தமிழ்ச் சான்றோர்கள் பலரும் தமிழக மண்ணில் விடுதலை வேள்வியை கொழுந்துவிட்டு எரியச் செய்தனர். விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டி அவர்கள் தமிழ்ப் பத்திரிகைகளை நடத்தியதற்காகவே அவர்கள் பலரும் அதற்காக எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்தனர்.
சுதேசமித்திரன்: ஜி.சுப்பிரமணிய ஐயர் என்ற பத்திரிகையாளர் 1891ல் தொடங்கிய சுதேசமித்திரன் தென்னிந்திய மொழிகளில் முக்கிய இதழாக திகழ்ந்தது. இதில் மகாகவி பாரதியார் 1904-ஆம் ஆண்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஆரம்பத்தில் அரசாங்கத்துடன் இணக்கமான போக்கில் இருந்ததால் பாரதியின் நிலைப்பாட்டை சுதேசமித்திரன் புரிந்துகொள்ளாத நிலையே இருந்தது.
ஒரு கட்டத்தில் பிரிட்டிஷாரை எதிர்க்க வேறு பாதையே சிறந்தது என பாரதி முடிவெடுத்து 1906லேயே விலகுகிறார். இதனை நன்கு உணர்ந்த சுதேசமித்திரன் பினனர் இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளை தட்டியெழுப்பும் படைப்புகளை வெளியிடத் தொடங்கியது. பஞ்சாப் சம்பவங்களை எதிர்த்து அந்நிய அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து எழுதிய கட்டுரைகளுக்காக சுதேசமித்திரன் ஆசிரியர் நாட்டுப்பிரிவினை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
எண்ணற்ற தேசிய உணர்ச்சிமிக்க கவிதைகளை எழுதி புகழ்பெற்றிருந்த பாரதி 1920களில் மீண்டும் இதே பத்திரிகைக்கு வந்து பணியாற்றத் தொடங்கினார். இதழியல் வரலாற்றில் புத்தம் புது பொலிவுடன் 'சுதேசமித்திரன்' சமூக அரசியல் சிந்தனைகளைத் தூண்டும் நல்லதொரு இலக்கிய இதழாக மாறியது. அதற்கான பெருமையும் பாரதியையே சாரும்.
இந்தியா: தமிழகத்தில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் பங்கு என்று எடுத்துக்கொண்டால் எவ்வகையிலேனும் மிக முக்கிய இடத்தில் நிற்பவர் தமிழகத்தின் தேசியக் கவியாக திகழ்ந்த மகாகவி பாரதிதான். தமிழ் இதழியலுக்கே இவரின் துணிச்சலான செயல்பாடுகள் ஒரு முன்னத்தி ஏராக அமைந்தது என்றால் அது மிகையில்லை.
சக்கரவர்த்தினி, இந்தியா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் போன்ற இதழ்களிலும் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் பாரதியார் பணியாற்றி உள்ளார். ''அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லையே... உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பது இல்லையே'' என பாடிய பாரதி தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார். இந்தியாவில் ஆங்கிலேயே அரசை தூக்கியெறிய வேண்டும் என்பதில் பாரதியின் எழுத்துக்கள் நெருப்பாக சுட்டெரித்தன. இளைஞர்களிடம் எழுச்சியைத் தோற்றுவித்தன. இதனால் அவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
சிறைக்குச் சென்றால் சுதந்திர உணர்வுகளை இளைஞர்களிடம் தட்டியெழுப்பும் பணிகளை எப்படி செய்ய முடியும். தொடர்ந்து எழுதுவதும் பேசுவதும் எழுச்சி பாடல்களை பாடுவதும் அவசியமான ஒன்று என்பதால் தமிழகத்தில் ஆங்கில அரசின் பார்வையிலிருந்து தப்பித்து புதுச்சேரிக்குச் சென்றார். புதுச்சேரியில் அவர் தஞ்சமடைந்தது சொகுசாக வாழ்வதற்காக அல்ல. பாரதியின் இந்தியா பத்திரிகையை ஆங்கில அரசு தடை செய்திருந்த காரணத்தால், அதனை பிரரெஞ்சு கட்டுப்பாட்டிலிருந்த புதுவையிலிருந்து வெளியிடும் சூழல் பாரதிக்கு ஏற்பட்டது.
நவசக்தி: சிறந்த தமிழ் நூல்களின் ஆசிரியராகத் திகழ்ந்த திரு.வி.க. பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்டவர். அதனாலேயே அவரது ஆங்கில நிறுவன பணியிலிருந்து திரு.வி.க. வெளியேறய வேண்டிய நிலை ஏற்பட்டது. வெஸ்லி கல்லூரியில் ஆசிரியராக பொறுப்பேற்று சிலகாலம் பணியாற்றிய பின்னர் தேசபக்தன் இதழ் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்கான அரசியல் கட்டுரைகளை வெளியிட்டார்.
தேசபக்தன்: கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் அவருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்ததாகக் குறிப்பிடப்படுபவர் வ.வே.சு ஐயர். இந்திய விடுதலைக்காக இதழியல் பணிகளில் பங்காற்றியவர்களில் வ.வே.சு ஐயருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. திருச்சியில் பிறந்து வளர்ந்து சிறந்த மாணவராக திகழ்ந்த வ.வேசு. வழக்கறிஞர் தொழிலையும் மேற்கொண்டவர்,
தீவிரவாதத்தில் ஈடுபட்டு இளைஞர்களை ஆயுதமேந்த வைத்தவர் என்ற முறையில் வ.வே.சு.ஐயர் நாடு கடத்தப்படுகிறார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் சிங்கப்பூர் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அலைந்து திரிந்தார். அதன் பிறகு முதல் உலகப்போர் முடிந்த பிறகுதான், அவருக்கு பொது மன்னிப்பு கிடைக்கிறது. அதன் பிறகுதான் வ.வே.சு. இந்தியா வர அனுமதி கிடைத்தது. 1920-இல் பொது மன்னிப்புப் பெற்றுத் திருச்சிக்கு வந்து சேர்ந்தார்.
லண்டனுக்கு பாரீஸ்டர் படிக்கச் சென்ற இடத்தில்தான் அந்நிய மண்ணிலிருந்து இந்திய மண்ணுக்கான விடுதலை எழுச்சியூட்டும் கட்டுரைளை பாரதி நடத்திய இந்தியா இதழில் எழுதத் தொடங்குகிறார்.
தமிழகம் வந்தபிறகு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்தித்தபோது தனது கைத்துப்பாக்கியை மகாத்மா காந்தியிடமே ஒப்படைத்துவிடுகிறார். தீவிரவாத காங்கிரஸ் இயக்கத்திலிருந்து விடுவித்துக்கொண்டு மிதவாத காங்கிரஸ்காரராக மாறுகிறார். திரு.வி.க. பணியாற்றி வந்த தேசபக்தன் இதழ் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இதில் அவர் எழுதிய கட்டுரைகள் தலையங்கங்கள், பிரிட்டிஷாருக்கு கடும் கோபத்தை வரவழைத்தன. தேசபக்தன் ஆசிரியர் என்ற முறையில் அவர் பத்திரிகையில் வெளியான அவர் எழுதாத ஒரு கட்டுரையை காரணம் காட்டி ஆங்கில அரசு 9 மாதங்கள் பெல்லாரி சிறையில் அடைத்தது.
தினமணி: இந்திய விடுதலைப் போராளிகளில் ஒருவரான டி.எஸ்.சொக்கலிங்கம் பல்வேறு பத்திரிகைகளில் சுதந்திர உணர்வுரீதியான கட்டுரைகளை எழுதியவர். காந்திய கொள்கைகளில் மிகவும்ஈடுபாடு மிக்கவர். பாரதி இறந்த சில ஆண்டுகளுக்குப் பின் அவரது நினைவு நாளான செப்டம்பர் 11, 1934ல் அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தொடங்கப்பட்ட தினமணி இதழின் முதல் ஆசிரியராக பொறுப்பேற்றார். இந்திய தேசிய உணர்ச்சியைத் தூண்டி தமிழ் மக்களின் பெரும் நம்பிக்கை இதழாக தினமணியை அவர் உருவாக்கினார்.
தமிழ்நாடு: சேலம் பகாடல நரசிம்மலு நாயுடு தனது தமிழ்நாடு இதழின் அரசியல் கட்டுரைகளுக்காக பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்தார். இவர் பல அரசியல் இதழ்களுக்கும் முன்னோடியாக 1878லேயே சேலத்திலிருந்து தேசாபிமானி இதழை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கததைப்போல மராத்தியைப் போல தமிழகத்திலும் விடுதலைப் போராட்டத்தில் பத்திரிகைகளின் பங்கு என்பது எவ்வகையிலும் குறைந்ததல்ல என்பதற்கு இன்னும் மணிக்கொடி, சுதந்திரச் சங்கு உள்ளிட்ட பல எண்ணற்ற இதழ்களை நாம் குறிப்பிடலாம்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago