சுதந்திரத்திற்கு முன்பு அடிப்படை வசதிகளே இல்லாமல் திணறிய நாம் இன்றைய சுதந்திர இந்தியாவில் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சிகள், வாய்ப்புகள், உயர்வுகள் ஏராளம். சுதந்திரக் காற்றை சுகமாக அனுபவிக்கும் நாம், அது எப்படி கிடைத்தது என்று நம்மில் பெரும்பாலோருக்கு, நமது பெரியோர்கள் நமக்கு ஓரளவு சொல்லித் தந்தனர்.
அதேவேளையில், சினிமா எனும் மாயத்திரை நாம் அன்று அதற்காக போராடியவர்கள் பட்ட துயரங்கள் பற்றி நடத்திய பாடம் பசுமரத்தாணியாக நம் நெஞ்சில் தங்கிவிட்டது. அதற்குக் காரணம் சிவாஜி கணேசன். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை குறிப்பாக தமிழக விடுதலை வீரர்களை நம் கண்முன் நிறுத்தி சிவாஜி கணேசன் எனும் கலைத்தாயின் தவப்புதல்வன் நடத்திய சாகசங்கள் ஏராளம். அவர் தனது நடிப்பில் சமூகப் பிரச்சினைகள், தனிமனித உள்ளுணர்வுகள், காதல் அழகியல் உணர்வுகள், புராண கதையம்சங்கள் என பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்திய தேசிய விடுதலையைப் பேசிய படங்களில்தான் அவரது புகழ் உலக அளவில் பேசப்பட்டது.
சிவாஜியின் பூர்வீகம் தஞ்சை. விழுப்புரத்தில் ரயில்வே அதிகாரியாக தந்தை பணியாற்றியதால் அவரது நிழலில் வளர்ந்த இடம் விழுப்புரம். அதனாலேயே விழுப்புரத்தில் 7 வயதிலேயே நாடகத்தில் சேர்ந்து சென்னை உள்ளிட்ட பல இடங்களில் 17 ஆண்டுகள் நாடங்களில் நடித்து புகழ்பெற்ற பிறகுகூட விழுப்புரம் சின்னையாபிள்ளை கணேசன் என்றே அறியப்பட்டார். அண்ணாவின் 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற நாடகத்தில் அவரது கம்பீர நடிப்பைக் கண்ட தந்தை பெரியார் அவரை சிவாஜி கணேசன் என்றே அழைக்க அதுவே என்றென்றும் நிலைத்துவிட்டது. தன் வீட்டிற்கு விருந்தினராக அழைத்த ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ கூட Welcome Sivaji என்றே அழைத்தார்.
சிவாஜி கணேசன் நடிப்பை சிலர் மிகை நடிப்பு ஓவர் ஆக்டிங் என்றெல்லாம் சொல்கிறார்கள்... கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் விஞ்ச் துரையிடம் விவாதம் செய்யும் இடங்களில் வ.உ.சி உணர்ச்சி பொங்க பேசியது குறித்து பாரதியார் தனிப்பாடல்களே இயற்றியுள்ளார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அந்நிய துணிகளை பகிழ்காரம் செய்த காலம் அது. தாய்மாமன் அன்பளிப்பாக அளித்த தன் குழந்தை புதியதாக அணிந்திருந்த சீனப் பட்டுத்துணியையே குடும்பத்தினர் வருந்திய நிலையிலும் அந்நிய துணியென்று தீயிட்டுக் கொளுத்தியவர் வ.உ.சி. இதை சிவாஜி கணேசன் நடிப்பில் பார்க்க வேண்டும். தேசத்திற்காக தங்கள் வாழ்க்கையையே லட்சியத்தையே உயிரையே அர்ப்பணித்தவர்கள் எப்படி நடந்துகொள்வார்களோ அதைத்தான் சிவாஜி வெளிப்படுத்தினார். மனிதர்கள் உணர்ச்சி வயப்படுவது இயல்பு.
கைகொடுத்த தெய்வம் படத்தில் ''சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்நாட்டிளம் பெண்களுடனே'' என்ற பாடலை சென்னைத் தொலைக்காட்சி ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் அடிக்கடி ஒளிபரப்பியபோதுதான் ''பாரதியை நம் வீட்டுக்கே சிவாஜி கணேசன் அழைத்துவிட்டார்'' என்று பேசிக்கொண்டார்கள். அப்பாடலில் அவர் முகத்தில் காட்டிய நவரசங்களும் பாரதியார் உயிரோடிருந்தால் எண்ணிஎண்ணி மகிழ்ந்திருப்பார்.
உலகப் புகழ்பெற்ற இயக்குநரான அகிரா குரோசோவாவின் ரஷோமான் உள்ளிட்ட முக்கிய படங்களின் நாயகன் முஃப்னே-வின்
(Toshiro Mifune) நடிப்பு எவ்வளவு உணர்ச்சிக்கொந்தளிப்பானது என்பதை அவரது படங்களை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார் ரூசோ.
வீரபாண்டிய கட்டபொம்மனில் கலெக்டர் லூஷிங்டன் கட்டபொம்மனை பேட்டி காண அழைக்கிறார். அங்கே ''ஆற்காடு நவாபுகளிடமிருந்து நாங்கள் நாட்டை வாங்கிவிட்டோம்'' ஏன் இன்னும் வரி கட்டவில்லை என கேட்கிறார். அதற்கு அப்படத்தில் சிவாஜி பேசும்வசனம் புகழ்பெற்றது. ''கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் திரை? '
இதை காட்சியாக மெருகேற்றவே கற்பனையான வீரவசனம் உருவாக்கப்பட்டது எனவும் கட்டபொம்மன் இப்படியெல்லாம் பேசியிருக்க வாய்ப்பில்லை எனவும் அரைகுறை ஆராய்ச்சியாளர்கள் பேசிவருகிறார்கள்.
அந்த ஆராய்ச்சியாளர்கள் கால்டுவெல் எழுதிய History of Tirunelvely என்ற புத்தகத்தைப் படிக்க வேண்டும். அதில் லூஷிங்டன் கடிதங்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மாமனா மச்சானா யாரை கேட்கிறாய் வரி என்பன உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு கட்டபொம்மன் பேசியவற்றை குறிப்பிடுகிறார். அதனை சிவாஜி கணேசன் பேசியதைப் பார்த்து தமிழகம் மட்டுமல்ல உலகமே வியந்தது. இப்படத்தின் நடிப்புக்காகத்தான் சிவாஜியை எகிப்து அதிபர் நாசர் கெய்ரோவுக்கு அழைத்து விருது, விருந்து அளித்தார். அமெரிக்காவின் நாயகரா நகரின் ஒருநாள் மேயராக கவுரவப் பதவியை அந்நாடு வழங்கியது. மார்லன் பிராண்டோ சிவாஜியிடம்.... ''படத்தில் மிகவும் உயரமாக தெரிகிறீர்களே என்று கேட்டாராம்.. அதற்கு சிவாஜி சொன்ன பதில் ''அதுநீங்கள் பார்த்தது வீரபாண்டிய கட்பொம்மனை'' என்றாராம்.
கட்டபொம்மன் தூக்கு மேடைக்கு உத்தரவிடப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். அப்போது ஒருவித புன்னகையோடு நடந்துசெல்லும்போது பாதையில் விழுந்து மக்கள் வணங்கும் காட்சி மிகமிக உணர்ச்சிமயமானது. அவரை பிடித்து நிற்கும் வீரர்களை விலக்கி, ''விலகிப்போங்கள், துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை'' என்றுகூறிவிட்டு தூக்குக் கயிறை முத்தமிட்டுவிட்டு உயிரைவிடுகிறார். மக்கள் அலைமோதி அவர் உயிரிழந்த இடத்தின் மண்ணை நெற்றிப்பொட்டாக இட்டுக்கொள்ளும் காட்சியில் கல்லும் கரைந்துருகி கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்கும்.
சிவாஜி கணேசன் நாடகத்திலிருந்து வந்ததாலோ என்னவோ சினிமாவினால் நாடகம் நலிந்துவருவதால் பாதிக்கப்படும் நடிப்புக் கலைஞனாகவே தோன்றியிருப்பார். இத் திரைப்படத்தில் நாடக மேடையில் நடிக்கும் போதே சுதந்திர தேசிய பாடல்களை பாடியே உயிரைவிட்ட விஸ்வநாத தாஸ் உள்ளிட்டவர்களின் கலைவாழ்க்கையை பேசியதோடு பகத் சிங், கொடி காத்த குமரன் முதலான தியாகிகளையும் நினைவுகூர்ந்தவிதத்திற்காகவே இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
எந்த தேச விடுதலை வீரர்களின் ரத்த வரலாற்றை தனது நடிப்பு சித்தரிப்பில் காட்டாற்று வெள்ளமாக பொங்கி பிரவகித்தாரோ அந்த நாட்டின் சிறந்த நடிகனுக்கான 'பாரத்' பட்டம் அவருக்கு வழங்கப்படவில்லை. இது அவருக்கு வலியைத் தந்ததோ இல்லையோ, கலைத்தாயின் தவப்புதல்வனின் வரலாற்றில் ஒரு தீராத வடுவாக ஆனது. நடிப்பு இமயத்தைக் கொண்டாடி மகிழ்ந்த தமிழகத்தின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு தீராத வருத்தமாக மாறியது. எனினும் இதை பின்னர் உணர்ந்துகொண்ட இந்திய சமுதாயம் திரைத்துறையினருக்காக வழங்கப்படும் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே''-வை சிவாஜி கணேசனுக்கு வழங்கி பழியிலிருந்து தப்பித்து தன்னை கவுரவப்படுத்திக்கொண்டது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago