இந்தியா @ 75: சுதந்திர இந்தியாவும் ஜனநாயகத் திருவிழாவும் 

By செய்திப்பிரிவு

சுமார் 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் எத்தனையோ திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லது மதத்தினருக்கானது என்பதோடு முடிந்துவிடும். ஆனால், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு ஜனநாயகத் திருவிழா உண்டென்றால், அது தேர்தல்தான்.

உலகின் அனைத்து நாடுகளும் வியந்து பார்க்கும் மிக நீண்ட திருவிழாவாக இந்தியாவில் நடைபெறும் தேர்தல் திருவிழா பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்த அறவிப்பு வெளியான நாள் தொடங்கி, வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கும் நாள் வரை, இந்தியா முழுக்க மக்களின் கொண்டாட்டங்களைப் பார்க்க முடியும்.

எங்கு பார்த்தாலும் விதவிதமான தோரணங்கள், பல வண்ணங்களால் ஆன கொடிகள், அலைகடலென திரண்டிருக்கும் மக்கள் கூட்டம், மேடைகள், ஒலிப்பெருக்கிகள், பூக்கள், பட்டாசு, இனிப்புகள், பேரணி, போக்குவரத்து நெரிசல், போலீஸ் பாதுகாப்பு, வார்த்தைப் போர்கள், அடிதடி சண்டைகள் என களைகட்டும் தேர்தல் திருவிழாவின் உற்சாகம் நாள்தோறும் காணப்படும்.

நாடு சுதந்திரம் பெற்று 1951-ம் ஆண்டில் நடந்த முதல் தேர்தல் தொடங்கி, 2019-ம் ஆண்டு நடந்துமுடிந்த 17-வது பொதுத் தேர்தல் வரை இந்திய தேர்தல்கள் பல்வேறு சவால்களையும் சாதனைகளையும் படைத்துள்ளது. மொத்தமுள்ள சுமார் 130 கோடி பேரில் 90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதாவது 69.23 சதவீத குடிமக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.

முதல் தேர்தலின்போது 35.66 கோடியாக இருந்த மக்கள் தொகையில் 48.56 சதவீதம் பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர். 1951-52 இல் நடந்த அத்தேர்தலில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்டிருந்தது. 1951-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வரை 68 கட்டங்களாக 4 மாதங்கள் நாட்டின் முதல் தேர்தல் நடந்துள்ளது.

இன்றைக்கு நாட்டில் இந்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, 2354 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. 1951-52 இல் நடந்த முதல் தேர்தலில் 53 கட்சிகள் போட்டியிட்டன. இத்தேர்தலில் 45.7 சதவீத வாக்குகள் பதிவாகின. நாட்டின் முதன்முதலாக நடந்த தேர்தல் காங்கிரஸ் கட்சி 44.99 வாக்கு சதவீதத்துடன் 364 இடங்களில் வெற்றிபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், பாரதிய ஜன சங்கம் 3 இடங்களிலும் சுயேட்சைகள் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

543 பேர் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, நடந்து முடிந்த 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த 10 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் 30 லட்சத்து 70 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். இத்தேர்தலில் 67 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தது.

இன்று தேர்தல் திருவிழா முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாகிவிட்டது. தெருமுனைப் பிரச்சாரக் களங்கள் டிஜிட்டல் தொடு திரைகளாக மாறியுள்ளன. இந்த மாற்றங்கள் மக்களை எளிதில் சென்றடைய உதவுகின்றன. ஒரே நேரத்தில், கோடிக்கணக்கான மக்களின் கையடக்க செல்போன் திரைகளில் தோன்றி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகப் பக்கங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகில் பல நாடுகள் வெகு காலதாமதமாகவே தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமைகளை வழங்கின. ஆனால், சுதந்திரம் அடைந்த 4 ஆண்டுகளில், 21 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குரிமை பின்னர், 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாற்றப்பட்டது.

இந்தியாவில் உள்ள சாதி, மதம், மொழி, இனம், இருப்பிடம், தொழில், உள்ளிட்ட பாகுபாடுகளின்றி, குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மந்திரக்கோலாக வாக்குரிமை பார்க்கப்படுவதால்தான், இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா இத்தனை கோலகலமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE