக்கின்றனர்.

மகேந்திரனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படம்தான் மணிரத்னத்தின் 'மௌனராகம்' என்று சொல்வோர் உண்டு. உண்மையில் அது இல்லை.

'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் சுஹாசினி சுட்டிப் பெண். மோகனைக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சுஹாசினியை மோகன் சந்தேகப்பட, காதலில் விரிசல் விழுகிறது. பிரதாப் போத்தனை மணக்கும் சுஹாசினி கணவனுடன் இணக்கமாக வாழ முடியாமல் காதல் நினைவால் தவிக்கிறார். காதலனே நேரில் வந்து குழப்பம் தீர்க்க, கணவனுடன் மகிழ்ச்சியாய் வாழ்கிறார்.

இதையொட்டிப் பார்க்கும்போது 'மௌனராகம்' கதையும் அதுதானே என தோன்றும். ஆனால், காலத்தின் சூழலில் நடந்தது வேறு. 'மௌன ராகம்' படத்தின் அசல் திரைக்கதையை மணிரத்னம் எழுதும்போது கார்த்திக் கதாபாத்திரம் சேர்க்கப்படவில்லை. உற்சாகத்துடனும், துடுக்குத்தனத்துடனும் உலா வரும் பெண்ணை முகம் தெரியாத முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து, பாஷை தெரியாத புது இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவளுக்கு ஏற்படும் மன சிக்கல்கள், அவஸ்தைகள், தடுமாற்றங்கள் என்ன? அதிலிருந்து எப்படி அவள் மீண்டு வருகிறாள் என்பதை உளவியலுடன் சொல்லும் படமாகத்தான் திரைக்கதையை மணிரத்னம் அமைத்திருந்தார்.

ஆனால், இதுமட்டுமே எல்லா பக்கங்களிலும் உள்ள பார்வையாளர்களை சென்றடைய போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்து கார்த்திக் கதாபாத்திரம் நுழைக்கப்பட்டதாம். அதுவும் மணிரத்னத்தின் முதல்படமான 'பல்லவி அனுபல்லவி' படத்தில் அனில் கபூரின் போர்ஷனை அப்படியே கார்த்திக்கை வைத்து எடுத்து சாமர்த்தியமாக கதையில் நுழைத்துவிட்டதால் படமும் பேசப்பட்டது என சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் இது 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தின் தழுவலாக இல்லை. சந்தர்ப்பவசத்தால் ஒரு போர்ஷனை சேர்க்கப் போய், அந்தக் கதையே தலைகீழாக மாறிவிட்டது.

கார்த்திக் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டதில் நெருடலோ, உறுத்தலோ தெரியவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அந்த கதாபாத்திரத்தை கத்தரித்து இருந்தால் அறிமுகமில்லாத ஒருவனைக் கணவனாகக் கொண்ட பெண்ணின் மன சிக்கல்களை விவரிக்கும் முக்கியமான படமாகவே இருந்திருக்கும். ஆனால், கார்த்திக் பாத்திரத்தால் காதலனை மறக்க முடியாமல் கணவனுடன் வாழப் பிடிக்காமல் இருக்கும் ஒரு பெண்ணின் கதையாக மாறிவிடுகிறது.

'மௌன ராகம்' படத்தின் தழுவல்தான் 'ராஜா ராணி' என்று சொல்லப்படுவதேன்?

துணிச்சல் பெண் நயன்தாராவும், பயந்த சுபாவம் உடைய ஜெய்யும் காதலிக்கின்றனர். ரிஜிஸ்டர் ஆபிஸில் கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். இதனிடையே ஜெய் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு அப்பா சத்யராஜுக்காக, நயன்தாரா ஆர்யாவை திருமணம் செய்துகொள்கிறார். ஆனாலும், காதலை மறக்க முடியாமல் இருக்கும் நயன்தாரா இறுதியில் ஆர்யாவுடன் அன்பில் நனைகிறார். ரிஜிஸ்டர் ஆபிஸ், அவசரக் கல்யாணம், நாயகன் இறப்பு போன்ற அம்சங்களால் 'ராஜா ராணி', மௌனராகத்தின் தழுவலாகப் பார்க்கப்பட்டது.

'தாண்டவம்' கதை கூட இப்படித்தான். முன் பின் அறிமுகமில்லாத, துணை என்ன வேலை செய்கிறார் என்றே தெரியாத இருவர் திருமண பந்தத்தில் நுழைகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள காதல் துளிர் விடுகிறது. அதற்குப் பிறகு நடப்பது என்ன என்பது 'தாண்டவம்' கதை.

கார்த்திக் கதாபாத்திரம் இல்லாத 'மௌனராகம்' மட்டும் வெளியாகியிருந்தால் அது மக்களால் கொண்டாடப்பட்டிருந்தால், மணிரத்னம் சமூக அக்கறை போன்ற சாயம் கொண்ட படைப்புகளைக் கொடுக்காமல், அசலான காத்திரமான தீவிரத்தன்மையுடைய பல படங்களைக் கொடுத்திருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில், எமோஷனை கலாபூர்வமாகவும், காட்சிரீதியாகவும் சரியாக அணுகுவது மணிரத்னத்துக்கு கைவந்த கலை.

- மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 16: மாரிகளின் தீராக் காதலால் வாடா 'பூ'வுலகு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்