கரோனா காலத்தில் சென்னையில் தங்கியிருந்த மேன்சன்வாசி ஒருவரின் அனுபவத்திலிருந்து அந்த நாட்களை மீளாய்வு செய்யும் ஒரு நாஸ்டால்ஜி பகிர்வு.
ஆரவரமற்ற அந்த நாளில் எல்லாமே அடங்கியிருந்தது. துள்ளிகுத்தி ஓடிய ஆடிய நகரத்தின் வீதிகள் மௌனப்பெருவெளியில் மூழ்க்கிடந்தன. வாகனங்களின் ஆரன் ஒலிகளால் சதா சப்தமிட்டிருந்த சாலைகள் ஒலியுடன் சமாதான உடன்படிக்கையிட்டிருந்தன. அந்த நாளில் எல்லாமே மாறியிருந்தது.
நேற்று வரை கண்ணாடி பாட்டில்களுக்கு மேலிருந்த தட்டில் முகாமிட்டிருந்த ஆறிப்போன வடையும், சமோசாவும், விடுதலைகிடைக்காத கதைபோல பல வருடங்களாக யாராலும் ரிலீஸ் செய்யப்படாத நமத்துப்போன சால்ட் பிஸ்கட்டுகளும், திறந்ததும் முந்திக்கொண்டு வெளியேறும் காற்றை தன்னுள் அடக்கிவைத்திருந்த சிப்ஸ் பாக்கெட்டும், டீ என பெயர் மாற்றப்பட்ட சுடு நீரும் இன்று அங்கே இல்லை.ஒரு நாளில் எல்லாமே மாறியிருந்தது. அது சரியாக 2020-ம் ஆண்டின் மார்ச் 24-ம் தேதி.
வெளியூரிலிருந்து வந்த எங்களை விடுங்கள். திருவல்லிக்கேணியை பிறப்பிடமாக கொண்டவர்கள் கூட அதன் தெருக்களை இப்படி அனாதையாக அவர்கள் வாழ்நாளில் பார்த்தது கிடையாதாம்! கரோனா வீதிகளின் சப்தங்களை முழுமையாக செரித்துக் கொண்டிருந்தது. வெறுமையான அந்த நாளில் தொடக்கம் ஒருவாரத்தில் சரியாகிவிடும் என்று தான் யோசித்தோம். அது வாழ்வின் ஒருபகுதியாக மாறும் என அப்போது யாரும் கணிக்கவில்லை.
ஆள் அரவமற்ற அந்த திருவல்லிக்கேணி வீதியின் மூலை மூடுக்குகளில் யாரோ சிலர் ஒளிந்து ஒளிந்து டீயை விற்றுக்கொண்டிருந்தனர். இந்த துயரற்ற வாழ்வை அந்த டீக்கடைக்கார அண்ணன் தன் சில்வர் கேன் மூலம் அழாகாக்குவார் என யாரும் நினைத்ததில்லை. அப்படியொரு மகிழ்ச்சி! அண்ணனை நெருங்கும்போது, 'ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடிப்போகாது' என பின்னிருந்து ஒலிக்கும் புதுப்பேட்டை பாடலும், அந்த பிளாஸ்டிக் கப் தேநீரும் கரோனாவுடன் போராடும் வலிமையை கூட்டின. உண்மையில் அந்த மன திடம் கரோனாவை கடுப்பேற்றியிருக்கும்!
அதுவரை தெரியாது அடுத்தநாள் மீண்டும் அந்த டீ எங்களுக்கு கிடைக்கபோவதில்லை என்று. எங்கள் மீது கடுப்பாயிருந்த கரோனா மேன்சனில் தங்கியிருந்தவர் மீது பாய, மருந்துவர்கள் வந்து எங்களை ஆராய, இறுதியில் கூண்டிப்பட்ட வண்டியில் டெஸ்ட்டுக்காக அழைத்துச் செல்லப்பட்டோம். செல்லும் வழியில் நாங்கள் அதுவரை கண்ட நகரம் இது இல்லை என்பதை உறுதி செய்துகொண்டோம்.
திருவல்லிக்கேணியை ஜெட்டில் கடந்து சென்றாலும் அந்த வேகத்தில் குறைந்தது 10 டீக்கடைகளை பார்க்க முடியும். ஆனால், நாங்கள் சென்ற வண்டி ஊர்ந்து சென்றபோதும் ஒருவரைக்கூட காண முடியவில்லை. இறுதியாக ராஜீவ்காந்தியில் டெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் மேன்சனுக்குள் அடைக்கப்பட்டோம். அந்த மேன்சனைச் சுற்றி தடுப்பு வேலிகள் காவலுக்கு நின்றிருந்தன. நேரத்துக்கு உணவு பொட்டலங்கள் வந்து சேர, சிறை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய கட்டாயம். எங்களைப்போல இந்த நகரமும் தனிமையாய் கிடந்தது.
மேன்சனில் அடைக்கப்பட்டபோதே வெறுமையும் சேர்த்து அடைக்கப்பட்டது. எத்தனை நாளைக்குத்தான் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, நெட்ஃப்ளிக்ஸில் படங்களை தேடிக்கொண்டிருக்க முடியும். அடைபட்ட வாழ்வின் அத்தனை துயரங்களையும் கரோனா கடத்தவும், உணர்த்தவும் செய்தது. அந்த 'பாய் கடை' பிரியாணியையும், ஜாம்பஜார் லஸ்ஸியையும், அத்தோ கடையையும், இந்த பெருநகரை ஆற்றுப்படுத்தும் அலைகடலையும் காணவே முடியாதா என்ற ஏக்கம் 10 நாளுக்கு பிறகு தீவிரமடைந்தது. இதோ முடிந்துவிடும், நாளை முடிந்துவிடும் என நினைக்கும்போது இறுதியில் முடிந்துபோனது அந்த மாத டேட்டா கார்டு தான்.
அந்த காலங்கள் யாவும் சென்னையின் மீதான நெருக்கத்தை கூட்டியது. ஒரு கட்டத்தில் தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் மேன்சனுக்கு வெளியிலிருந்து பேரிகார்டுகள் விலகும்போது, சுற்றியிருந்து வெறுமையும் சற்றே விலகுவதாக தோன்றியது. இந்த நகரத்தை மீண்டும் எட்டிப்பார்த்தபோது, அது அயற்சியில் உறங்கியிருந்தது. நடமாட்டும் ஏதுமில்லாமல் முடங்கிப்போயிருந்தது. அடுத்தடுத்த லாக்டவுன்கள் அதனை சோர்வாக்கியிருந்தது.
காவல்துறையினர் இல்லாத நேரங்களில், பாலைவனத்தில் நீருக்கு அலைபவர்களாக டீக்கு அலைந்துகொண்டிருந்தோம். காரணம் பல நேரங்களில் சாப்பாட்டைவிட தேநீரை குடித்து பழகிய வயிறு என்பதால், சாப்பாடு ஒருவேளை டீ 2 வேளை என பழகிப்போயிருந்தது. ’டீ கண்ட இடம் சொர்க்கம்’ என சில்வர் கேன்களின் சப்தங்களை நோக்கிய கரோனா நாட்கள் கழிந்தன.
படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும்போது, நகரத்தின் சுருக்கங்கள் விரிவடையத்தொடங்கின. அதேசமயம் கரோனா இறப்புகளில் சென்னை முதலிடம் செய்தி அச்சுறுத்திக் கொண்டிருந்தது. வெளியூர்வாசிகள் நகரத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தபோது, பூர்வகுடிகள் இந்த பெருநகரத்தின் மீது அசாத்தியமான நம்பிக்கையை கொண்டிருந்தார்கள். அவர்களின் நம்பிக்கை தான் நகரை மீண்டெழச் செய்தது!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
14 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago