இந்திய அறிவியல் துறைக்கு கலாம் பங்களித்தது என்ன?

By என்.ராமதுரை

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 டிசம்பரில் வங்கதேச விடுதலைப் போர் நடந்துகொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்கா, மிரட்டும் நடவடிக்கையாக இந்தியாவை நோக்கித் தனது போர்க் கப்பல்களை அனுப்பியது. ஆனால், அவை வந்து சேர்வதற்குள்ளாக இந்தியப் படைகள், பாகிஸ்தான் படைகளைச் சரணடையச் செய்தன. போரே முடிந்துவிட்டது. மூக்கறுபட்டதுபோல அமெரிக்கப் போர்க் கப்பல்கள் வந்த வழியே திரும்பிச் சென்றன.

அக்காலக் கட்டத்தில் இந்தியாவிடம் அணுகுண்டுகள் கிடையாது. அவற்றைச் சுமந்து செல்வதற்கான ஏவுகணைகள் கிடையாது. அமெரிக்கப் போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க இந்தியாவிடம் செயற்கைக்கோள்கள் கிடையாது. செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கான ராக்கெட்டும் கிடையாது.

கலாமின் பெரும்பங்கு

அன்றைய நிலையுடன் ஒப்பிட்டால், இந்தியாவிடம் இப்போது அணுகுண்டுகளைச் சுமந்தபடி 8,000 கிலோ மீட்டர் பறந்து சென்று எதிரி இலக்குகளைத் தாக்கவல்ல நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளன. அவற்றை இலக்கு தவறாமல் தாக்குவதற்கு உதவும் ஜிபிஎஸ் வகை செயற்கைக்கோள்கள் உள்ளன. எதிரிப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் செயற்கைக்கோள்கள் உள்ளன. எதிரியின் படைத் தளங்களைத் துல்லியமாகப் படம்பிடிக்கின்ற செயற்கைக்கோள்கள் உள்ளன. இன்று நம்மை எதிரி மிரட்டினால், பதிலுக்கு நாமும் மிரட்ட முடியும். இதையெல்லாம் சாத்தியமாக்கியதில் அப்துல் கலாமுக்குப் பெரும்பங்கு உண்டு.

அப்துல் கலாம் பட்டப் படிப்பையும் பட்ட மேல் படிப்பையும் முடித்துவிட்டு, சில காலம் ராணுவத் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், 1963-ல் இன்ஜினீயராக கேரளத்தில் தும்பா என்னுமிடத்தில் அப்போதுதான் அமைக்கப்பட்ட சிறிய ஆராய்ச்சி கேந்திரத்தில் சேர்ந்தார்.

தும்பாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் தென்னை மர உயரம்கூட இல்லாதவை. வானில் 30 முதல் 180 கிலோ மீட்டர் உயரத்தில் காற்று மண்டல நிலைமை, வான் இயற்பியல் நிலைமைகள் முதலியவற்றை ஆராயும் பொருட்டு ஐ.நா. ஆதரவில் இந்த கேந்திரம் நிறுவப்பட்டது. அமெரிக்காவிலிருந்தும் பிரான்ஸிலிருந்தும் ராக்கெட் செலுத்துச் சாதனங்கள், அமெரிக்க, பிரெஞ்சு ராடார்கள், பிரெஞ்சு கேமராக்கள், ரஷ்ய கம்ப்யூட்டர்கள் முதலியவை இங்கு வந்து சேர்ந்தன. அந்த நாடுகள் கொண்டுவந்த சிறிய ராக்கெட்டுகள்தான் இங்கிருந்து செலுத்தப்பட்டன.

18 மணி நேர வேலை

பூமியின் காந்த நடுக்கோட்டுக்கு அருகில் தும்பா அமைந்துள்ள காரணத்தால், இங்கு இவ்வித ராக்கெட் நிலையம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் இங்கேயே இந்த சிறிய ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இங்கு பணியாற்றிய அப்துல் கலாமும் அவரைப் போன்றவர்களும் ஒரு நாளில் 18 மணி நேரம்கூட வேலை செய்ததுண்டு.

இதற்கிடையே 1969-ல் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நிறுவப்பட்டது. நடுவில் வேறு சில திட்டங்களில் பணியாற்றிய அப்துல் கலாம் இஸ்ரோவுக்கு மாற்றப்பட்டார். விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டை உருவாக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான வகையில் 1971-ல் ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் நிறுவப்பட்டது.

ஆரம்பத்தில் ஹரிகோட்டாவிலிருந்து சிறிய ஆராய்ச்சி ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன. பின்னர், எஸ்.எல்.வி. எனப்படும் பெரிய ராக்கெட்டை உருவாகும் பணி மேற்கொள்ளப்பட்டது. திட்ட இயக்குநர் என்ற முறையில், ராக்கெட் தயாரிப்பின் எல்லா பணிகளையும் அப்துல் கலாம் கவனிக்க வேண்டியிருந்தது. எஸ்.எல்.வி. என்பது செயற்கைக்கோள் செலுத்துச் சாதனம் என்னும் பொருள் கொண்ட ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமாகும்.

மனம் தளராத கலாம்

முதல்முயற்சியாக 1979 ஆகஸ்டில் எஸ்.எல்.வி. ராக்கெட், ரோகிணி என்னும் சிறிய செயற்கைக்கோளைச் சுமந்தபடி வானில் பாய்ந்த சில விநாடிகளில் தோல்வியில் முடிந்தது. தோல்விக்கு அப்துல் கலாம் முழுப் பொறுப்பேற்றார். எனினும், அவர் மனம் துவண்டுவிடவில்லை. 1980 ஜூலையில் எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பாய்ந்து ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியது. அதன் மூலம் ராக்கெட் யுகத்தில் இந்தியா அடி எடுத்து வைத்தது.

இதற்குள் அப்துல் கலாம் ராக்கெட்டுக்கான திட எரிபொருள் துறையில் நிபுணர் என்று பெயர் பெற்றார். அந்த முறையில் அவருக்கு அடுத்த பணி காத்திருந்தது. அதாவது, நாட்டின் பாதுகாப்புக்கான ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கு செயற்கைக்கோளைச் செலுத்துகின்ற ராக்கெட்டுக்கும் ஏவுகணைக்குமான வித்தியாசத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டுமே ராக்கெட் தத்துவ அடிப்படையில் செயல்படுபவை. ஆனால், நாம் பொதுவில் ராக்கெட் என்று வர்ணிக்கும் செயற்கைக்கோள் செலுத்துச் சாதனம் குறைந்தது 300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்று, ஒரு செயற்கைக்கோளை அசுர வேகத்தில் செலுத்தி பூமியைச் சுற்றும்படி செய்துவிட்டால் அதன் பணி அத்துடன் முடிந்துவிடுகிறது. செயற்கைக்கோளைச் செலுத்தும் ராக்கெட்டின் வெவ்வேறு அடுக்குகளில் திட அல்லது திரவ எரிபொருளைப் பயன்படுத்தலாம்.

ஏவுகணையும் வானை நோக்கிப் பாய்வதுதான். அதன் முகப்பில் குண்டு இருக்கும். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று, எதிரி நிலைகளைத் தாக்குவதற்கான ஏவுகணை என்றால் முகப்பில் நிச்சயம் அணுகுண்டு இருக்கும். ஏவுகணை மிக உயரத்துக்குச் சென்று நீண்ட தூரம் பறந்த பிறகு, எதிரி நிலையைத் தாக்க மறுபடி காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கியாக வேண்டும். அப்படி இறங்கும்போது அதன் முகப்பு கடுமையாகச் சூடேறும். அந்த வெப்பம் முகப்பில் உள்ள அணுகுண்டைப் பாதித்துவிடாமல் பாதுகாப்பு இருக்க வேண்டும். எதிரி நிலையைத் தேடி அறிவதற்கான நுட்பமான கருவிகள் இருக்க வேண்டும். அந்த அளவில் ஏவுகணைகளை உருவாக்குவது சிக்கலான பணியாகும். செயற்கைக்கோளைச் செலுத்தும் ராக்கெட்டுடன் ஒப்பிடும்போது ஏவுகணைகள் அனைத்தும் திட எரிபொருள் மூலம் செயல்படுபவை.

இங்கு இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, ஒரு நாடு அணுகுண்டுகளைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது; அவற்றைச் சுமந்து செல்ல ஏவுகணைகள் இருக்க வேண்டும். அதேபோல ஏவுகணைகள் மட்டும் இருந்தால் போதாது; அவற்றின் முகப்பில் வைத்துச் செலுத்த அணுகுண்டுகள் அவசியம்.

பிரதமரின் அறிவியல் ஆலோசகர்

சீனா 1964-ல் அணுகுண்டுகளைப் பெற்றிருந்த நிலையில், இந்தியா இனியும் வாளாவிருக்கக் கூடாது என்ற நோக்கில், 1974-ல் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின்போது இந்தியா அணுகுண்டை உருவாக்கி நிலத்துக்கு அடியில் வெடித்துச் சோதனை நடத்தியது. ராஜஸ்தான் பாலைவனத்தில் பொக்ரான் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது அணுசக்தி நிபுணர்களுடன் அப்துல் கலாமும் அங்கு இருந்தார்.

பின்னர், 1998-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் சக்திமிக்க பல அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்த போதும் பொக்ரானில் அப்துல் கலாம், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் என்ற முறையில் அங்கு இருந்தார்.

இந்தியா முதல் தடவை அணுகுண்டு சோதனை நடத்தியபோது, ஏதோ அணுகுண்டு என்பது தங்களது ஏகபோக உரிமை என்று கருதிய வல்லரசு நாடுகள், இந்தியாவுக்கு எதிராகப் பல கட்டுமறுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்தியாவுக்கு எந்த நாடும் அணுசக்தித் துறையில் எந்த உதவியும் செய்யலாகாது என்று தடை விதிக்கப்பட்டது.

பொக்ரானில் நடத்தப்பட்ட முதல் அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் இந்தியா ஏவுகணைகளையும் தயாரித்தாக வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி இதற்கென நிறைய நிதி ஒதுக்கினார். அப்போதுதான் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டம் அப்துல் கலாம் வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஆர். வெங்கட்ராமன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

சில நூறு கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்க வல்ல ஏவுகணை, நீண்ட தூரம் செல்ல வேண்டிய ஏவுகணை, போர்க்களத்தில் பயன்படுத்து வதற்கான சாதாரண ஏவுகணை என பல்வகை ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிகள் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வெங்கட்ராமன் ஆலோசனை கூறினார்.

ஏவுகணை மனிதர்

இதன்படி அக்னி-1 ஏவுகணை, பிருத்வி ஏவுகணை ஆகியவை தயாரிக்கப்பட்டன. இரண்டுமே அணு குண்டுகளைச் சுமந்து செல்லக்கூடியவை. அக்னி வரிசையில் பின்னர் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை 5,000 முதல் 8,000 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பறந்து சென்று தாக்க வல்லது. பிருத்வி வரிசையிலும் பல்வேறு திறன் கொண்ட ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியுள்ளது. இவை தவிர, ஆகாஷ், திரிசூல், நாக் போன்ற சாதாரண ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கெல்லாம் அஸ்திவாரமிட்டவர் அப்துல் கலாமே. எனவே, அவரை `ஏவுகணை மனிதர்' என்று வர்ணிப்பது உண்டு.

செயற்கைக்கோள்களைச் செலுத்த அப்துல் கலாம் உருவாக்கிய எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திறன் பின்னர் மேலும் அதிகரிக்கப்பட்டு, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவாக்கப்பட்டது. அப்துல் கலாம் ஏவுகணைப் பக்கம் திரும்பியதற்கு முன்னர் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை உருவாக்குவதற்கும் பங்களித்தார். இப்போது மேலும் அதிகத் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தயாரிக்கப்பட்டுவருகிறது. செயற்கைக் கோள்களைச் செலுத்துவதற்கான இந்த ராக்கெட்டுகள் அனைத்தும் ஆக்கப்பணிக்கானவை. இவை வானிலைத் தகவல் சேகரிப்பு, வரைபடம் தயாரித்தல், இந்தியாவின் இயற்கை வளங்களைக் கண்டறிதல் போன்ற பணிகளுக்கான செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகின்றன.

ஏவுகணைகளை உருவாக்க முக்கியப் பங்களித்ததன் மூலம், இந்தியாவை இனி எந்த நாடும் மிரட்டத் துணியாது என்ற நிலையை அப்துல் கலாம் உண்டாக்கியுள்ளதாகக் கூறலாம். ஆனாலும், நமது நாட்டின் எதிரி வறுமையே என்று கருதினார். அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பலம் என்று கூறியவர். ஆயுதங்களை உருவாக்கியவர் அமைதியைத் தான் நேசித்தார். குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவியை வகித்தபோதும் தமது எளிமை மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த மாமனிதராகத் திகழ்ந்தார்.

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

| தி இந்து - சுவடுகள் |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்