மான்டேஜ் மனசு 15 - நீரில் மூழ்கி காதலில் மீண்ட பறவை!

By க.நாகப்பன்

ஒரு மந்தமான மதியப்பொழுதில் ஸ்பென்சர் பிளாசா சரவண பவனில் சாப்பிடப் போகும்போதுதான் யதேச்சையாக சந்துருவை சந்தித்தேன்.

சினிமா டீமுடன் பேசிக்கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து கையசைத்தான்.

ஒரு ஹாய், 2 நிமிட நலம் விசாரிப்புக்குப் பிறகு வருத்தம் படர பேசினான்.

''காலேஜ் முடிச்ச 3 வருஷத்துல உருப்படியா எதுவும் பண்ணலை மச்சி. ஃபீல்டுக்கு வராதது இன்னும் பயமா இருக்குடா. அதான் சின்ன கம்பெனி படமா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு புராஜெக்டுக்கு ஓ.கே. சொன்னேன். 'சீன் சொல்லுங்க பாஸ்'னு சொல்றாங்க. எழுதி கொடுக்கிறேன். ஆனா, பேட்டா மட்டும்தான் தர்றாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ எங்கேயாவது சேர்த்து விடுடா. ப்ளீஸ்.''

''நிச்சயமா டா. எந்த மாதிரி இயக்குநர்கிட்ட சேரணும்னு ஆசைப்படற.''

''சுசீந்திரன், சீனு ராமசாமி மாதிரி படம் பண்ண ஆசை. அவங்க கிட்ட சேர்த்துவிடுடா.''

''சுசீந்திரன் சார் கிட்ட நிறையபேர் அசிஸ்டன்ட்டா இருப்பாங்கடா. காத்திருக்க சொல்வாங்க. சீனு சார் கிட்ட வேணா பேசிப் பார்க்கலாம்.''

''சீனு ராமசாமி சார் கிட்ட வேலைக்கு சேர்ந்தா அது மகிழ்ச்சியாவும், மனநிறைவாவும் இருக்குடா.''

''ஏன் மச்சான்?''

'' 'நீர்ப்பறவை' பார்க்கும்போது என் அண்ணன் வாழ்க்கை அப்படியே இருக்கும்டா என்றான். பெர்சனலா எமோஷனலை கன்வே பண்ண படம்ங்கிறதால அவர்கிட்ட சேர்ந்தா ரொம்ப நல்லா இருக்கும்.''

''சரிடா. அப்புறம் பேசலாம்'' என்று அப்போதைக்கு விடை பெற்றோம்.

அவன் சொன்ன அண்ணனின் அருள் கதை நெஞ்சுக்கு நெருக்கமானது.

கந்தசாமி - மணிமேகலை தம்பதியினரின் தலைமகன் அருள். இவன் பிறக்க ஏழு வருடங்கள் பெரியபாளையத்தம்மனுக்கு தவம் கிடந்தனர். அருள் பிறந்த பிறகும் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அவன் பெற்றோர் அங்க பிரதட்சணம், அபிஷேகம், அன்னதானம் செய்கின்றனர். இப்படி கடவுள் அருளால் பிறந்த குழந்தை என நம்பப்பட்டதால் அருள் என்றே பெயர் வைத்தனர். ஆனால், அந்தக் கடவுளின் குழந்தை 7-வது வரை படித்ததே பெரிய விஷயம் என பள்ளிக்கூடம் விரட்டியது.

அருளின் 7-ம் வகுப்பு கணக்கு வாத்தியார் ரொம்ப கண்டிப்பானவர். கணக்கு ஃபார்முலா தெரியாவிட்டால் கைவிரல்களை நேராக நீட்டச் சொல்லி விரல் முட்டியில் ஸ்கேலால் அடிப்பார். அந்த வலியைத் தாங்க முடியாத அருள் மோசமான வார்த்தையால் வாத்தியாரை திட்டிவிட்டான். பள்ளிக்கூடம் அவனுக்கு ரவுடி பட்டம் கொடுத்தது.

வாத்தியார் அருளின் அப்பாவை வரவழைக்கச் சொல்ல, அவரும் இனியொரு முறை இப்படி நடக்காது என்று கெஞ்சினார். மத்த பையன்களும் பயம் இல்லாம இவனை மாதிரி ஆகிடுவாங்க என்று தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார். அருள் வீட்டுக்கு வந்துவிட்டான்.

அதற்குப் பிறகு 10 வருடங்களில் அருள் செய்யாத வேலை இல்லை. பண்ணாத தொழில் இல்லை. முட்டி மோதி கொஞ்சம் மேல வர ஆரம்பித்த பிறகு கையில் காசு சேர்ந்தது. அந்த போதை அவனுக்கு பிடித்திருந்தது. அந்த மிதப்பிலேயே திரிந்தவன் சீக்கிரமே குடிக்கு அடிமையானான். குடியின் ஆதிக்கம் அதிகரிக்க வேலை அவனை விட்டுப் போனது. அருள் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்தான்.

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று வேலைக்கு சேர்ந்தான். குடி, தூக்கம், வேலைக்கு செல்வதில் தாமதம் என வரையறை இல்லாத வடிவமைப்பால், கட்டுப்பாடில்லாத சூழலால் வேலையையும் பறிகொடுத்தான்.

அந்தத் தருணத்திலும் அருள் குடியை விடவில்லை. 'தலைப்புள்ளையா பொறந்தவன் வீட்டு பாரத்தை சுமப்பான்னு பார்த்தா இப்படி தறுதலையா ஆகிட்டானே' என்று அவன் அப்பா வருத்தப்படாத நாளில்லை.

எப்படி இருந்த அருள் இப்படி ஆகிட்டான் என பார்ப்பவர்கள் பரிதாபத்தை மட்டுமே பரிசாகக் கொடுத்தார்கள். அதனாலேயே அருள் தான் செய்யும் அனைத்து தவறுகளும் சரிசெய்யப்பட்டுவிடும் என்று தப்புக்கணக்கு போட்டு சுகவாசியானான்.

ஊர்த் திருவிழாவில் சரக்கடித்துவிட்டு சலம்பிக்கொண்டிருந்த அருள் மிகப் பெரிய பட்டாசு சத்தத்தில் அலறினான். அப்போது முதன்முறையாக அவனுக்கு வலிப்பு வந்தது. அந்த அலறல் அவனுக்கு மிகப்பெரிய பயத்தையும், பதற்றத்தையும் கொடுத்தது.

சீக்காளி புள்ளையை சூதணமா பார்த்துக்கணும் என்று அத்தை, மாமா, சித்தப்பா என சொந்த பந்தங்கள் விழுந்து விழுந்து கவனித்தன. அவர்கள் அத்தனை பேரிடமும் அருள் பணம் சம்பாதித்தான்.

'என் வலிக்கு மாத்திரை போட்டா சரியாகிடுமாம். ஒரு மாத்திரை ரூ.250. அப்பாவால செலவு பண்ண முடியலை மாமா' என்று அநியாயத்துக்குப் பொய்களை கட்டவிழ்த்தான்.

'பையனுக்கு கஷ்டம் தெரியுது. இனி அப்படி இருக்கமாட்டான்' என்று நினைத்த அவன் மாமா பாக்கெட்டில் பணத்தை திணித்துச் சென்றார்.

அன்றைய இரவே அவனுக்கு ஆல்கஹால் இரவானது. சாம்பார் வடையே பிடிக்காதவன் இரவில் ரசவடைக்குப் பழகினான்.

ஊரில் இருக்கும் அத்தனை பேரிடமும் அவசரம் என்று சொல்லியே கடன் வாங்கி மது அருந்தினான். யாரும் அவனுக்கு காசு கொடுக்காதபோது உறவினர்களிடம் சாக்குபோக்கு சொல்லி பணத்தைக் கைப்பற்றினான்.

'அப்பாவுக்கு பிரஷர் அதிகமாய்டுச்சு சித்தி. உடனே ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப் போகணும். கைமாத்தா காசு கொடுங்க. 2 நாள்ல திருப்பித் தந்துடுறேன்' என சாமர்த்தியமாகப் பேசி காசு வாங்கிவிடுவான்.

அந்த காசை அப்படியே ஸ்வாகா செய்துவிட்டு போதையில் தடுமாறி வந்து வீட்டில் விழுவான். பக்கத்தில் சரக்கடித்து கிடப்பவர்களிடம் சத்தாய்த்து வம்பளக்கும் போது அருளுக்கு விழுந்த அடிகளும், காயங்களும் அதிகம்.

இவ்வளவுக்குப் பிறகும் அவன் அசால்ட்டாக நெஞ்சு நிமிர்த்தி சும்மாவே வம்பு வளர்ப்பான். வீட்டில் இருந்தால் ரிமோட் கன்ட்ரோல் அருள் கையில் மட்டுமே இருக்கும். அது வெறுமனே டி.வி. சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த அதிகாரமும் இந்த வீட்டில் எனக்கே உள்ளது என்று செயல்களில் சேட்டையாகக் காட்டுவான்.

கை, கால், பல், தோள்பட்டை என தையல்களும் ஆப்ரேஷன் வடுக்களுமே அருளின் அங்கங்களை ஆக்கிரமித்தன. இதற்கு மேல் பொறுமை இல்லை என்ற முடிவில் அருளை குடிநோய் சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்.

ஆனால், அருள் மீண்டு வந்ததற்கு அழுத்தமான காரணம் கமலாதான். அவனுக்குள் இருந்த குழந்தைமையைக் கண்டுணர்ந்தவளும் அவள்தான்.

மது, போதையில் இருந்து மீள, ஏதாவது, அமானுஷ்யம் நிகழ வேண்டும் என்பதில்லை. அன்பு ஊற்றெடுக்கும் முகமும், அந்த சக்தியை கொடுக்கும் நபரும் பக்கத்தில் இருந்தால் எந்த பழக்கத்திலிருந்தும் விடுபடமுடியும். அன்பு, நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டால், போதையின் கோரப் பிடியில் இருந்து விடுபடலாம் என்பதற்கு அருள் - கமலா காதல் நிகழ்கால சாட்சி.

கமலாதான் அருளை மொத்தமாக மாற்றினாள். தம்பி, தங்கைகளின் கோடை விடுமுறைக்கு அத்தை வீட்டுக்கு அழைத்து செல்லும் பொறுப்பு அருளுக்கு விடப்பட்டது. திருவண்ணாமலையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு தம்பி, தங்கைகளை வேண்டா வெறுப்போடு அழைத்துப் போனான்.

அப்போதுதான் அத்தை மகள் கமலாவைப் பார்த்தான். அவனுக்குள் ஏற்படும் ரசாயன மாற்றத்த்தை ரசிக்கத் தொடங்கினான். அத்தான் என்ற கமலாவின் அழைப்பில் கிறங்கிப் போனான். இதயத்தில் மின்னல் தெறித்தது.

அடுத்தடுத்த நாட்களில் மனம் கமலாவை சந்திக்க ஏங்கியது. கால்கள் தானாக திருவண்ணாமலையை நோக்கி பறந்தது.

தூக்கத்தை தொலைத்த ராத்திரிகள், உணவை தவிர்த்த பொழுதுகள் என காலம் கடத்தியவன் ஒவ்வொரு பவுர்ணமி இரவிலும் திருவண்ணாமலை தீபத்துக்கு கிரிவலம் வந்தான். அப்போதெல்லாம் அத்தை வீட்டுக்கு அட்டனென்ஸ் போட்டான். கமலாவிடம் காதலைப் பரிமாறினான்.

சில மாதங்களில் அவளும் சம்மதம் சொன்னாள். அதற்குப் பிறகு அருளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.

சுத்தபத்தமாய் இருக்க முயற்சித்தான். கமலா முகம் சுளிக்கக் கூடாது என்பதற்காகவே குடிநோய் சிகிச்சை மையத்துக்கு சென்றான்.

தடி ஊன்றியவர்கள், சக்கர நாற்காலியில் அமர்ந்தவர்கள், நடக்கத் தள்ளாடுபவர்கள், காயம்பட்டவர்கள், கைகால் வீக்கமடைந்தவர்கள், கடித்து குதறப்பட்ட தழும்புடையவர்கள், விரல்களில் நகங்கள் கழன்றவர்கள் என பலவிதங்களில் சீரழிந்தவர்களை அந்த மையத்தில் பார்த்ததும் அருளுக்கு வாழ்க்கையின் எல்லா கோணங்களும் பிடிபட்டது. ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக மாறி இருந்தான்.

அருளின் அப்பா கண்கலங்கியபடி குன்றத்தூர் முருகனுக்கு அங்க பிரதட்சணம் செய்து, மொட்டை அடித்தார். இப்போது அருள் முற்றிலுமாய் மாறியிருக்கிறான்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையானவன், வீட்டில் செய்யும் அலப்பறை, ஊரில் அவமானப்படுதல், காதலில் விழுதல், உறவினர்களிடம் கெஞ்சி குடிப்பதற்காக காசு வாங்குதல், சிகிச்சை எடுத்துக்கொண்டு குடிப் பழக்கத்தை கைவிடுதல் என அருளின் மொத்த வாழ்க்கையும் 'நீர்ப்பறவை' படத்தை நினைவுபடுத்தின.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், ராமு, சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த கடல் சார்ந்த வாழ்வியல் படம் 'நீர்ப்பறவை'. தென்மேற்குப் பருவக்காற்றில் வறண்ட நிலத்தை உலவ விட்ட சீனு ராமசாமி நீர்ப்பறவையில் கடலை உலவவிட்டு ரசிக்க வைக்கிறார்.

நந்திதா தாஸ் மீனவரின் மனைவி. எப்போதே காணாமல் போன கணவனுக்காக தினம் தினம் கடற்கரையில் காத்துக்கொண்டிருக்கிறார். கணவன் வந்தபாடில்லை. ஒரே மகன் வீட்டை விற்க அம்மாவின் சம்மதம் கேட்கிறான். அம்மாவின் எதிர்ப்பு அவனுக்கு கோபத்தை வரவழைக்கிறது.

நடுஜாமத்தில் தூங்கிக்கொண்டிருந்த அம்மாவைக் காணவில்லை என பார்க்கும்போது வீட்டின் பின்புறம் அம்மா மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்கிறாள். அவர் பாடுவது கல்லறைப் பாடல் என மனைவி சொன்னதும் அதிர்ச்சி ஆகிறார்.

அம்மா நந்திதா தாஸ் காலையில் கடற்கரை சென்றதும் மகன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க, சடலம் எலும்புக்கூடாக இருக்கிறது. மகன் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் நந்திதாவை கைது செய்கிறது.

விசாரணையில் நந்திதா பார்வையில் ஃபிளாஷ்பேக் விரிகிறது.

''வாழ்க்கையைப் படிச்சவர் அருளப்பசாமி. அப்போ குடிக்கு அடிமையா இருந்தவரை லூர்துசாமி மாமாவும், மேரி அத்தையும் உசுருக்கு உசுரா பார்த்துக்கிட்டாங்க'' என்று கதை சொல்கிறார்.

குடியே வாழ்க்கை என நாட்களை நகர்த்தியவர் அருளப்பசாமி (விஷ்ணு). சுனைனா விஷ்ணு தலையில் கைவைத்ததும் மாறிப் போகிறார். குடிநோய் சிகிச்சை மையத்தின் மூலம் குடியிலிருந்து மீள்கிறார்.

விஷ்ணு - சுனைனா திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. ஒரு வருடம் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். ஒரு நாள் அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விஷ்ணு வீட்டுக்குத் திரும்பவேயில்லை.

அருளப்பசாமி (விஷ்ணு) பிறந்த கதை தெரியுமா? என்று எஸ்தர் (நந்திதா) இன்னொரு ஃபிளாஷ்பேக் சொல்கிறார்.

''நடுக்கடலில் பெற்றோர் குண்டடி பட்டு இறக்க, அனாதை சிறுவனாய் அழுது கொண்டிருந்தார். என் மாமா லூர்துசாமி கண்டெடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். என் மாமியார் கடல் மாதா கொடுத்த பிள்ளை என பாசத்துடன் அருளப்ப சாமி என பெயர் வைத்து வளர்க்கிறார்.

குழந்தைப் பருவத்தில் நடுக்கடலில் கண்டெடுக்கப்பட்டாரோ, அங்கேயே அந்தக் கடலிலே குண்டடி பட்டு இறந்து கிடந்தார். அவர் இறந்ததற்கு நான் தான் காரணம். நான் மட்டும் அவரை போக சொல்லாவிட்டால் உயிரோடு இருந்திருப்பார்'' என்று உருக்கத்துடன் கூறுகிறார் நந்திதா.

வழக்கை விசாரித்து, இறுதியில் நந்திதா தாஸின் அறியாமையை மன்னித்து கோர்ட் விடுதலை செய்கிறது.

மகன் மன்னிப்பு கேட்கிறான். 'உன் அப்பா இல்லாத வீடு எனக்கு வேணாம். நீயே எடுத்துக்கிட்டு பொழைச்சிக்கோ மகனே' என சொல்லிவிட்டு, மீண்டும் நந்திதா கடற்கரைக்கு செல்கிறார்.

'அவர் உடம்பு கரைக்கு வந்திடுச்சு. உயிர் என்னைத தேடிதானே வரணும். அதான் கடற்கரைக்கு போறேன்' என்று சொல்லும் விளக்கம் காதலின் அதி உன்னதம்.

'ஏன் உன் கணவர் இறந்ததை அரசாங்கத்துக்கு தெரிவிக்கவில்லை' என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு, 'என் கணவரோட சேர்ந்து இத்தனை மீனவர்கள் செத்திருக்காங்க. என்ன செஞ்சீங்க?' என்று நந்திதா தாஸ் கொடுக்கும் பதிலடி நம்மை ஒட்டுமொத்தமாய் உலுக்கி எடுக்கிறது. அதற்கான பதில் நம்மிடம் இல்லை என்பதும், அரசாங்கம் வாய் மூடி மௌனியாக இருப்பதன் நிதர்சனத்தையும் உணர்த்துகிறது. 'சுட்டது அவுக, கொன்னது நான்' என சொல்லும் நந்திதா பாமரப் பெண். ஆனால், அந்த பாத்திரத்தின் கம்பீரம் உயர்ந்து நிற்கிறது.

விஷ்ணு கடலோர மீனவன், குடித்து சலம்பும் இளைஞன் என கதாபாத்திரத்திற்கான பங்களிப்பை கச்சிதமாக வழங்கி இருந்தார். விஷ்ணு நடிப்பில் அடுத்தகட்டத்துக்கு சென்ற படம் நீர்ப்பறவை என்று தைரியமாக சொல்லலாம்.

விஷ்ணுவின் தலையில் கைவைத்து ஜெபம் பண்ணும் சுனைனா, 'சாத்தானே அப்பாலே போ' என விரட்டும்போதும், காதலில் கசிந்துருகும் போதும் கவனம் ஈர்த்தார். சுனைனாவின் வயதான கதாபாத்திரத்துக்கு இயக்குநர் நந்திதா தாஸை நடிக்க வைத்திருந்தார்.

சரக்கடிக்கும் மகனைத் திட்டாமல், அடிக்காமல் 'கொஞ்சமா குடிக்கணும்டா. ஊருக்குள்ள யாருதான் குடிக்கல.. உன்னைய மாதிரியா நாள் முழுக்க இதே வேலையா. குடிச்சா வல்லு வதக்குன்னு திங்கணும்டா. அப்போதான் உடம்புல கறி வைக்கும், கண்டதையும் வாங்கி குடிக்காத அருளு. நல்ல சரக்கா வாங்கி குடி. குடிச்சிட்டு கண்ட இடத்துல விழுந்து கிடக்காதே. அசிங்கம்டா' என்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

எப்படிப்பட்ட அம்மா வாய்த்திருக்கிறார் என்று இப்போது நினைத்துப் பார்த்தாலும் பாசத்தில் கண்ணு வேர்க்கும். 'அளவா குடிடா' என சொல்லும் சரண்யா பொன்வண்ணன், 'ஒரேயடியா திருத்திடாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா திருத்துங்க' என மறுவாழ்வு மைய உதவியாளரிடம் மதுவுக்கு காசு கொடுக்க முயல்கிறார். 'மாதா கோயில்ல பொம்பள பேசக் கூடாதா' என்ற சரண்யாவின் கேள்விக்கு பார்வையாளர்களிடத்தில் கைதட்டலாக பதில் வருகிறது. இயல்புமீறா தன்மையுடன் கிராமத்து அம்மாவை கண் முன் நிறுத்தும் சரண்யாவின் நடிப்பில் அத்தனை நேர்த்தி.

குடிக்க காசு கேட்டதற்காக விஷ்ணுவை அடித்த சமுத்திரக்கனியிடம் எகிறும் ராமு, அதற்குப் பிறகு படகு செய்ய உதவி கேட்பது, புதிய படகில் லூர்துசாமி பெயரைப் பார்த்து பரிவோடு தடவிப் பார்ப்பது, குடியிலிருந்து மீட்ட டாக்டருக்கு பெரிய மீனைக் கொண்டுவந்து கண்ணீர் தளும்ப, காணிக்கையாக கொடுத்துவிட்டு கும்பிடுவது கண்ணீர்க் கவிதை.

ஒரு படத்தில் கதைக்கு சம்பந்தமான எல்லா விஷயங்களையும் பேசிவிட வேண்டும் என்று முயற்சிப்பதன் பலன் தான், வசனங்களாக வைப்பது. கடல் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை ஒட்டுமொத்த சினிமாவில் ஏதேனும் ஒரு இடத்திலாவது பேசிவிட வேண்டும் என்ற சீனு ராமசாமியின் வேட்கையை ஜெயமோகன் - சீனு ராமசாமி வசனங்களால் பார்க்க முடிகிறது

''கடலுக்கு நடுவுல காம்பவுண்ட் சுவரா கட்டி வெச்சிருக்காங்க. எல்லைக்கோடுன்னு எதை வெச்சு தெரிஞ்சுக்குறது. வெறும் தக்கையை போட்டு வெச்சு எல்லைக்கோடுங்கிறான். அது காத்தடிச்சு ஒரு கிலோமீட்டர் அங்கிட்டும் இங்கிட்டும் போயிடுது. இந்த பிரச்சினை எப்படிதான் தீரும்னு தெரியலை'' என்ற வசனம் தான் அந்த வேட்கையின் உச்சம்.

''இந்த நாட்ல வேற எந்த தொழில் செய்றவனையும் வேற எந்த நாட்டுக்காரனாவது சுட்டா சும்மா விடுவானா? மறுபடியும் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சுட்டு இருக்காங்க. நம்மகிட்ட ஒத்துமை இல்லையா.

முப்பது தொகுதி மீனவனுக்கு இருந்தா நம்ம சத்தமும் வெளியே கேட்கும். அதுவரைக்கும் உன் சத்தமும் என் சத்தமும் இந்த அலை சத்தம் மாதிரி வெறும் மண்ணைதான் முட்டும்.

பாகிஸ்தான் ஆகாத நாடுதான். எல்லை தாண்டி ஆடு மேய்ச்சவனை புடிச்சு உள்ளதானே வெச்சாங்க'' என படகு செய்யும் தச்சுத் தொழிலாளி இஸ்லாமியர் உதுமான்கனி பாத்திரத்தில் சமுத்திரக்கனி கேட்கும் கேள்வி நியாயமானது.

''நீங்க பெருங்கூட்டம் சேர்த்தா போராட்டம்., நாங்க சின்னதா கூட்டமா சேர்த்தா தீவிரவாதம்னு முத்திரை குத்துவீங்க'' என்ற கேள்வியில் இஸ்லாமியர்கள் குறித்த பொதுப் புத்தியை இயக்குநர் தகர்த்து எறிந்திருக்கிறார்.

பத்திரிகைகள் கூட இந்திய மீனவர்கள் என்று சொல்லாமல் தமிழக மீனவர்கள் என்று பிரிக்கிறார்கள் என சமுத்திரக்கனியை விட்டு அரசியல் பேசி இருக்கும் சீனு ராமசாமியின் புத்திசாலித்தனம் படம் முழுவதும் உறுத்தாமல் இருந்ததும் ஆச்சர்யம்.

வைரமுத்துவின் பாடல்களில் பைபிள் வரிகள் பளிச்சிட்டதால் ரகுநந்தனின் இசைக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டால் ஏற்படும் மீனவனின் மரணம் என்ற செய்தி நமக்கு பழக்கப்பட்டுப் போயிருக்கலாம். ஒரு மீனவன் சுட்டுக்கொல்லப்பட்டான் என்ற செய்திக்குள் இவ்வளவு உணர்வுபூர்வமான ஒரு வாழ்க்கை இருப்பதை இயக்குனர் சீனுராமசாமி நமக்கு உணர்த்துகிறார்.

இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு தமிழக அரசோ, மத்திய அரசோ எந்த தீர்வையும் வழங்க முன்வராத நிலையில், அது குறித்த கேள்வியை எழுப்பிய விதத்தில் 'நீர்ப்பறவை' உயரே பறக்கிறது.

நிற்க!

அருள் இப்போது சினிமாவில் கலை இயக்குநர் துறையில் உதவியாளராக இருக்கிறான். கமலா - அருள் தம்பதி ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகி இருக்கிறார்கள். அந்த அதிரூபனின் வருகை அவர்களுக்கு புதியதொரு நம்பிக்கையைக் கொண்டு வந்திருக்கிறது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு நாமும் வாழ்த்து சொல்வோம் வாருங்கள்.

- மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 14: ரெட்டை வால் காதல்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்