"கல்தோன்றி மண்தோன்ற காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி" என்ற வழக்கு ஒன்று உள்ளது. பகுத்தறவின் பக்கம் நின்று யோசித்தால் இது கொஞ்சம் மிகையாகத் தோன்றலாம். ஆனால் அதன் மறைபொருளை நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாகவும் காலம்தோறும் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் பண்பாட்டை கொண்டதாகவும் திகழ்கிறது தமிழ் கலாசாரம். இதற்கு இந்த மொழியில் மக்களின் வாழ்க்கையில் விரவிக்கிடக்கும் வழக்காறுகளும், மாற்றங்களுமே சாட்சி.
தொன்மையும் புதுமையை ஏற்றுக்கொள்ளும் பாங்கும் எல்லா நிலைகளிலும் தமிழகத்தை இந்திய துணைக்கண்டத்தின் மற்ற மாநிலங்களில் இருந்து ஒரு அடி முன்னோக்கியே வைத்திருந்து. அந்த முன்னத்தி ஏர்சால் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் வெளிப்பட்டது. வாணிபம் செய்ய வந்த ஐரோப்பியர்கள் மெள்ள நம்மை ஆளத்தொடங்கி நாடுபிடிக்க ஆரம்பித்து, ஆட்சி செய்யத் தொடங்கிய போது, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் எழுந்தது தென்னகத்தில் இருந்துதான்.
வெறும் குரல் எழுப்பியதோடு மட்டும் இல்லாமல் அதனை முன்னெடுத்தும் சென்றது. அதனையும் காலத்திற்கு ஏற்பச் செய்தது. நாட்டை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷாரை எதிர்த்து போர் புரிந்து பிரங்கி குண்டுகளுக்கும், துப்பாக்கி ரவைகளுக்கும் மாண்டு வீரமரணம் அடைந்து கொண்டிருந்த போது, பிரிட்டிஷாரின் ஆயுதக் கிடங்குகளை அழித்தது, அரசியல் பலி கொண்டது, பொருளாதார நெருக்கடி கொடுத்தது என அந்தப் புரட்சியின் முன்னெடுப்புகள் நீண்டன.
ஆயுதக் கிடங்கை அழித்தொழித்த வீரன் சுந்தரலிங்கம் - வடிவு இணை
வாணிபம் செய்ய வந்த பிரிட்டிஷ்காரர்கள் வலுவாக காலுன்றி ஆட்சி புரிய தொடங்கியிருந்த நேரம். ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்த இந்திய மன்னர்களிடம் வரி வசூலிக்கத் தொடங்கினர். அதற்கு முதல் எதிப்புக்குரல் தென்னகத்தில் இருந்துதான் எழுந்தது. பூலித்தேவன், கட்டபொம்மன் என வரி கொடுக்க மறுத்து உரிமைக் குரல் எழுப்பினர்.
கலகம் செய்த பாளையக்காரர்களை பணியவைக்க பிரிட்டிஷார் பாளையங்கள் மீது படையெடுத்தனர். வரி கொடுக்க மறுத்த பாஞ்சலங்குறிச்சி மன்னன் கட்டப்பொம்மனை பணியவைக்க வெள்ளையார் படை 1799-ல் பாஞ்சலங்குறிச்சி மீது போர் தொடுத்தது. வெற்றிவேல்... வீரவேல்... என்று மண்ணின் மைந்தர்களும்... துப்பாக்கியும் பிரங்கியுமாக பரங்கியர் படையும் களம் கண்டன. பொட்டல் காடு கற்றுத் தந்த வீரமும் வழிவழியாய் வந்த மரபின் தொடர்ச்சியும் பாஞ்சாலங்குறிச்சி தளபதி வீரன் சுந்தரலிங்கத்தை எதிரியின் பலத்தை அறியத் தூண்டியது. நம்மவர்கள் வீரத்தில் சளைத்தவர்கள் இல்லையென்றாலும் நவீன ஆயுதங்களுக்கு முன் ஈடுகொடுப்பது கஷ்டமே... அதனால் எதிரிகளின் ஆயுதங்களை நிர்மூலமாக்க திட்மிட்டார் தளபதி சுந்தரலிங்கம். போர்வீரனாய் அவர் எடுத்த முடிவுக்கு பக்கபலமாய் நின்றால் சுந்தரலிங்கத்தின் முறைப்பெண் வடிவு.
1799-ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி... வெள்ளையர்களுக்கு வழக்கமான ஒரு நாளாய் இருக்கவில்லை. அன்று தங்களின் திட்டத்தை செயல்படுத்த சுந்தரலிங்கமும் வடிவும் மேய்ப்பர்கள் போல ஆடுகளை ஓட்டிக்கொண்டு கவர்னர்கிரியிலிருந்து கிளம்பினர். ஆட்டுக்கூட்டம் வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கை நோக்கியே போனது. ஆட்டுக்கூட்டம் ஒன்று ஆயுத கிடங்கை நோக்கி வருவதை பார்த்த வெள்ளையர்கள் நடப்பதை யுகிப்பதற்குள் பந்தத்தைக் கொளுத்திக் கொண்டு வடிவும் சுந்தரலிங்கமும் நேராக ஆயுதக்கிடங்கிற்குள் நுழைந்து மனிதவெடிகுண்டாகி வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கை தரைமட்டமாக்கி இன்னுயிர் ஈந்து தியாகியானார்கள்.
நள்ளிரவு புரட்சி: முதல் சுதந்திர போராய் இந்திய வரலாறு ஆவணப்படுத்தும் சிப்பாய் கலகம் நடப்பதற்கு அரைநூற்றாண்டுக்கு முன்பே வேலூரில் அதேபோல ஒரு புரட்சி நடந்தது. திப்புசுல்தானின் வாரிசுகளும் உறவினர்களும் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த நேரம் அது. அவர்களை மீட்டு மீண்டும் அரியணை ஏற்ற திப்புவின் விசுவாசிகள் முயன்றனர். அதற்காக வெள்ளையரின் படைகளில் இருந்த இந்திய சிப்பாய்களின் உதவியை நாடினர். வெள்ளையர்கள் தங்களின் படைகளில் புதிதாக அறிமுகப்படுத்திய தோல் தொப்பியும், தலைமுடி, மீசை திருத்த வேண்டும் போன்ற ராணுவக் கட்டுப்பாடும் இந்திய சிப்பாய்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட அவர்கள் வெள்ளையர்களை எதிர்க்க துணிந்தனர்.
திட்டமிட்டபடி1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி இரவு இரண்டு மணிக்கு வேலூர் கோட்டையில் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையில் அணிவகுத்து ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். கோட்டையில் இருந்த ஓரிரு ஆங்கிலேய அதிகாரிகள் மட்டுமே உயிர் தப்பினர். கோட்டை சிப்பாய்கள் வசமானது. சிப்பாய்களின் வெற்றிக் கொண்டாட்டத்தாலும் கவனச் சிதறலாலும் கோட்டைக்கு வெளியில் இருந்து உதவி வர கோட்டை மீண்டும் ஆங்கிலேயர் வசமானது பெரும் சோகமே.
முதல் அரசியல் பலி
ஆயுதக்கிடங்கை அழித்து, கோட்டையை கைபற்றிய எதிர்ப்பு கலாச்சாரம் அக்கினி குஞ்சாய் இந்த மண்ணின் மக்களின் மனங்களில் கனன்று கொண்டே இருந்தது தனக்கான சரியான தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தது. இந்தமுறை எதிர்ப்புக் குரல் அரசியல் படுகொலையாய் வடிவெடுத்திருந்தது. அதனை நிகழ்த்தியவர் வாஞ்சிநாதன், பலியானவர் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ்.
1911-ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி காலைப்பொழுது, மணி 6.30. கொடைக்கானல் செல்வதற்காக அங்கு நின்று கொண்டிருந்த ரயிலின் முதல்வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தார் கலெக்டர் ஆஷ். அவரது மனைவி வெளியே நிற்க அவரது மெய்காவல் தண்ணீர் பிடிக்க சென்றிருந்த அந்த வேளையில் ஒரு இந்திய இளைஞன் அவர் முன் தோன்றினான். அவர்தான் ஆஷ் என்பதை உறுதி செய்த அடுத்த நெடு இளைஞன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஆஷை சுட்டுகொன்று விட்டு, அங்கிருந்து தப்பி ரயில் நிலைய கழிவறை ஒன்றில் தன்னைத் தானே சுட்டுக்கொன்று இறந்து போனான். அடிமை என்று நினைப்பவர்கள் வெகுண்டெழுந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு புதிய கதை எழுதியிருந்த அந்த இளைஞனின் பெயர் வாஞ்சிநாதன்.
கப்பலோட்டி எதிப்பு:
காலந்தோறும் ஆங்கிலேயருக்கு அடங்க மறுத்து வந்தது தென்னகம். காலம் மாற மாற தனது எதிர்ப்பின் வடிவத்தையும் அது மாற்றியே வந்திருக்கிறது. அரசியல் பலி கொண்ட மண் அடுத்து பொருளாதார ரீதியாகவும் அடிக்கத் தயாரானது. மகஜர் கொடுத்து குறைகளைச் சொல்லி வேண்டியதை கேட்டுபெற்றுக் கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்திய சுதந்திர வரலாற்றில் வாணிபம் செய்ய வந்து நம்மை அடிமைப்படுத்தி, இந்தியாவை தங்களின் சந்தையாய் வைத்திருக்கும் வெள்ளையர்களை வணிக ரீதியாகவே திருப்பி அடிக்க நினைத்தார் ஒரு தமிழன். விளைவு இந்தியப் பெருங்கடலில், இந்தியா - இலங்கை வர்த்தகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனிக்கு எதிராக உருவானது சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி. அதனை உருவாக்கியவர் கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார்.
தங்களுக்குப் போட்டியாய் ஒரு இந்தியன் களமிறங்குவதை விரும்பாத வெள்ளையர் நிர்வாகம் இன்னல் பல கொடுத்தும் எதற்கும் அசைந்து கொடுக்காமல், சொந்தமாய் இரண்டு கப்பல்களை வாங்கி வங்கக்கடல் மீது மிதக்க விட்டார் வஉசி. எல்லா முன்னெடுப்புகளும் சரிவைக் காண்பது போல வஉசியின் முன்னெடுப்பும் அவர் காலத்திலேயே கரைந்து போனது பெரும் சோகமே!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 hours ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago